ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாகக் கைப்பற்றியுள்ள நிலையில், அப்படியானால் வல்லமை மிக்க அமெரிக்காவை இருபது ஆண்டுகள் தாலிபான்கள் எதிர்த்து நின்றது எப்படி? என்ற கேள்விக்கு இப்படி ஒரு விடை செய்தியாக்கப்பட்டிருக்கிறது. 17,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்த தாலிபன்கள், இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கன் தலைநகர் காபூலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால், அமெரிக்க வரலாறு கண்ட மிக நீண்ட யுத்தம் ஆப்கனில்தான் அமைந்தது. மொத்தம் 20 ஆண்டுகள். அமெரிக்க படைத்துறை அங்கேயே முகாமிட தேவை ஏற்பட்டது. அமெரிக்காவை விஞ்சி மற்றும் அமெரிக்காவிடமிருந்து 80 பில்லியன் டாலர் மதிப்புள்ள உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளைப் பெற்ற ஆப்கானிஸ்தான் படைத்துறையைத் தோற்கடித்த போராடும் சக்தியாக தாலிபான்களை ஆக்கியது எது? கிட்டத்தட்ட வரம்பற்ற செல்வம், உபகரணங்களை கொண்ட அமெரிக்கா போன்ற ஒரு எதிரியுடன் 20 ஆண்டு கால யுத்தத்தில் தங்களைத் தக்கவைத்துக்கொள்ள தாலிபான்களால் எப்படி முடிந்தது. அதற்கான நிதியை அவர்கள் எங்கிருந்து பெற்றனர்? கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ஒட்டுமொத்த தாலிபான் ஒருங்கிணைந்த ஆண்டுவருவாய் 300 மில்லியன் அமெரிக்க டாலர் முதல் 1.5 பில்லியன் டாலர் வரை இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. தாலிபான்கள் அவர்களின் வளங்களை திறம்பட மற்றும் திறமையாகப் பயன்படுத்தினர், பண நெருக்கடியை அனுபவிக்கவில்லை என்று அதிகாரிகள் சுட்டிக் காட்டுகிறார்கள். தாலிபான்கள் கடந்த ஆண்டு வரையில் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை சம்பாதித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், 416 மில்லியன் டாலர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் இருந்து வந்தது. இரும்பு தாது, பளிங்கு, தாமிரம், தங்கம், துத்தநாகம் மற்றும் அரிய உலோகங்கள் சட்டவிரோத சுரங்கத்திலிருந்து 450 மில்லியனுக்கும் அதிகமான டாலர் வருவாய் கிடைத்துள்ளது. மிரட்டி பணம் பறித்தல் மற்றும் வரிகள் போன்றவற்றின் மூலம், 160 மில்லியன் டாலர்கள் வரை சம்பாதித்துள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து 240 மில்லியன் நன்கொடைகளை தாலிபான்கள் பெற்றுள்ளனர். பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற 240 மில்லியன் டாலர் மதிப்புள்ள நுகர்வோர் பொருட்களை இறக்குமதி செய்து ஏற்றுமதி செய்துள்ளனர் தாலிபான்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. போதை பயன்பாடுக்கு எதிராக குடிமக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து மரண தண்டனை கொடுக்கும் தாலிபான்கள், அவர்கள் வருமானத்திற்கு போதை பொருட்களையும் பயன்படுத்தியதாகவும் அந்த வகையில் அவர்கள் ஈட்டியது 416 மில்லியன் டாலர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தகவலின் உண்மைத் தன்மை மெல்ல மெல்லவே தெரிய வரும். ஆனாலும் ஆப்கானிஸ்தான், அதிக அபின் உற்பத்தி செய்யப்படும் நாடு, இது கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகளாவிய அபின் உற்பத்தியில் சுமார் 84 விழுக்காட்டைத் தன்வசம் கொண்டுள்ளது, அண்டை நாடுகள், ஐரோப்பா, அருகில் மற்றும் நடுத்தர நாடுகளில் அபின் கொண்டுதருகிறது. கிழக்கு ஆசியா, தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் ஓரளவுக்கு வட அமெரிக்கா (குறிப்பாக கனடா) மற்றும் ஓசியானியா ஆகியவற்றுக்கு அபின் கொண்டுதருதல் ஆப்கனிலிருந்து நடந்து வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.