Show all

நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பு தாயைச் சந்தித்த நெகழ்ச்சி நிகழ்வு! தத்துக் கொடுத்த தாய் மணலியில்- மகன் டென்மார்க்கில்

இரண்டு அகவையில் டென்மார்க் இணையரால் தத்தெடுக்கப்பட்ட மகன், 40 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்து, தனது பெற்ற தாயை நேரில் சந்தித்த நெகிழ்ச்சி நிகழ்வு, மணலியில் மக்களைக் கூட வைத்தது.

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தஞ்சை அம்மாப்பேட்டையை சேர்ந்த கலியமூர்த்தி- தனலட்சுமி இணையர் சுமார் 41 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு குடிபெயர்ந்துள்ளனர். 

குடும்ப வறுமை காரணமாக அவர்கள் தனது மகன்களுடன் பல்லாவரத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் சில மாதங்கள் தங்கி இருந்துள்ளனர். ஆனால் மற்ற குழந்தைகள் இதை பார்த்து ஏக்கம் அடையும் என்பதால் அவர்கள் தமது மகன்கள் இருவரையும் காப்பகத்தில் விட்டுவிட்டு வெளியேறிவிட்டனர். 

இதற்கிடையில் தமிழகம் வந்த டென்மார்க்கை சேர்ந்த இணையர்கள், தனலட்சுமியின் மகன்களான டேவிட், ராஜன் இருவரையும் தத்தெடுத்துக்கொண்டு டென்மார்க் சென்றுவிட்டனர். சிலநாட்கள் கழித்து டேவிட்டின் புகைப்படத்தை தனியார் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் புகைப்படம் மட்டும் தனலட்சுமியிடம் இருந்தது.

நாற்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இரண்டு அகவையில் தாயைவிட்டு பிரிந்து, டென்மார்க் இணையர்களுடன் சென்ற டேவிட்டுக்கு தற்போது அகவை 42. இதற்கிடையில் ஆறு  ஆண்டுகளுக்கு முன்பு டேவிட், தனது பெற்றோரைத் தேடி தமிழகம் வந்தார். சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு தனியாக சென்று தேடியும் தாய்தந்தையரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

தனது சிறுஅகவையில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவர்களைக் கண்டுபிடிக்க உதவும்படி கேட்டுக்கொண்டார். இதை பார்த்த தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அருண் டோலே என்பவர் அவருக்கு உதவினார்.

கடந்த 6 ஆண்டுகளாக நடந்த பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகு தற்போது டேவிட்டின் தாயார் தனலட்சுமி மட்டும், மணலியில் ஒரு சிறு வீட்டில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ஒன்பது மாதங்களுக்கு முன்பு தனது தாயிடம் முதன்முறையாக காணொளி அழைப்பு மூலம் டேவிட் பேசினார்.

இந்தநிலையில் சனிக்கிழமை மாலை டேவிட், 40 ஆண்டுகளுக்கு பிறகு தனது பெற்ற தாயை நேரில் சந்திக்க சென்னை வந்தார். அவர், மணலிக்கு சென்று தனது தாயை நேரில் சந்தித்தார். இரண்டு அகவையில் தன்னை விட்டு பிரிந்து சென்று, 42 அகவையில் திரும்பி வந்த தனது மகனை கண்ட தனலட்சுமி, உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் விட்டு அழுதார்.

மகனை ஆரத்தழுவி முத்தமிட்டார். டேவிட்டும் தனது தாயை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். உணர்ச்சி மிகுந்த இந்தக் காட்சியை பார்த்த அங்கிருந்தவர்கள், நெகிழ்ச்சி அடைந்தனர்.


டென்மார்க் இணையருக்கு தத்துக்கொடுக்கப்பட்ட அவர்களது இரண்டாவது மகன் டேவிட், மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். தாம் தத்தெடுக்கப்பட்டது குறித்து அறிந்த டேவிட், தமது வளர்ப்பு பெற்றோரின் உதவியுடன் தனது அண்ணனைக் கண்டுபிடித்தார். இதனையடுத்து தனது பெற்றோரைத் தேடி அலைந்த டேவிட், சமூக செயற்பாட்டாளர்களின் உதவியோடு, டேவிட் தனது அம்மா தனலட்சுமியையும் கண்டுபிடித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,347.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.