கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் தங்கத்தின் விலையானது, இன்று சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்கா- ஈரான் இடைப்பட்ட, போர் அபாயம் நீங்குவதற்கான வாய்ப்புகளும் கனிந்து வருகிறது. 26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்கா ஈரான் இடையே நிலவி வந்த பதட்டம் உச்ச கட்டத்தில் இருந்த நிலையில், போர் வெடிக்குமோ என்ற அச்சம் நிலவி வந்தது. அதனால் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக ஏற்றம் கண்டு வந்தது. நினைத்த நேரத்தில் ஈரானை தாக்க முடியாது என்று டிரம்ப்பின் கையைக் கட்டிப்போட்டது அமெரிக்க நாடாளுமன்றம். உயிர்ப்பலி இல்லாமல் பாதுகாப்பாக ஏவுகணைத் தாக்குதலை முன்னெடுத்தது ஈரான். இவை உலகை நல்ல விளைவை நோக்கி நகர்த்தின. இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே சமாதானம் ஏற்படும் நிலை நிலவி வருகிறது. எந்த விதமான முன் நிபந்தனைகளும் இன்றி கலந்துரையாடலுக்கு நாங்கள் தயார் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானின் ராணுவத் தளபதி சுலைமானியை தற்காப்புக்காகவே கொலை செய்தோம் என்றும் ஐக்கிய நாடுகள் அவைக்கு எழுதிய கடிதத்தில் விளக்கம் கொடுத்துள்ளது அமெரிக்கா. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு கருதி சிக்கல் ஏதும் விளைவிக்காமல் இருக்கவும், ஈரான் அரசு மேலதிக நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கவும், ஈரான் தரப்புடன் தாங்கள் கலந்துரையாடல் நடத்த தயாராக இருப்பதாக ஐநாவுக்கான அமெரிக்க தூதர் கெல்லி கிராப்ட் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள தங்கள் நாட்டு ஊழியர்களின் நலன்களை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநாவுக்கு ஈரான் எழுதியுள்ள கடிதத்தில் தங்கள் தரப்பு போரையோ நிலைமை மோசமாவதையோ விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஆக மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவி வரும் பதட்டத்துக்கு முடிவு வரும் என்ற நிலையில், தங்கம் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,393.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.