Show all

பஷ்தூ மொழி! உலக மொழிகள் வரிசையில்.

07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பஷ்தூ மொழி ஆப்கானிஸ்தானிலும், மேற்குப் பாகிஸ்தானிலும் வாழும் பாஷ்தூன் இனத்தவரால் பேசப்படும் மொழியாகும். பஷ்தூ மொழி ஆப்கானிஸ்தானின் ஆட்சிமொழியாக இருந்து வருகிறது. பாகிஸ்தானில் சிந்து மாநிலம் தவிர்த்து மற்ற கைபர் பக்தூன்க்வா, பலூச்சிஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் பஷ்தூ மொழி பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் ‘கைபர் பக்தூன்க்வா’ மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருக்கிறது பஷ்தூ மொழி.

பஷ்தூ மொழி, பாகிஸ்தானில், சுமார் ஒன்னரைக் கோடி மக்களால் பேசப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் முழுமையாக, இம்மொழி பேசுவோர் வாழ்கின்றனர். வடகிழக்கு ஈரானிலும் சிறிய சமுதாயங்களாக இம்மொழியைப் பேசுவோர் காணப்படுகின்றனர். 

பஷ்தூ மொழி பேசுகிறவர்கள் தெற்கு ஆசியா, மத்திய ஆசியா பகுதிகளிலும் காணப்படுகின்றனர். உலக அளவில் பஷ்தூ மொழியைக் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஐந்து கோடிக்கு குறையாமல் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்தியாவில் பஷ்தூ மொழி பேசுகிறவர்கள் 11086 பேர்கள் இருந்ததாக பத்தாண்டுகளுக்கு முந்தையக் கணக்கெடுப்பில் தெரியவருகிறது.

பாஷ்தூன் இனத்தவரான அப்துல் கப்பார் கான் பிரித்தானிய இந்தியாவின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவர். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை அகிம்சை முறையில் எதிர்த்தவர். மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர். இவர் எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்டவர்.

இவர், பஷ்தூ மொழி ஆட்சிமொழியாக இருக்கும் பாகிஸ்தானின் கைபர்பக்தூன்க்வா மாநிலத்தின் தலைநகர் பெசாவரில் பிறந்தவர்.

இறைவனின் தொண்டர்கள் என்ற புரட்சிப் படையை அமைத்த இவர் பலமுறை ஆங்கிலேயர் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்திய விடுதலையின் போது, இந்தியாவிலிருந்து பாகிஸ்தான்  பிரிவினையைக் கடுமையாக எதிர்த்தவர் இவர். இந்திய விடுதலைக்கு முந்தைய ஆண்டில் நவகாளியில் நடை பெற்ற கலவரத்திற்குப் பின் காந்தியுடன் அமைதிப்பயணம் மேற்கொண்டார்.

இந்தியப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் வாழ்ந்த இவர் பலமுறை பாகிஸ்தான் ஆட்சியால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய உளவாளி என்றும் தூற்றப்பட்டார்.

தமிழ்தொடராண்டு-5087ல் (ஆங்கிலம் 1985) நோபல் அமைதி பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட இவர் தமிழ்தொடராண்டு-5089ல்  (ஆங்கிலம் 1987) பாரத ரத்னா பெற்ற முதல் அயல்நாட்டவர் என்ற பெருமை பெற்றவர்.

தமிழ்தொடராண்டு-5090ல் (ஆங்கிலம் 1988) இவர் இயற்கை எய்தினார்;. இவரின் கடைசி ஆசைக்கேற்ப, பாஷ்தூன் இனத்தின் தாய்நாடான ஆப்கானித்தானில், நங்கர்கார் மாநிலத்தில், சலாலாபாத் என்ற ஊரில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவரது இறுதி ஊர்வலத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பெசாவரில் இருந்து கைபர் கணவாய் வழியாக சலாலாபாத்துக்குச் சென்றனர். சோவியத் ஆப்கானியப் போர் கடுமையாக நடந்து கொண்டிருந்த போதும் இவரது இறுதிச் சடங்குகளை நிறைவேற்ற தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

பாஷ்தூன் இனத்தவரான அப்துல் கப்பாரின் தாய்நாடு ஆப்கானித்தான். அவர் பிறந்தது பஷ்தூ மொழி ஆட்சிமொழியாக இருக்கும் பாகிஸ்தானின் கைபர்பக்தூன்க்வா மாநிலத்தின் தலைநகர் பெசாவரில். அவர் போராடியது மதப்பிரிவினைக்கு முந்தைய ஒட்டு மொத்த இந்தியாவிற்கு.  அப்துல் கப்பார் அவர்களை ஒரு குறியீடாக எடுத்துக் கொண்டு, பாஷ்தூன் இனமக்களுக்கும் வடஇந்திய மக்களுக்குமான மொழி, பழக்கவழக்கங்கள், கலாச்சாரத் தொடர்புகளை ஆராய்ந்தால், இந்தியாவிற்கு ஒரு வரலாற்று ஆவணம் கிடைக்கக்கூடும் என்பது உறுதி. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,345.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.