25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாரசீக மொழி ஈரான் நாட்டின் ஆட்சி மொழியாகும். ஈரான் என்பதற்கு பாரசீக மொழியில் ஆரியரின் நிலம் என்று பொருளாம். ஆப்கானிஸ்தான், தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் பரவலாகவும், ஆர்மீனியா, ஈராக், பஹ்ரைன், ஓமான் ஆகிய நாடுகளில் ஓரளவிலும் பேசப்பட்டு வருகிறது பாரசீக மொழி. பிரித்தானியக் காலனித்துவத்திற்கு முன்னர் வடஇந்திய மக்களால் பாரசீகமொழி இரண்டாம் மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆதலால் ஹிந்தி, சிந்தி, வங்காள மொழி, உருது ஆகிய மொழிகளில் இதன் தாக்கத்தை அதிகம் காணலாம். இம்மொழி ஆப்கானிஸ்தானில் தாரி என்றும் தாஜிகிஸ்தானில் தாஜிக் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால், ஈரானிலும் ஏனைய நாடுகளிலும் இம்மொழி பார்சி என்று அழைக்கப்படுகிறது. தாஜிகிஸ்தானில் இதனை உருசிய மொழி போன்று திரிபடைந்த சிரிலிய வரிவடிவத்தில் எழுதப்பட்டபோதிலும், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் ஏனைய நாடுகளில் அரபு மொழி எழுத்துக்களிலிருந்து திரிபடைந்த வரிவடிவத்தைப் பயன்படுத்தி வலமிருந்து இடமாகவே பாரசீக மொழி எழுதப்படுகிறது. பாரசீகம் பல்லாயிரம் ஆண்டுகளின் வரலாற்றுப் பெருமையும் தொன்மையும் மிக்க ஒரு நாடாகும். பாரசீக நாகரீகத்தின் எழுச்சிக் காலமாக 2570 ஆண்டுகளுக்கு முந்தைய மகாரைஸ் அரசின் காலம் கருதப்படுகின்றது. இவ்வரச பரம்பரையினரை மகா அலெக்ஸான்டர் தோற்கடித்து தனது அரசை நிறுவினார். ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முந்தைய பாரசீகத்தை சாசானிய அரசபரம்பரையினர் ஆழத்தொடங்கினர். அவர்கள் சுமார் 400 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். 1383 ஆண்டுகளுக்கு முன்பு காதிஸிய்யாவில் நடந்த போரிலும் 1379 ஆண்டுகளுக்கு முன்பு நகாவந்தில் இடம்பெற்ற போரிலும் முஸ்லிம்கள் சாசனியர்களை தோற்கடித்து அங்கு இஸ்லாமிய அரசை நிறுவினாகள். அன்று பாரசீகம் என்று அழைக்கப்பட்டது இன்றைய ஈரான், ஆப்கானிஸ்தான், ஈராக் பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளையாகும். இன்று ஈரானை குறிப்பதற்காக மட்டுமே பாரசீகம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. முஸ்லிம்கள் பாரசீகத்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து பாரசீகர்கள் படிப்படியாக இஸ்லாத்தை ஏற்கலானார்கள். அவர்கள் இஸ்லாத்துக்கு முன்னர் ஸெராஸ்ரிய மதத்தினை பின்பற்றுபவர்களாகவும் நெருப்பு வணங்கிகளாகவும் இருந்தார்கள். பாரசீகத்தை இஸ்லாமியப் படைகள் வெற்றி கொண்டு, கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்குப் பின்னர் பாரசீக மொழியானது அரபு வரிவடிவத்தில் எழுதப்பட்டது. அதற்கு முன்னர், இன்றைய ஈரானின் பண்டைய மொழிகளான, பஹ்லவி மற்றும் அவெசுதா ஆகிய மொழிகளின் வரிவடிவங்களிலேயே அது எழுதப்பட்டு வந்தது. முகலாயப் பேரரசர்களின் காலத்தில் பேரரசின் ஆட்சி மொழியாகப் பாரசீக மொழியே அங்கீகரிக்கப்பட்டிருந்தது. முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் தொகுத்தெழுதிய பதாவா ஆலம்கீரி என்ற சட்டத் துறையைச் சார்ந்த இஸ்லாமிய சட்ட நூலும் பாரசீக மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. பாரசீக மொழி என்பது மத்திய பாரசீகத்தின் ஒரு தொடர்ச்சி ஆகும். இது சாசானியப் பேரரசின், அதிகாரப்பூர்வ மத மற்றும் இலக்கிய மொழி ஆகும். இது பழைய பாரசீகத்தின், தொடர்ச்சியான அகாமனிசியப் பேரரசின் மொழி ஆகும். இதன் இலக்கணம் இம்மொழிக்கு ஒப்பான சமகாலப் பயன்பாட்டிலிருந்த பல ஐரோப்பிய மொழிகளை ஒத்திருந்தது. மேற்கு ஆசியா, மத்திய ஆசியா, மற்றும் தென் ஆசியா போன்ற பகுதிகளில் வெவ்வேறு பேரரசுகளில், பல நூற்றாண்டுகளாக, பாரசீக மொழி ஒரு மதிப்புமிக்க மொழியாகவும், கலாச்சார மொழியாகவும், பரவி இருந்தது. ஈரான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் போன்ற நாடுகளில் வாழும் மக்களும் மற்றும் உலகம் முழுவதும் வாழும் சுமார் 11 கோடி மக்களும் பாரசீக மொழியைத் தங்கள் தாய்மொழியாகவும், அதிகாரப்பாட்டு மொழியாகவும் கொண்டுள்ளனர். ஈரான் மீதான இசுலாமியப் படையெடுப்புக்குப் பின் இம்மொழி அரபு மொழியிலிருந்து அதிக அளவு சொற் குவியலைக் கடனாகப் பெற்று, செல்வாக்கு மிகுந்த மொழியாக விளங்குகிறது. பாஷ்தூன் இனத்தவரான அப்துல் கப்பாரின் தாய்நாடு ஆப்கானித்தான். அவர் பிறந்தது பஷ்தூ மொழி ஆட்சிமொழியாக இருக்கும் பாகிஸ்தானின் கைபர்பக்தூன்க்வா மாநிலத்தின் தலைநகர் பெசாவரில். அவர் போராடியது மதப்பிரிவினைக்கு முந்தைய ஒட்டு மொத்த இந்தியாவிற்கு. அப்துல் கப்பார் அவர்களை ஒரு குறியீடாக எடுத்துக் கொண்டு, பாஷ்தூன் இனமக்களுக்கும் வடஇந்திய மக்களுக்குமான மொழி, பழக்கவழக்கங்கள், கலாச்சாரத் தொடர்புகளை ஆராய்ந்தால், இந்தியாவிற்கு ஒரு வரலாற்று ஆவணம் கிடைக்கக்கூடும் என்பது உறுதி. என்று பஷ்தூ மொழி குறித்து எழுதும் போது விளங்கிக் கொண்டோம். அது போலவே, முகமதியர் ஆளுகைக்கு முந்தைய பாரசீக இனமக்களுக்கும் வடஇந்திய மக்களுக்குமான மொழி, பழக்கவழக்கங்கள், கலாச்சாரத் தொடர்புகளை ஆராய்ந்தால், இந்தியாவிற்கான வரலாற்று ஆவணத்தை வலுப்படுத்த இதுவும் உதவும் என்பது உறுதி. பாரசீக மொழியினரின் இந்த ஈரான்தான், இன்று அமெரிக்காவோடு மோதல் போக்கை முன்னெடுத்திருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,392.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.