Show all

தொடரும் திரையிடல்கள்!

இந்தியாவில், ஒன்றிய பாஜக அரசால், தடைவிதிக்கப்பட்ட குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி-யின் ஆவணப்படத்தை இந்தியா முழுவதும் திரையிடும் முயற்சிகளை மாணவ அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் செய்துவருகின்றன. 

13,தை,தமிழ்த்தொடராண்டு-5124: மோடி முதல்வராக இருந்த காலத்து குஜராத் கலவரம் தொடர்பான, பிபிசி ஆவணப்படத்துக்குத் தடை விதித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. ஆனாலும் தடையை எதிர்த்து, இந்தியா முழுவதும்  திரையிடல்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில், ஒன்றிய பாஜக அரசால், தடைவிதிக்கப்பட்ட குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி-யின் ஆவணப்படத்தை இந்தியா முழுவதும் திரையிடும் முயற்சிகளை மாணவ அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் செய்துவருகின்றன. 

இருபத்தியோரு ஆண்டுகளுக்கு முன்னம் குஜராத்தில் நடந்த கலவரம் குறித்து மறு விசாரணை செய்து பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இரண்டு பாகங்கள்கொண்ட இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் சென்ற கிழமை வெளியானது. 

இது வெற்றுக் கருத்துப்பரப்புதல் சார்ந்தது என்றும், இந்திய ஒருமைப்பாட்டைக் குலைப்பதாகவும் கூறி, சமூக வலைதளங்களில் அது தொடர்பான அனைத்து இணைப்புகளுக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒளிப்பரப்பு அமைச்சகம் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, தடைவிதித்தது. இந்தத் தடை எதிர்க்கட்சிகள் சார்பாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதன் விளைவாக, தடைசெய்யப்பட்ட ஆவணப்பட்டதைப் பொதுவெளியில் திரையிடுவது அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, டெல்லியில் நேரு பல்கலைக்கழகத்தில் இந்த ஆவணப்படத்தைத் திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கல்லூரியின் தடையை மீறி திரையிடப்பட்டதால், நிர்வாகம் மின்சாரத்தைத் துண்டித்ததாகத் தகவல் வெளியானது. அதையும் மீறி மாணவர்கள் ஆவணப்படுத்தை மடிக்கணினி செல்பேசிகளில் பதிவிறக்கம் செய்து பார்த்துக்கொண்டிருந்ததால், அகில பாரத வித்யார்த்தி பரிசத் என்கிற ராஷ்டிரிய ஸ்வம் சேவக் சங் மற்றும் பாஜக சார்ந்த அமைப்பினர் மாணவர்கள் மீது கற்களை வீசியதாகப் புகார் அளிக்கப்பட்டது. இதில் மாணவர்களுக்குக் காயம் ஏற்பட்டு, சிலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தியவர்கள்மேல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த அடாவடி முன்னெடுப்பிற்குப் பிறகு பேசிய டெல்லி நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் ஐஷி கோஷ், 'நாங்கள் ஆவணப்படத்தைத் திரையிடுவதைத் தடுக்கும் நோக்கத்தில் மின்சாரம் துண்டிப்பு போன்ற தடைகளை கல்லூரி நிர்வாகமும், சில அமைப்பினர்களும் செய்துவருகின்றனர். ஆனால், நாங்கள் மக்களாட்சியின் மீது அக்கறை கொண்டிருக்கிறோம். எனவே, இந்த ஆவணப்படத்தைப் பார்ப்போம்' என்றார்.

மின்சாரம் துண்டிப்பு போன்ற தடைகளை, கல்லூரி நிர்வாகம் தாங்கள் திட்டமிட்டுச் செய்ததாக ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு மாறாக தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மின்சாரம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாகக் கூறியிருந்தது.

கேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு எனப் பல பகுதிகளில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பு, இந்திய மாணவர் கூட்டமைப்பு, மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.

இது குறித்து பேசிய அமைப்புகள், 'பிபிசி ஆவணப்படத்தை மூடி மறைக்க ஒன்றிய பாஜக அரசு அதற்குத் தடைவிதித்தது. ஆனால், இதைத் திரையிட்டு நாங்கள் மக்களுக்கு இதைத் தெரியப்படுத்துக்கிறோம். இதை கேரளாவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் திரையிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம்' என்றார்கள்.

புதுவை கல்லுரியில் இந்த ஆவணப்படத்தை, பல்கலைக்கழக வளாகத்துக்குள் திரையிட நிர்வாகம் தடைவிதித்தது. அதை விடுதி அறையில் பார்க்கவும் தடைவிதிக்கப்பட்டு, இணைய சேவை அந்தப் பகுதியில் முடக்கப்பட்டது. இதனால் அதைப் பதிவிறக்கம் செய்யப்பட்டதை 100-க்கும் அதிகமான மாணவர்கள் ஒன்று கூடிப் பார்த்தனர். 

அப்போது, அகில பாரத வித்யார்த்தி பரிசத் என்கிற ராஷ்டிரிய ஸ்வம் சேவக் சங் மற்றும் பாஜக அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அதற்கு எதிராக 'ஜெய் ஸ்ரீராம்' என்று முழக்கமிட்டதோடு ஆவணப்படம் பார்த்தவர்களைச் சுட்டுத் தள்ளுங்கள்' என மாணவர்களை நோக்கி முழக்கமிட்டதாகவும் கல்லூரி மாணவர்கள் கூறியுள்ளனர்.

சென்னையில் தடைசெய்யப்பட்ட ஆவணப்படத்தை செல்பேசியில் பார்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஊராட்சித் தலைவர் பிரியதர்சினி உட்பட அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இப்படி நாடு முழுவதிலும் தடைசெய்யப்பட்ட ஆவணப்படத்தைத் திரையிடுவதில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றனர். மக்கள் எதைப் பார்க்க வேண்டும் என்பதை அரசாங்கம் முடிவு செய்ய வேண்டாம். என்னும் வாதம் இந்தியா முழுவதும் பேரளவாக முன்மொழியப்பட்டு வருகிறது. 

பலரும் அனைவரும் இதை உறுதியாகப் பார்க்க வேண்டும் எனக் கூறி ஆவணப்படம் இடம்பெறுள்ள இணையதள இணைப்பு மற்றும் காணெளியைத் தங்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்துவருகின்றனர். குறிப்பாக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ம{ஹவா மொய்த்ரா, வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் ஆகியோர் தங்கள் கீச்சுப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக பேசிய இதழியலாளர் பிரியன், 'ஒன்றிய பாஜக அரசு இதற்குத் தடைசெய்யவேண்டிய தேவை இல்லை. இவர்கள் தடைவிதித்ததால் அதை மக்களுக்குத் தெரியப்படுத்த தற்போது பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. குஜராத் கலவர முன்னெடுப்பு நடந்து முடிந்த இந்த 21 ஆண்டுகளில் மோடி மீது வைக்கும் விமர்சனங்கள் எதுவும் மாறவில்லை. குறிப்பாக, அவரிடம் கேட்கப்பட்ட எந்தக் கேள்விக்கும் அவர் விடை தரவில்லை என்பதும் அவர்மீதான நம்பகத்தன்மையின்மையை அதிகரித்தது. 

எனவே, அதை முழுமையாக விசாரித்து, இங்கிலாந்து அரசாங்கம் நிதி வழங்கி இயக்கப்படும் அந்த நாட்டு அரசாங்க நிறுவனமான பிபிசி, ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில் தவறு இருப்பதாக நினைத்தால் அந்த நாட்டுக்கு எதிராகக் கண்டனங்களைத் தெரிவிக்கலாமே! அப்படிச் செய்தால் அந்த நாட்டுடன் இருக்கும் உறவு முறிந்துவிடும் என்பதால், அதற்கு இத்தியாவில் தடைவிதித்திருக்கிறார்கள். 

அதேபோல், கீச்சு, வலையொளி போன்ற நிறுவனங்கள் இந்திய பாஜக அரசு சொல்வதைக் கேட்டு அதை முடக்குகின்றன. இந்த நிறுவனங்கள் தன்னிச்சையாகச் செயல்பட வேண்டும். உண்மையில், இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்கும், ஆவணப்படத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை உறுதிசெய்து பிறகு அதில் அந்த நிறுவனங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

ஒன்றிய அரசு தடைவிதித்திருக்கும்போது, ஆவணப்படத்தில் இருக்கும் உண்மையை மக்களிடம் எப்படி எடுத்துச் சொல்வார்கள்? அதனால் நாடு முழுவதும் திரையிடுகின்றனர். குறிப்பாக, கருத்துச் சுதந்தரத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் அதைத் திரையிடும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அதையும் இந்த அரசு மின்சாரம், இணையம் என அனைத்தையும் முடக்கி எண்ணிம அவசரகாலத்தைஇந்தியாவில் உருவாக்குகிறதோ என்ற அச்சம் எழுகிறது' என்றார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,506.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.