பாங்காக்கில் நடைபெற்றுவரும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் விரிவான பொருளாதார கூட்டாண்மை அமைப்பின் இன்றைய, ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டு அமர்வில், உலகப் பொதுமறையான திருக்குறளை ‘தாய்’ மொழியில் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி இன்று வெளியிடுகிறார். 16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாங்காக்கில் தென்கிழக்காசிய நாடுகளின் உச்சி மாநாடு தற்போது நடந்து வருகிறது. இந்த மாநாட்டில், ஆசியான் - இந்தியா உச்சி மாநாடு என்கிற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டும் ஓர் அமர்வு நடத்தப் பட்டு வருகிறது. கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடந்த இந்த மாநாட்டு அமர்வில் கலந்து கொண்டு சிறப்பித்த இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்கள் இந்த ஆண்டு பாங்காக்கில் இந்த அமர்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைக்கப் பட்டிருக்கிறார். தாய்லாந்து தலைமை அமைச்சர் பிரயுத் சான்-ஓ-சாவிடம் இருந்து இந்தியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இன்றும் நாளையும் இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி தாய்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு நடைபெற உள்ள, 16-வது தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் (ஆசியான்)- இந்தியா மாநாட்டு அமர்வு, 14-வது கிழக்கு ஆசியா மாநாடு மற்றும் 3-வது பிராந்திய விரிவான கூட்டுப் பொருளாதார உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வார். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் விரிவான பொருளாதார கூட்டாண்மை அமைப்பில் புருனே, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய 10 நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தென்கிழக்காசியாவின் 10 நாடுகளின் பொருளாதார, மற்றும் புவியியல் சார்ந்த அரசியல் கூட்டமைப்பு ஆன இந்த அமைப்பின் நோக்கம்: பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தல், உறுப்பு நாடுகளிடையே சமூக, மற்றும் பண்பாட்டு உறவுகளைப் பேணல், பிராந்தியத்தில் அமைதி பேணல், உறுப்பு நாடுகளுக்கு ஏனைய நாடுகளுடன் கலந்துரையாட சந்தர்ப்பத்தை வழங்குதல் என்பனவாகும். ஆசியான் அமைப்பானது 4.46 மில்லியன் சதுரகி.மீ நிலப் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. இது மொத்த உலகின் பரப்பளவின் 3விழுக்காடு ஆகும். இப் பிராந்தியத்தின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 600 மில்லியனாக உள்ளது. இது மொத்த உலகின் மக்கள் தொகையின் 8.8விழுக்காடு ஆகும். ஆசியான் அமைப்பின் கடற் பரப்பளவானது இதன் நிலப் பரப்பளவை விட மூன்று மடங்கு பெரியதாகும். ஆசியான் அமைப்பை தனி அமைப்பாகக் கருதினால், இது உலகின் எட்டாவது மிகப்பெரிய பொருளதார அமைப்பாகக் காணப்படும். இந்த தென்கிழக்கு ஆசிய நாடுகளின் விரிவான பொருளாதார கூட்டாண்மை அமைப்பின் இன்றைய, ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டு அமர்வில், உலகப் பொதுமறையான திருக்குறளை ‘தாய்’ மொழியில் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி இன்று வெளியிடுகிறார். தாய்லாந்தில் ஆசியான் – இந்தியா உச்சி மாநாடு பாங்காக்கில் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ‘தாய்’ மொழியில் திருக்குறளை வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் மோடியுடன் தாய்லாந்து தலைமை அமைச்சர் பிரயூத் சான்னும் கலந்து கொள்கிறார். உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள திருக்குறளை ‘தாய்’ மொழியில் டாக்டர் சுவிட் மொழிபெயர்த்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,324.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.