இரண்டு மாதமாக தூங்கும் பெண். புதுவகையான நோயாம் உலகில் 40 பேருக்கு இந்த நோய் உள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது. 14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொலம்பியாவைச் சேர்ந்த 17 அகவை இளம் பெண் சாரிக் தோகார். இவருக்கு ‘கிளெயின் லெவின்’ என்ற புதுவகை நோய் வந்துள்ளது. இந்த நோய் உள்ளவர்கள் தூங்கத் தொடங்கினால், ஆரியர்கள் தொல்கதையில் வரும் கும்பகர்ணன் மாதிரி பல நாட்கள் தூக்கத்திலேயே இருப்பார்கள். அவர்கள் முழித்து வேலை செய்ய தொடங்கினால் சில மணி நேரங்களிலேயே சோர்வாகி மீண்டும் தூங்கச் சென்று விடுவார்கள். உலகிலேயே இந்த நோய் 40 பேருக்குத் தான் உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதில் சாரிக் தோகரும் ஒருவர். இந்த நோய் உள்ளவர்களுக்கு அந்தந்த நாட்டு நலங்குத்துறை தேவையான உதவிகளைச் செய்து வருகிறது. கடும் தூக்கத்தில் இருக்கும் இவர்களுக்குப் பசி, தாகம் என எதுவுமே தெரியாது ஆனால் சரியான நேரத்திற்குச் சாப்பிடவில்லை என்றால் அவர்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படும். அதனால் அவர்கள் தூங்கும் நேரத்தில் உணவைத் திரவப்பொருளாக மாற்றி அவர்கள் உடலுக்குள் செலுத்துவார்கள். மேலும் உடலுக்குத் தேவையான நீரும் செயற்கையாக உடலுக்குள் செலுத்தப்படும் அப்பொழுதுதான் அவர்கள் உயிர் வாழ முடியும். இந்நிலையில் சாரிக் தோகருக்கு அந்நாட்டுச் நலங்குத்துறை சார்பில் திரவ உணவும், நரம்பியல் சிகிச்சையும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் திரவ உணவு கடந்த 2 மாதங்களாக வழங்கப்படவில்லை என தோகாரின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார். தோகருக்கு இருக்கும் இந்த புதுவகை நோய் உலகம் முழுவதும் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,322.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.