வடபுல ஆரியர் மரபுரிமையருக்கானது என்று பேரளவினரான வரலாற்று ஆசிரியர்கள் ஒத்துக்கொள்ளும், இந்த (நவுரூஸ்) ஈரானியப் புத்தாண்டு இனிய நாள்மீது நட்புறவு பாராட்டுவோம் நாம். 07,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5124: நவுரூஸ் என்பது ஈரானியப் புத்தாண்டு ஆகும். இந்தச் சொல்லுக்கு புது நாள் என்று பொருள். இந்த புத்தாண்டு விழா கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. தற்காலத்திலும், தென்மேற்கு ஆசியா, நடு ஆசியா, காக்கேசியா, கருங்கடல், பால்கன் குடா பகுதிகளிலுள்ள ஈரானியரும் பிற மக்களும் கொண்டாடுகின்றனர். இந்த புத்தாண்டு மார்ச்சு இருபத்தொன்றாம் நாளோ அதற்கு முந்தைய நாளிலோ, அடுத்த நாளிலோ தொடங்கும். இப்புத்தாண்டின் முதல் நாள் கீழ்க்காணும் நாடுகளில் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான், ஆப்கானித்தான், அல்பேனியா, அசர்பைஜான், சியார்சியா ஈராக், கசக்கஸ்தான், கொசோவோ, கிர்கிசுத்தான், மங்கோலியா பயான், தாஜிக்ஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான். இப்புத்தாண்டின் முதல் நாளை விடுமுறை நாளாக அறிவிக்க கனேடிய பாராளுமன்றமும் சட்டமியற்றியுள்ளது. இந்த ஆண்டுக் கணக்கிற்கான இரானிய நாட்காட்டி ஈரான் தவிர ஆப்கானிஸ்தான் மற்றும் பிற இரானிய சமூகங்களிலும் கொண்டாடப்படுகிறது. இரானிய நாட்காட்டி காலநிலை மற்றும் சமய காரணங்களுக்காக பலமுறை மாற்றம் கண்டுள்ளது. இந்த நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டியின்படி மார்ச் 21க்கு ஒருநாள் அண்மையில் துவங்குகிறது. கிரெகொரியின் ஆண்டைக் காண இரானிய நாட்காட்டி நாளுடன் 621 அல்லது 622 (ஆண்டின் எப்பகுதியில் கணக்கிடப்படுகிறது என்பதைப் பொறுத்து) கூட்டவேண்டும். 'ஈரான்' என்னும் சொல் பாரசீக மொழியில் 'ஆரியரின் நிலம்' எனப் பொருள்படும். சசானியக் காலத்தில் இருந்தே உள்நாட்டில் புழக்கத்தில் இருந்த இப்பெயர், இந்திய விடுதலைக்குப் பத்தாண்டுகளுக்கு முன்னர்தாம் உலக அளவில் பயன்பாட்டுக்கு வந்தது. ஈரான் எனப் பொதுவாக அழைக்கப்படும் ஈரான் இசுலாமியக் குடியரசு மேற்காசியாவில் உள்ள ஒரு நாடாகும். ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்றவை இதன் அண்டை நாடுகளில் சில. இதன் தலைநகரம் தெஹ்ரான். இந்நாடு பண்டைக்காலத்தில் பாரசீகம் (பெர்சியா) என்று அழைக்கப்பட்டது. ஈரானில், பாரசீக, அஜர்பைஜான், குர்து (குர்திஸ்தான்) மற்றும் கிலாக்கில் முதன்மை இன குழுக்கள் உள்ளன. உலகின் 18 ஆவது பெரிய நாடாக விளங்கும் ஈரான், ஏழுகோடியே எண்பத்து நான்கு இலட்சம் மக்கள்தொகையைக் கொண்டது. ஈரானின் அமைவிடம் ஆசியாவின் மேற்கு, நடு, தெற்கு ஆகிய பகுதிகளுடன் தொடர்பு கொண்டிருப்பதனால், இந்நாட்டுக்குக் குறிப்பான ஒரு புவியியல்சார் அரசியல் முதன்;தைத்துவம் உண்டு. ஈரானின் வடக்கு எல்லையில், ஆர்மேனியா, அசர்பைசான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. ஈரான் உள்நாட்டுக் கடலான கசுப்பியன் கடலோரமாக அமைந்திருப்பதால், கசாக்சுத்தான், உருசியா என்பனவும் இதற்கு நேரடி அயல் நாடுகளாக இருக்கின்றன. ஈரானின் கிழக்கு எல்லையில் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் என்பனவும், தெற்கில் பாரசீகக் கடல், ஒமான் வளைகுடா என்பனவும், மேற்கில் இராக்கும், வடமேற்கில் துருக்கியும் அமைந்துள்ளன. தலைநகரான தெஹ்ரான் நாட்டின் மிகப் பெரிய நகரமாக உள்ளதுடன், நாட்டின் அரசியல், பண்பாட்டு, வணிக மற்றும் கைத்தொழில் மையமாகவும் விளங்குகிறது. பெட்ரோலியம், இயற்கை வாயு ஆகியவற்றின் பெருமளவு இருப்புக் காரணமாக அனைத்துலக ஆற்றல் பாதுகாப்பு, உலகப் பொருளாதாரம் ஆகியவை தொடர்பில் முதன்மையான இடத்தையும் வகிக்கிறது ஈரான். உலகின் இரண்டாவது பெரிய உறுதிசெய்யப்பட்ட இயற்கைவாயு இருப்பும், நான்காவது பெரிய பெட்ரோலிய இருப்பும் ஈரானிலேயே உள்ளன. கிபி 651ல் முஸ்லிம்கள் ஈரானைக் கைப்பற்றினர். பின்னர் இஸ்லாமிய வம்சங்களும், பேரரசுகளும், பாரசீக மொழியையும், பண்பாட்டையும் ஈரானியச் சமவெளி முழுவதும் விரிவடையச் செய்தன. பாரசீக இலக்கியம், மெய்யியல், மருத்துவம், வானியல், கணிதம், கலை என்பன இஸ்லாமிய நாகரிகத்தின் முதன்மைக் கூறுகளாயின. தொடர்ந்த நூற்றாண்டுகளில் அந்நியர் ஆட்சி நிலவியபோதும் ஈரானிய அடையாளம் தொடர்ந்து இருந்தது. 1906ல் இடம்பெற்ற பாரசீக அரசியலமைப்புசார் புரட்சி மூலம், அரசியல் சட்ட முடியாட்சிக்கு உட்பட்டு நாட்டின் முதலாவது நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டது. 1953ல், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளால் தூண்டப்பட்ட ஒரு சதிப்புரட்சியைத் தொடர்ந்து படிப்படியாக ஈரான் ஒரு தன்னிச்சையான ஆட்சி கொண்ட ஒரு நாடாக உருவானது. அந்நியச் செல்வாக்கோடு, வளர்ந்து வந்த முரண்பாடுகள், இசுலாமியப் புரட்சிக்கு வித்திட்டு, 1 ஏப்ரல் 1979 அன்று ஒரு இசுலாமியக் குடியரசு உருவாகக் காரணம் ஆயின. ஐக்கிய நாடுகள் அவை, அணிசேரா இயக்கம், இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு, ஒப்பெக் ஆகியவற்றின் தொடக்க உறுப்பினராக ஈரான் உள்ளது. 1979 ஆம் ஆண்டின் அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஈரானின் அரசியல் முறைமை, ஒன்றுக்கொன்று சிக்கலான தொடர்புகளைக் கொண்ட ஆட்சி அமைப்புக்களைக் கொண்டது. ஈரானின் மிக உயர்ந்த ஆட்சியதிகாரி, உச்சநிலைத் தலைவர் ஆவார். சியா இசுலாம் நாட்டின் அதிகாரப்பாட்டு மதம். அதன் அலுவல் மொழி பாரசீகம். மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சசானியக் கல்வெட்டில் ஈரானைக் குறிக்க 'ஏரான்' என்னும் சொல் பயன்பட்டுள்ளது. இத்துடன் சேர்ந்திருந்த பார்த்தியக் கல்வெட்டில் ஈரானியர்களைக் குறிக்க 'அர்யான்' என்னும் பார்த்தியச் சொல் பயன்பட்டுள்ளது. உலகிலேயே, நகர மக்கள்தொகை பெருக்க விகிதம் அதிகமாக காணப்படும் நாடுகளில் ஈரானும் ஒன்று. 1950ஆம் ஆண்டிலிருந்து 2002-ஆண்டு வரை நகர மக்கள் தொகை விகிதமானது 27 விழுக்காட்டில் இருந்து 60 விழுக்காடாக உயர்ந்தது. கைபர், போலன் என்கிற இமயக் கணவாய்கள் வழியாக இந்திய வந்ததாக வரலாறு பேசும், இந்தியாவின் வடபுலத்தில் குடியேறிய ஆரியர்கள், இங்கிருந்துதான் கிளம்பினார்கள் என்று பேரளவான வரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். வடபுல ஆரியர் மரபுரிமையருக்கான, இந்த இனிய நாள்மீது நட்புறவு பாராட்டுவோம் நாம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,559.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.