Show all

செண்பகராமன் பிள்ளை! ஜெய் ஹிந்த் முழக்கத்திற்குச் சொந்தக்காரத் தமிழன்

ஜெய் ஹிந்த் முழக்கத்தை, இந்தியஅளவில் பேரறிமுகமான தமிழர்கள் கூட, முழங்க மறுக்கிறார்கள் என்று, அடிக்கடி தமிழ்நாட்டு பாஜக கிளை முறையிட்டு வருகிறது. பாஜக முழங்குகிற ஹிந்தி, ஹிந்துத்துவா அடிப்படையிலான ஜெய் ஹிந்தை, தமிழர்கள் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? என்பதை விளக்குவதற்கானது இந்தக் கட்டுரை.

22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவை அடிமைப் படுத்தியிருந்த பிரித்தானியர்களுக்கு எதிராக, இங்கிலாந்து, செர்மனி உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பயணம் செய்து படை திரட்டி, இந்திய விடுதலைக்காக வெளியில் இருந்து போராடிய மாவீரனும், ஜெய் ஹிந்த் முழக்கத்திற்கு முழுஉரிமைக்குச் சொந்தக்காரத் தமிழனும் ஆவார் செண்பகராமன் பிள்ளை.
 
இட்லர், கெயிசர் ஆகியோருடன் நெருங்கிய உறவு கொண்டவர் ஆவார் செண்பகராமன் பிள்ளை. இந்தியாவிற்கு வெளியே இருந்து கொண்டே பிரித்தானியரை நாட்டிலிருந்து வெளியேற்றப் பாடுபட்டவர். இந்திய விடுதலைக்கான, இந்தியாவின் முதல் படையணியாக, இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கியவர் செண்பகராமன் பிள்ளை ஆவார்.

செண்பகராமன் 01,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-4993 (15.09.1891) அன்று, திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியான புத்தன் சந்தை என்ற ஊரில் பிறந்தார். தந்தை சின்னசாமிப்பிள்ளை; தாயார் நாகம்மாள். சின்னசாமிபிள்ளை திருவாங்கூர் சுதேச அரசாங்க சேவையில் தலைமை காவலராக இருந்தார். 

செண்பகராமன் இளம் அகவையிலேயே விளையாட்டிலும் சிலம்பம், வாள்வீச்சு போன்ற கலைகளிலும் சிறந்து விளங்கினார். திருவனந்தபுரம் மன்னர் உயர் நிலைப் பள்ளியில் தம் பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். பின் ஐரோப்பா சென்ற செண்பகராமன் முதலில் இத்தாலியிலும் பின்னர் சுவிட்சர்லாந்து பல்கலைக் கழகத்திலும் பயின்று பல பட்டங்கள் பெற்றார். ஐரோப்பிய மொழிகள் பலவற்றைக் கற்றுத்தேர்ந்தார். பெர்லின் பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.

இவர் மன்னர் உயர் நிலைப்பள்ளியில் ஆறாம் படிவம் (அந்தக் காலத்து பள்ளி இறுதி வகுப்பு) படித்துக் கொண்டிருந்த போது இந்தியாவில் விடுதலைக் கணல் எரியத்தொடங்கிய காலம். செண்பகராமனையும் விடுதலைத்தீ பற்றிக்கொண்டது. அச்சிறிய அகவையிலேயே தம்முடன் பயின்ற மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு சிறிபாரத மாதா வாலிபர் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அந்தப் போராட்டங்களில் ஜெய் ஹிந்த் என்ற முழக்கத்தை இந்தியாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்திய வீரத்தமிழன் ஆவார்.

ஜெய் ஹிந்த் எனும் முழக்கத்தை முதலில் முழங்கியவர் செண்பகராமன் பிள்ளையே ஆவார். இந்திய விடுதலைக்கு பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு வியன்னாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றிலும் அவர் இம்முழக்கத்தை முழங்கினார். 

ஜெய் ஹிந்த் எனும் செண்பகராமன் முழக்கத்தை கேட்ட நேதாஜி இம்முழக்கத்தை வழிமொழிந்ததோடு, இம்முழக்கத்தை தன்னுடைய இந்திய தேசிய சேனையிலும் முழங்கி, உலகெங்கும் இந்த முழக்கத்தைப் பரப்பினார்.

இந்திய விடுதலைப் போரில் செண்பகராமன் காட்டிய தீவிரம் காரணமாக ஆங்கில ஆட்சியின் காவல் துறையினர் செண்பகராமனைக் கண்காணிக்கத் தொடங்கினர்.

சர் வால்டர் வில்லியம் என்ற செருமானியர், தம்மை விலங்கியல் மருத்துவர் எனக் கூறிக்கொண்டு, இந்தியாவில் ஆங்கில ஆட்சியைக் கண்காணிக்கும் ஒற்றராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். இவருடன் செண்பக ராமனுக்குத் தொடர்பு ஏற்பட்டது. தன் பெற்றோர் அனுமதியோடு சர் வால்டர் வில்லியம்ஸின் உதவியுடன் யாரும் அறியாமல் செண்பக ராமன் ஐரோப்பா சென்றார். அங்கு இத்தாலி, சுவிட்சர்லாந்து, (செருமன்) பெர்லின் போன்ற பல்கலைக் கழகங்களில் படித்துப் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

சுவிட்சர்லாந்தில் மாணவராக இருந்த போது இந்திய நாட்டில் ஆங்கிலேயர் கையாண்ட அடக்குமுறைகள் பற்றி பல சொற்பொழிவுகள் ஆற்றினார். முனைவர் பட்டம் பெற்ற பின்னர் ஐரோப்பாவில் இருந்தபடியே இந்திய விடுதலைப்போரில் தீவிரமாகப் பங்கேற்றார். பெர்லினில் இந்தியப் பன்னாட்டுக் குழுவை நிறுவினார். ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவைக் குறித்து ஆங்கிலேயர் செய்து வந்த பொய்ப் பரப்புரைகளை இக்குழுவின் உதவியுடன் முறியடித்தார். 'புரோ இந்தியா' என்ற இதழைத் தொடங்கி இந்தியர்களின் நிலைகளையும், ஆங்கிலேயரின் இந்தியர்களைப் பற்றிய பொய்யான வதந்திகளையும் வெளிப்படுத்தினார். சீனா, தென்னாப்பிரிக்கா, மியான்மர் முதலான நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து உலக மக்களிடையே விழிப்புணர்வினை ஊட்டி இந்தியாவிற்கு ஆதரவைத் திரட்டினார்.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து காபூலின், இராஜா மஹேந்திர பிரதாப் அவர்களை அதிபராகவும், மவுலானா பர்கத் அவர்களை தலைமைஅமைச்சராகவும்; கொண்டு இந்தியர்கள் தங்களே நடத்துகின்ற போட்டி அரசை, இந்திய விடுதலைக்கு முப்பத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானித்தானில் நிறுவினர். இவ்வரசின் வெளியுறவுத் துறை அமைச்சராக செம்பகராமன் பிள்ளை பணியாற்றினார். 

இத்தகைய புரட்சிகளுக்கு செருமனி சுயநல நோக்கத்துடன் ஆதரவளித்து வந்தது. ஆங்கிலேய அரசு கொடுத்த நெருக்கடியின் காரணமாக ஜப்பான் அரசு இவ்வரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்பப் பெற்றதால் இந்தியாவின் தற்காலிக புகலிட அரசு மூன்றே ஆண்டுகளில் ஆப்கானித்தானிலிருந்து வெளியேற்றப்பட்டது.

முதல் உலகப்போர் மூண்ட போது இங்கிலாந்தை எதிர்த்து செர்மனி போரிட்டது. இங்கிலாந்தின் கடற்படையைக் கலங்க வைக்க செருமானியர்கள் நீர்மூழ்கிக் கப்பலைப் பயன்படுத்தினர். எம்டென் என்ற பெயர் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் செண்பகராமன் உதவிப் பொறியாளராகப் பணியாற்றினார். 

வங்காள விரிகுடாவிற்கு வந்த ஹிட்லரின் செர்மனியக் கடற்படையின், அடாவடிவன்முறைக்கான கப்பலான எம்டென், ஆங்கில அரசுக்குச் சொந்தமான இரு பெரிய எண்ணெய்க் கிடங்குகளின் மீதும் சென்னைத் துறைமுகத்தின் மீதும், புனித ஜார்ஜ் கோட்டையிலும் (பின்னர் தமிழ்நாடு அரசுச் செயலகமாகவும், தற்போது பாவேந்தர் செம்மொழி ஆய்வு நூலகமாவும் செயல்பட்டு வருகின்றது), திருகோணமலைத் துறைமுகத்தின் மீதும் பீரங்கித் தாக்குதல் நடத்தியது.

இதனால் சென்னைக் கோட்டை உயர் நீதிமன்றத்தின் வெளிப்புறச் சுவரின் ஒருபகுதி அடியோடு பெயர்ந்து விழுந்தது. கோட்டையை நோக்கி வீசப்பட்ட குண்டு வெடிக்காமல் மண்ணில் புதைந்தது. அதன் வீரியம் குறைக்கப்பட்டு எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டது. இதனை இன்றும் அங்கு காணலாம்.

முதல் உலகப்போருக்குப் பின் செருமனியில் நாஜிக்கட்சி ஹிட்லர் தலைமையில் உருவாகி வளர்ந்தது. ஹிட்லர் செருமனியின் சர்வாதிகாரி ஆனார். ஒருமுறை செண்பகராமன் ஹிட்லருடன் உரையாடிக் கொண்டிருந்த போது 'இந்தியர்கள் பிரித்தானியருக்கு அடிமையாக இருக்கவே தகுந்தவர்கள். இந்தியாவுக்கு விடுதலைக் கிடைத்தால், நாட்டைத் திறமையாக ஆளும் தகுதி இந்தியருக்கு இருக்கிறதா என்பது ஐயமே' என்று இந்தியரைத் தாழ்த்திக் கூறினார். ஹிட்லர் கூறியதைக் கேட்ட நாட்டுப் பற்று மிக்க செண்பக ராமன் கொதித்தெழுந்தார். ஹிட்லருக்கு எதிராகத் திறமையாக வாதாடி, எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்பு கேட்கச் செய்தார்.

தங்கள் தலைவரை வாதாடி வென்ற செண்பகராமனை, நாஜியர்கள் வெறுத்தனர். எனவே, அவர் கலந்து கொண்ட அரசாங்க விருந்து ஒன்றில் பரிமாறப்பட்ட உணவில் திட்டமிட்டபடி நஞ்சைக் கலந்தனர். அந்த நஞ்சு நாளடைவில் மெல்ல மெல்ல செண்பகராமனை நோயாளியாக்கி படுத்த படுக்கையில் வீழ்த்தியது. தீவிர சிகிச்சைக்குப் பின் சிறிது நாளில் நலம் பெற்ற செண்பகராமனை, நாஜிகள் மீண்டும் தாக்கிப் படுகாயப் படுத்தினார்கள். அதுவே அவரை மரணப் படுக்கையில் வீழ்த்தக் காரணமாக அமைந்தது. (26.05.1934) அன்று செண்பக ராமன் காலமானர்.

செண்பகராமன் உயிர் பிரியும் முன், 'நான் இறந்த பிறகு என் சாம்பலை இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இந்தியா விடுதலை பெற்ற பிறகு, சாம்பலின் ஒரு பகுதியை என் தாயாரின் சாம்பலைக் கரைத்த திருவனந்தபுரத்திலுள்ள கரமனை ஆற்றில் கரைக்க வேண்டும். மீதியை நாஞ்சில் நாட்டு வயல்களில் தூவ வேண்டும்' என்று தம் விருப்பத்தை வெளியிட்டார். இவரின் துணைவியார் ஜான்சி தம் கணவரின் சாம்பலைப் பாதுகாத்து வைத்திருந்தார். முப்பத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் விடுதலை இந்தியாவில் ஐம்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பு செண்பகராமன் விரும்பியபடியே அவரின் சாம்பல் கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டு நாஞ்சில் வயல்களில் தூவப்பட்டது.

செண்பகராமனும், சுபாஸ் சந்திர போசும் முழங்கிக் கொண்டாடிய ஜெய் ஹிந்த் முழக்கம் நாவலந்தேயம் என்கிற தமிழ்ச் சொல்லடியாக உருவான இந்திய நாட்டைக் குறிப்பது ஆகும். இருவருமே ஐரோப்பிய தளத்தில் இயங்கிய காரணம் பற்றி உலகினர் ஏற்கும், நாவலந்தேயம் என்கிற தமிழ்ச் சொல்லடியான இந்தியாவை, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கு என்ற அடிப்படையில், இந்தியாவை ஹிந்துஸ்தான் வடமொழி பெயர்ப்பில் ஜெய் ஹிந்த் என்பதை நாட்டு அடையாளமாக ஏற்றவர்கள். 

இந்திய நாட்டை உலகினரும், இந்தியாவில் தமிழரும் மட்டுமே தங்கள் தங்கள் மொழிகளில் இந்தியா என்று எழுதுகின்றனர். இந்தியாவில் தமிழ் தவிர்த்த எந்த மொழியிலும், இந்தியாவை பாரதம் என்றே எழுதப்படுகிறது. வட இந்தியர்கள் யாரும் தங்கள் மொழியில் இந்தியா என்று எழுதுவதை ஒருபோதும் முன்னெடுக்க மாட்டார்கள். 

காங்கிரசின் பெயர்- தமிழ் தவிர்த்த இந்திய மொழிகள் அனைத்திலும் பாரதிய ராஷ்டிரிய காங்கிரஸ் என்றே எழுதப்படுகிறது. இந்தியப் பணத்தாளிலும் இந்தியா பாரதம் என்றே குறிப்பிடப்படுகிறது. இந்திய கட்டுப்பாட்டு வங்கியை பாரதிய ரிசர்வ் பைங் என்றுதான் ஹிந்தியில் எழுதுவார்கள். பாரதிய ஜனதா கட்சியை தமிழிலும் கூட அப்படியே எழுதுகிறார்கள்.

வட இந்தியர்களுக்கு ஹிந்த் என்று சொன்னால் அது மதம் மட்டுமே. நாடு அல்லவே அல்ல. அவர்கள் ஜெய் ஹிந்த் முழக்கத்தை அங்கீகரிப்பது மத அடிப்படையாகவே. ஹிந்து என்கிற மதப் பெயரும், ஹிந்தி என்கிற மொழிப் பெயரும், இஸ்லாமியர்களால் அமைத்துக் கொடுக்கப் பட்ட பெயர்கள் ஆகும். அதை வடஇந்தியர்கள் ஏற்றுக்கொள்வது, வட இந்தியர்களுக்கு இழிவாகப்படவில்லை. 

ஆனால் இந்தியா என்கிற சொல் அவர்கள் நீச பாஷா என்று இழிவுபடுத்தி தமிழை ஒழித்துக் கட்ட உலகளவி இயங்கிக் கொண்டிருக்கிற நிலையில், நாவலந்தேயம் என்கிற தமிழ்ச் சொல்லடியான இந்தியாவை ஏற்பது அவர்களுக்கு இயலாத செயல் ஆகும்.

ஜெய் ஹிந்த் முழக்கத்தை, இந்தியஅளவில் பேரறிமுகமான தமிழர்கள் கூட, முழங்க மறுக்கிறார்கள் என்று, அடிக்கடி தமிழ்நாட்டு பாஜக கிளை முறையிட்டு வருகிறது. பாஜக முழங்குகிற ஹிந்தி, ஹிந்துத்துவா அடிப்படையிலான ஜெய் ஹிந்தை, தமிழர்கள் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? 

செண்பகராமன் இன்றைக்கு இருந்தால்- அடப்பாவிகளா! நான் இந்திய ஒருமைப்பாட்டுக்குத் தமிழர்கள் பெயர்விளங்கக்; கூடியவர்கள் என்பதால், உங்களுக்கு விளங்க வேண்டும் என்பதற்குத்தானே இந்தியா வாழ்க என்பதை சமஸ்கிருதத்தில் ஜெய்ஹிந்த் என்று முழங்கினேன். நீங்கள் என்னடாவென்றால், இந்தியாவைப் பாரதம் ஆக்கிவிட்டு, என் முழக்கத்தை ஹிந்து மதத்திற்கும், ஹிந்தி மொழிக்கும் ஏற்றி இந்திய ஒருமைப்பாட்டை சிதைத்துக் கொண்டிருக்கின்றீர்களே கொடுங்கோலர்களே! நான் என்னுடைய ஜெய் ஹிந்த் முழக்கத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என்றே தெரிவித்திருப்பார்.

இந்திய நாட்டைக் குறிக்க பாரதம் என்ற பெயரில் இருக்கிற அனைத்து தலைப்புகளையும், வடஇந்தியர்கள், இந்தியா என்று மாற்றினால், ஜெய் ஹிந்த் என்பதை, வாழ்க இந்தியா என்று கூட மொழிபெயர்க்காமல் அப்படியே ஜெய் ஹிந்த் என்று சமஸ்கிருதத்திலேயே முழங்க ஒத்துக் கொள்கிறோம் என்று தமிழர்கள் தாராளமாக உறுதிஅளிக்கலாம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,301.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.