ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை ஒப்பிடுகையில், வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று இந்தியாவைப் புறக்கணிப்போர் எண்ணிக்கை தற்போது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது மிகவும் வருந்த வேண்டிய விடையமாக பார்க்கப்படுகிறது. 07,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: குட்டி பணக்கார இந்தியர்கள், எப்போதும் இல்லாத வகையில், இந்தியா குடியுரிமையை வேண்டாம் என மறுத்துவிட்டு, வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று வருகின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை ஒப்பிடுகையில், வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று இந்தியாவைப் புறக்கணிப்போர் எண்ணிக்கை தற்போது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது மிகவும் வருந்த வேண்டிய விடையமாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கையை விடவும் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று சொந்த நாட்டை விட்டு வெளியேறும் மக்கள் இந்தியாவில் தொடர்ந்து அதிகமாகி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலனோர் அமெரிக்காவில் தான் குடியுரிமை பெறுகின்றனர். அமெரிக்காவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கின்றன. இந்தியாவை விட்டு வெளியேறுகிற மக்கள் பிழைப்புக்காகச் செல்லவில்லை, இதேபோல் பஞ்சம் காரணமாகவோ, போர் காரணமாகவோ செல்லவில்லை. இந்திய குடியுரிமையை விட்டு வேறு நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் அனைவரும் அதிகம் படித்தவர்கள், பணக்காரர்கள், வணிகம் மற்றும் தொழில்துறையில் ஓரளவு வளர்ந்தவர்கள். இவ்வாறன நிலையில்- இந்தியாவில், அவர்களின் அடுத்த தலைமுறைக்கான கல்வி குறித்தும், தங்களின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்தும் அவர்களை நம்பிக்கை இழக்கச் செய்கிறது நடப்பு ஒன்றிய ஆட்சியாளர்களின் அரசியல் நிலைபாடு என்பதாக வல்லுனர்கள் கணிக்கின்றனர். கடந்த ஏழு ஆண்டுகளில், ஒன்பது இலட்சத்து இருபத்தி நான்காயிரம் பணக்கார இந்தியர்கள் இந்திய குடியுரிமையை விட்டு கொடுத்துவிட்டு வேறு நாட்டில் குடியுரிமை பெற்றவர்கள் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த தலைமுறையில், இந்திய மக்கள் பலர்- கல்வி, தொழில்நுட்ப உதவிகளுடன் மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தில் மேம்பட்டு உள்ளனர். தற்போதைய அரசியல் சூழ்நிலையில், இதை அடுத்த தலைமுறைக்கு முன்னெடுத்து செல்ல முடியும் என்பதான நம்பிக்கையை அவர்கள் இழக்கத் தொடங்கியிருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். இதனால், இவர்கள் தங்கள் வளர்ச்சியின் வேகத்தைக் குறைக்காமல் புதிய வாய்ப்பு, மேம்பட்ட வாழ்க்கையைத் தேடி வெளிநாடுகளுக்கு நிரந்தரமாகக் குடியேற தொடங்கியுள்ளனர். இதேவேளையில் இந்த எண்ணிக்கை பெரிய அளவில் இனி வரும் காலத்திலும் அதிகரிக்கும் என்றே வல்லுனர்கள் கணிக்கின்றனர். ஒன்றிய அரசு- கல்வி மற்றும் தொழிலில், நுழைவுத்தேர்வு மற்றும் பற்றாக்குறைகளைத் தவிர்த்து, வாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். குறிப்பிட்ட எல்லைக்கு மேல் ஒட்டுமொத்த இந்தியாவில் அம்பானி, அதானி போன்ற ஓரிருவரைத் தவிர மற்றவர் வளரமுடியாது என்பதான இருபது முப்பது விழுக்காடு என்கிற கொடூர வரிமுறைகளைக் களைய வேண்டும். வருமான வரியே இல்லாத நாடுகள் உலகில் நிறைய இருக்க- இங்கே பலபதின் ஆண்டுகளாக ஆண்டுக்கு இரண்டரை இலட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டினால்; அரசு அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்துக்குள் சிக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்து பணத்தின் மீதான தீண்டாமை மக்களுக்கு விடுதலை பெற்ற எழுபத்தைந்து ஆண்டுகளாக ஒரே மாதிரி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த அவலம் அப்புறப்படுத்தப்பட வேண்டும். இந்த வகை நம்பிக்கையை ஒன்றிய அரசு தனது கொள்கைகள் வாயிலாக அளிக்கும் பட்சத்தில் இதன் நிலைமை மாறலாம். ஆனால், எதிர்கால இந்தியாவில் மிக மிக கீழ் தட்டுமக்களும், அதானி அம்பானிகள் மட்டுமே இருக்கும் வகைக்கே இந்தியாவின் அரசியல் கொள்கை நடப்புநிலையில் பயணப்பட்டு வருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,318.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.