சென்னையில் இயங்கி வரும் ஒன்றியத் தொல்லியல்துறையின் கல்வெட்டியல் கிளையை, “தமிழ் கல்வெட்டியல் கிளை” என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். என உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 03,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: மைசூருவில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் அனைத்தையும் சென்னையில் தமிழ் கல்வெட்டியல் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என, ஒன்றியத் தொல்லியல் துறைக்கு உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு காரணமாய் அமைந்த, மதுரையைச் சேர்ந்த மணிமாறன், உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் பதிகை செய்த மனுவில்: கல்வெட்டுகள், பனை ஓலை குறிப்புகள், அகழாய்வில் கிடைத்த பொருட்களிலிருந்து வரலாற்று ஆவணங்கள் கிடைக்கின்றன. பெரும்பாலான தகவல்கள் கல்வெட்டுகளில் இருந்து கிடைப்பதால், தமிழ்நாட்டில் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தொல்லியல் துறை மற்றும் கல்வெட்டியல் துறை உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பழங்கால நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பது, அகழாய்வு செய்து தமிழ்நாட்டின் பழமைக்குச் சான்றாக கிடைக்கும் பழங்கால பொருட்களை ஆவணப்படுத்தி பாதுகாப்பது, பழமைக்கு ஆதாரமான கலைச் சிற்பங்களைப் பாதுகாப்பது, அவற்றை அனைவரும் அறியும் வகையில் பதுப்பித்து வெளியிடுவது ஆகியன தொல்லியல் துறையின் முதன்மைப் பணிகளாகும். மைசூர் கல்வெட்டியல் துறையில் உள்ள ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 65 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழுடன் தொடர்புடையவை. இந்தக் கல்வெட்டுகள் தற்போது வரை பதுப்பித்து வெளியிடப்படவில்லை. எனவே, மைசூருவில் கல்வெட்டியல் துறையின் கீழ் உள்ள தமிழ் மொழி தொடர்பான கல்வெட்டுகளைத் தமிழக தொல்லியல்துறையிடம் ஒப்படைக்கவும், அவற்றை நவீன தொழில்நுட்ப முறையில் பாதுகாக்கவும், அதற்கு தேவையான நிதி ஒதுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அறங்கூற்றுவர்கள் என்.கிருபாகரன், எம்.துரைசாமி அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவானது- தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்தரவாக உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அது குறித்த காணொளிகள் ஏராளமாக இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் விரும்பப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது. 1. சென்னையில் இயங்கி வரும் ஒன்றியத் தொல்லியல்துறையின் கல்வெட்டியல் கிளையை, “தமிழ் கல்வெட்டியல் கிளை” என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
2. ஒன்றியத் தொல்லியல்துறையிடம் உள்ள தமிழ் தொடர்பான அனைத்து ஆவணங்கள், தமிழ் கல்வெட்டுகள் அனைத்தையும் சென்னை தமிழ்க் கல்வெட்டியல் கிளைக்கு 6 மாதத்துக்குள் மாற்ற வேண்டும்.
3. ஒன்றியத் தொல்லியல்துறையில் உள்ள கல்வெட்டியல் பிரிவு உள்பட அனைத்துப் பிரிவுகளில் போதுமான நிபுணர்களைப் பணியமர்த்த வேண்டும். “தமிழ்க் கல்வெட்டியல்” பிரிவுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தர வேண்டும்.
இவ்வாறு அறங்கூற்றுவர்கள் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.