மூன்று முறை ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்யும் பழக்கத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சாயாரோ பானோ உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அவற்றுக்கு நடுவண் அரசின் கருத்தை உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது. அதை ஏற்று, நடுவண் சட்ட அமைச்சகம் சார்பில் அதன் கூடுதல் செயலாளர் முகுலிதா விஜயவர்கியா நேற்று 29 பக்க பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில்; தாக்கல் செய்தார். அதில், முஸ்லிம்களிடையே வழக்கத்தில் உள்ள ‘3 முறை தலாக்’ நடைமுறைக்கும், பலதார மணத்துக்கும் நடுவண் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் இவற்றுக்கு நடுவண் அரசு எதிர்ப்பு தெரிவிப்பது இதுவே முதல்முறை ஆகும். இந்திய அரசியல் சட்டம் பாலின சமத்துவத்தையும், மதச்சார்பின்மையையும் வலியுறுத்துகிறது. ஆண்-பெண் சமத்துவமும், பெண்களின் கண்ணியமும் விவாதத்துக்கு அப்பாற்பட்டவை. அதில் சமரசத்துக்கு இடமில்லை. ஆண்களின் பழக்கத்தால் பெண்கள் சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் எந்த நடைமுறையும் அரசியல் சட்டத்துக்கு முரணானது. பெண்களுக்கான சம உரிமையை மறுப்பதற்கு மதம் காரணமாக இருக்கலாமா என்ற அடிப்படை கேள்வியை நீதிமன்றம் தாம் தீர்மானிக்க வேண்டும். மேற்கண்ட அடிப்படையில், இந்த வழக்கத்தை நீதிமன்றம் மறுஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



