அன்பிற்குரிய பெரியோர்களே! அறிஞர்களே! தமிழ் உறவுகளே! அனைவருக்கும் என் வணக்கம். இன்று நான் பேசவிருக்கும் தலைப்பு, பல நூற்றாண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்தாலும், தமிழியல் அடிப்படையில் மிகக் குறைவாக ஆராயப்பட்ட ஒரு தலைப்பு. அந்தத் தலைப்பு – "கடவுள்! தமிழ்ச்சொல் மட்டுமே." இந்த மேடையில் நான் எந்த மதத்தையும் விமர்சிக்க வரவில்லை. எந்த மதத்தின் நம்பிக்கையையும் புண்படுத்த வரவில்லை. மாறாக, தமிழ்முன்னோர் கடவுள் என்ற சொல்லில் பொதித்த பொருளை ஆராய்ந்து பேச வருகிறேன். நாம் பொதுவாக "கடவுள்" என்று சொன்னவுடன், ஒரு வழிபாட்டு உருவம் நம் நினைவுக்கு வருகிறது. ஆனால், அந்த எண்ணம் தமிழின் அடிப்படைப் பொருளா? அல்லது பின்னாளில் ஏற்பட்ட விளக்கமா? என்ற வினாவை முதலில் எழுப்ப வேண்டும். எனது ஆய்வின் அடிப்படையில், கடவுள் என்பது வழிபாட்டுப் பொருள் அல்ல; அது ஒரு ஆற்றல் மூலம். தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது ஆற்றல் மூலத்தின் பெயரே கடவுள். நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு ஆற்றல் மூலங்களை நாம் நேரடியாக உணர்கிறோம். அவற்றோடு இணைந்து செயல்படும் எல்லையற்ற வெளி, நமது இயக்கத்தைப் பெற்று நமக்கு முயக்கம் தரும் ஆற்றலாக விளங்குகிறது. அந்த ஆற்றலுக்குத் தமிழ்முன்னோர் வழங்கிய பெயரே கடவுள். ஆகவே, கடவுள் என்பது ஒருவருக்குச் சொந்தமானதல்ல. ஒரு மதத்திற்குச் சொந்தமானதல்ல. ஒரு இனத்திற்குச் சொந்தமானதல்ல. அது தமிழில் உருவான தனித்த கருத்தாக்கம். இப்படி நான் கருதுவதற்கு பேரளவான தரவுகள் தமிழ்ச்சொற்களில் குவிந்து கிடைக்கின்றன. நண்பர்களே! எனவே, அனைத்து விளைவுகளுக்கும் அதனதன் இயக்கத்தோடு, கடவுளின் முயக்கமும் இணைந்திருக்கிறது என்பதே என் கருத்து. நாம் நம் எண்ணத்தை நம் தேவைக்குச் செழுமைப்படுத்தினால், நம் செயலை நம் தேவைக்குச் செழுமைப்படுத்தினால், நம் மொழியை நம் தேவைக்குச் செழுமைப்படுத்தினால், நமக்குக் கிடைக்கும் முயக்கமும் நம்முன்னேற்றத்தேவைக்கான முழுமையான விளைவாக இருக்கும். இதனால்தான், மனிதன் தன் வாழ்க்கையில் வேண்டிய வெற்றியை, கடவுளிடம் கேட்டு பெற முடியும் என்று நான் கூறுகிறேன். ஆனால், அதற்கான வழி வெறும் வேண்டுதல் அல்ல. கேட்பது மந்திரம் நோற்பது தவம். நாம் என்ன வேண்டினோமோ அதற்குத் தேவையான தரவுகளைத் தொடர்ந்து குவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்தப் புரிதலைத் தமிழ்முன்னோர் நிறுவியதாக நான் கருதும் "மந்திரம்" என்னும் முன்னேற்றக் கலையின் மூலம் விளக்க முயல்கிறேன். எனவே, நண்பர்களே!
நாம் செய்கிற ஒவ்வொரு செயலும் ஒரு இயக்கம். நாம் சிந்திக்கும் ஒவ்வொரு எண்ணமும் ஒரு இயக்கம். நாம் பேசும் ஒவ்வொரு சொல்லும் ஒரு இயக்கம். இந்த இயக்கங்களுக்கெல்லாம் எதிர் இயக்கமாக நமக்கு முயக்கம் கிடைக்கிறது. அதனால்தான் வாழ்க்கையில் விளைவுகள் உருவாகின்றன.
இதிலிருந்து ஒரு முதன்மயான உண்மை வெளிப்படுகிறது.
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
"கடவுள்" என்ற சொல்லை மற்ற மொழிகளின் விளக்கங்களால் மட்டும் புரிந்துகொள்ள முயலாமல், தமிழின் சொற்பொருள், இலக்கணம், தமிழ்முன்னோர் சிந்தனை ஆகியவற்றின் என்கிற தமிழியல் அடிப்படையிலும் ஆய்வு செய்யுங்கள்.
ஆராயுங்கள். சிந்தியுங்கள். கேள்வி எழுப்புங்கள். தமிழின் ஆழத்தைத் தேடுங்கள்.
நன்றி.
கற்போம் தமிழை ஆழமாக! கட்டுவோம் தமிழியலை நிறைவாக.



