Show all

வணக்கம்! தமிழ்ப்பெருமகனாரை அதிபர் ஆக்கி மகிழும் சிங்கப்பூர் மண்ணுக்கும் மக்களுக்கும்

வணங்கி மகிழ்கிறோம்! தமிழ்ப்பெருமகனாரை அதிபர் ஆக்கி கொண்டாடும் சிங்கப்பூர் மண்ணையும் மக்களையும். சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் மரபினரான தர்மன் சண்முக ரத்னத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

18,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5125.

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் மரபினரான தர்மன் சண்முக ரத்னத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முக ரத்னத்துக்கு எனது வாழ்த்துகள். அவரது தமிழ் மரபும், அசர வைக்கும் தகுதிகளும் நம்மை பெருமை கொள்ளச் செய்வதோடு, சிங்கப்பூரின் பன்முகத் தன்மையையும் வெளிக்காட்டுகிறது. அவரது பதவிக்காலம் வெற்றிகரமானதாக அமைந்திட விழைகிறேன். 

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: பெருமை மிக்க சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முக ரத்னத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவரது தலைமையில் சிங்கப்பூர் மென் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: சிங்கப்பூர் அதிபருக்கான தேர்தலில் 70 விழுக்காடு வாக்குகளை பெற்று, அபார வெற்றி பெற்றுள்ள தமிழ் மரபினர் தர்மன் சண்முகரத்னத்துக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். அவரது பணி சிறக்க நல்வாழ்த்துகள்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: உலக அரங்கில் ஒருசிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் சிங்கப்பூர் அரசுக்கு, ஒரு தமிழர்மீண்டும் அதிபராக வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு எனது வாழ்த்துகள்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, தமிழர் தர்மன் சண்முக ரத்னத்துக்கு வாழ்த்துகள். அமெரிக்கா, இங்கிலாந்தை தொடர்ந்து சிங்கப்பூரிலும் இந்திய வம்சாவளியினர் நாட்டின் மிகப்பெரும் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமையான தருணமாகும்.

அமமுக பொதுச் செயலாளர் தினகரன்: தலைமை அமைச்சரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணைத் தலைமைஅமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்த தர்மன் சண்முக ரத்தினம், தற்போது மதிப்பு மிக்க சிங்கப்பூரின் அதிபர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

வி.கே.சசிகலா: சிங்கப்பூர் நாட்டின் ஒன்பதாவது அதிபராக தமிழர் தர்மன்சண்முகரத்னம் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகள். 

பாவலர் வைரமுத்து:
சிங்கப்பூர் அதிபராய்ப்
பெருவெற்றி பெற்றிருக்கும்
தர்மன் சண்முகரத்தினத்துக்கு
எங்கள் வணக்கமும் வாழ்த்தும்

எஸ்.ஆர்.நாதனுக்குப் பிறகு
அதிபராகி இருக்கும்
இன்னொரு தமிழர் என்பதில்
பெருமையடைகிறோம் 

அமைச்சராய்
துணைப் பிரதமராய் இருந்து
நிர்வாகத்தில் நேர்த்தியும்
கீர்த்தியும் காட்டிய பெருமகன்
சிங்கப்பூரின் ரத்தினமாய்த்
திகழ்வார் என்று நம்புகிறோம்

சிங்கப்பூர் வளர்க
அதிபர் வாழ்க!
இவ்வாறு தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலரும் தமிழ்அதிபர் பெருமகனாருக்கு தங்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,726.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.