கீச்சுவில் தலைவர்65- இந்திய அளவில் கடந்து, உலக அளவில் தலைப்பாகி வருகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபகாரனுக்கு 65-வது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது வாழ்வே தங்களது கொள்கை சாசனம் என அறிக்கை வெளியிட்டுள்ளார். மே பதினேழு இயக்கம் நாளை மறுநாள் வள்ளுவர் கோட்டத்தில் விழா எடுக்கிறது. 10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிரபாகரன் பிறந்த நாளில் சீமான் அறிக்கை: ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழ்த்தேசிய இனத்தின் உயிராக, உணர்வாக, அறிவாக, ஆற்றலாக, முகமாக முகவரியாக விளங்குகிற நமது தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் வே.பிரபாகரனின் 65 ஆவது பிறந்த நாள் வாழ்த்துகளை உலகம் முழுக்கப் பரந்து வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளிடத்தில் பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியும், அளப்பெரிய பெருமிதமும் அடைகிறேன். அடிமைத்தனத்திற்கெதிரான உலகப் போராட்டக்களங்களில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மண்ணையும், மக்களையும் காப்பாற்றுகிற வீரர்களாக வாழ்ந்துக் காட்டி மறைந்திருக்கிறார்கள். வரலாற்றின் வீதிகளில் வீழ்த்தப்பட்ட இனத்தின் அடிமை விலங்கினைத் தகர்க்க எத்தனையோ தலைவர்கள் தோன்றியிருக்கிறார்கள். காலங்காலமாய்க் கண்ணீர் சிந்தும் மக்களின் வேதனையைப் போக்கி, மதிப்புறு வாழ்வு ஒன்றுக்காகத் தன் வாழ்வையே முன்னிறுத்திப் போராடிய எத்தனையோ அதிமனிதர்கள் இந்த உலகில் தோன்றியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாவரையும் காட்டிலும் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டுத் தலைவனாக, எக்குறையும் சொல்ல இயலா சான்றோனாக பிரபாகரன் திகழ்ந்தார்கள். நம்மினத்தைக் கொன்றொழித்த சிங்களர்களால் கூடக் குற்றஞ்சாட்டவோ, களங்கம் கற்பிக்கவோ முடியாத அளவுக்குக் காவியங்களில் மட்டுமே நாம் பார்த்த ஓர் அதிஉன்னதப் சான்றாண்மை வாழ்வை நம் கண்முன்னே வாழ்ந்த வரலாற்று பெருந்தலைவன் பிரபாகரன். மறம் காட்டி நின்றாலும் இறுதிவரை களத்திலே அறம் போற்ற நின்றார் அவர். அடிமைத்தேசிய இனத்தின் விடுதலைக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து இந்தப் பூவிப்பந்தில் தமிழர்களுக்கென்று ஒரு தேசம் படைக்க, சிங்கள இனவாத அரசிடம் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழர்களின் தாய் நிலத்தை மீட்டெடுக்கத் துப்பாக்கி ஏந்தி துணிந்து நின்றார். ‘விடுதலை என்பது விற்பனைப் பண்டம் அல்ல. அது உயிரையே விலையாகத் தந்து போராடிப் பெறுகிற புனித உரிமை”, என்பதைத் தெளிவாக உணர்ந்து, ‘உயிர் உன்னதமானது; ஆனால், அதனினும் உன்னதமானது எமது உரிமை; விடுதலை; கௌரவம்” என வீரமுழக்கமிட்டு, உயிரை ஒரு குப்பியில் அடைத்து தன் கழுத்திலேயே தொங்கவிட்டு, விடுதலைத்தாகம் கொண்டு விண்ணுக்கும் மண்ணுக்குமாக, கடலுக்கும், கரைக்குமாக ஆறு படைகள் கட்டிக் களத்தில் பாய்ந்து, உலகமே ஒற்றை அணியில் தனக்கு எதிராய் நின்றாலும் அதனை எதிர்த்து உள்ளம் தளராது, தாய் மண்ணின் விடுதலைக்காகத் தன்னலமற்றுக் களத்தில் நின்ற ஒப்பற்ற மாவீரன் பிரபாகரன். போர் வெறியர் அல்லர் உலகமே தனது வீரத்தைக் கொண்டாடினாலும் தன்னை மாவீரன் என விளிக்க ஒருபோதும் அவர் விரும்பியதுமில்லை; அதனை அனுமதித்ததுமில்லை. களத்தில் வீரவிதைகளாக விழுந்த விடுதலைப்போராளிகளையே மாவீரர்கள் என்றார். உலக வரலாற்றில் எந்நாட்டின் துணையுமில்லாமல், எவரது உதவியுமில்லாமல் தன் சொந்த நாட்டு மக்களையே ஒரு படையாகக் கட்டி, இராணுவமாகத் திரட்டி அவர்களுக்குப் பயிற்சியும், போர்த்திறனும் போதித்து உலக வல்லாதிக்கங்களை எதிர்த்து விடுதலைப்போர் புரிந்த உலகின் ஒரே புரட்சியாளர் பிரபாகரன் மட்டும்தான். அவர் ஆயுதங்கள் மீதும், இராணுவ பலத்தின் மீதும் தீரா காதல் கொண்ட வன்முறையாளரும் அல்லர்; போர்வெறியரும் அல்லர். என்று தமிழினத்தலைவனை வணங்குகிறது அறிக்கை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,348.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.