தமிழ் மாமன்னர் அரசேந்திரசோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும் கொரோனா பரவல் காரணமாக இது வரும் ஆண்டில் இருந்து கொண்டாடப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 26,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ் மாமன்னர் அரசேந்திரசோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும் கொரோனா பரவல் காரணமாக இது வரும் ஆண்டில் இருந்து கொண்டாடப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்த்தொடராண்டு-4116 முதல் 4146 வரை (கி.பி. 1014-1044) வரை அரசாண்ட சோழப் பேரரசர்களில் போற்றுதலுக்குரியவர் அரசேந்திரசோழன். கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீசுவரர் கோயிலைப் பேரளவாக கட்டி எழுப்பிய மாமன்னர் அரசேந்திரசோழன். அரசேந்திரசோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாள், மாவட்ட அளவில் அப்பகுதி மக்களால் மட்டுமே கொண்டாடப்பட்டு வருகிறது. அரசேந்திரசோழனின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்பது தமிழார்வலர்களின் கோரிக்கை. தென்கிழக்காசியாவில் சோழர் அரசு தொடர்பாக கடந்த கிழமை அறிக்கை ஒன்றை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருந்தார். அதில், அரசேந்திரசோழனின் பொற்கால ஆட்சியில், தற்போதைய இந்தியப் பெருநிலத்தில் மத்திய பிரதேசம் சட்டீஸ்கர், ஒரிசா வரை இருந்த எண்ணற்ற தேசங்கள், மலேயா, சிங்கப்பூர் சுமத்ரா தீவுகள், கம்போடியா இந்தோனேசியா என தென் கிழக்கு ஆசியா முழுவதும் சோழப் பேரரசை விரியச் செய்து, தெற்காசியப் பெருங்கண்டத்திலேயே அதிகப் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பினை வென்றெடுத்து, ஆண்ட மாமன்னராகத் திகழ்ந்தவர் நம் பாட்டன் அரசேந்திரசோழன். கடற்போரில் சிறந்து விளங்கியமையால் கடற்புலி எனவும் கடல் வென்ற சோழன் எனவும் பெருமையாக அழைக்கப்படுகிறார். கடல்கடந்த வெற்றிகளைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் மக்கள் வறுமை தீர்க்க நீர் மேலாண்மையை வெற்றிகரமாகக் கையாண்டவர். இன்றளவும் வறண்ட நிலப்பரப்பாகக் காட்சி தரும் அரியலூர் மாவட்டத்தில் கங்கை கொண்ட சோழபுரம் என்னும் மாபெரும் தலைநகரை உருவாக்கி அதற்கென ஏறக்குறைய இருபது மைல் நீளம் உடைய, பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய ஏரியினைக் கட்டி பல்லுயிர் சூழல் காத்த உயிரி நேய மன்னன் அரசேந்திரசோழன். கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்றளவும் வானை முட்டி உயர்ந்து நிற்கிற அந்த கோவில் அரசேந்திர சோழனின் கலை ஆர்வத்தை, தமிழர்களின் படைப்பாற்றலை உலகத்திற்குப் பறை சாற்றுகிற ஆவணச் சாட்சியமாக விளங்குகிறது. அலைகடல் மீது படைபல நடத்தி, கங்கையும், கலிங்கமும், கடாரமும், இலங்கையும் வென்று, பாயும் புலிக்கொடி பட்டொளி வீசி பறந்திட, தென் கிழக்காசியா முழுமையும் சோழப்பேரரசின் வெண்கொற்றக்குடையின்கீழ் கொண்டுவந்து, உலகின் நான்காவது பெரும் பேரரசை நிறுவிய தமிழ்ப்பெரும்பாட்டன் மாமன்னன் அரசேந்திரசோழனின் பிறந்தநாளில், அவரது பெரும்புகழைப் போற்றி வணங்குவதில் பெருமிதமும், பேருவுவகையுமடைகிறோம் என குறிப்பிட்டிருந்தார். மேலும் தமிழர்களின் வீரத்தையும், தீரத்தையும், அறத்தையும், அறிவையும், ஆற்றலையும் பார் போற்றப் பறைசாற்றி, தமிழினத்தைப் புகழின் உச்சியில் ஏற்றிய தமிழ்ப்பேரரசன் அரசேந்திரச்சோழன் பிறந்த ஆடி திருவாதிரை நாளினை அரசு விடுமுறை நாளாக அறிவித்து, தமிழினத்தின் ஒப்பற்ற பெருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட வழிவகைச் செய்ய தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் எனவும் சீமான் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அரசேந்திரசோழனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை: அண்மையில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ, உலகத் தொல் பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. இந்தக் கோயிலின் சிறப்பினைக் கண்டு களித்திட உலகின் பல்வேறு நாடுகாளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அரியலூர் மாவட்டத்தின் மிகவும் பெருமை வாய்ந்த இந்த கோயிலில் மாமன்னன் அரசேந்திரசோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது அப்பகுதி வாழ் மக்காளால் வெகு விமர்சையாகவும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் கொண்டாடப்படுகிற இவ்விழாவினை அரசு விழாவாக கொண்டாட அப்பகுதிவாழ் மக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் சார்பில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இக்கோரிக்கையை ஏற்று அரசேந்திரசோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அரசு விழாவாக கொண்டாட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக வரும் ஆண்டு முதல் இந்த விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் அரசேந்திரசோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள பிரகதீசுவரர் உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். முதலாம் அராசேந்திர சோழன் காலம் முதல் சோழர்களின் கலை, கட்டடக் கலைகளின் அழகிய தொகுப்பாகவும் வாழும் வரலாறாகவும் விளங்குகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.