முதலாவதாக கேரளத்தில் மிகுந்த தாக்கத்தை எற்படுத்தி, தற்போது உலகஅளவில் பேசுபொருளாகியுள்ளது! 'ஒரே நாடு, ஒரே மொழி என்று பேசுவோர் இந்தியாவின் எதிரிகள்' என்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு 15,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்று வரும் மனோரமா செய்தி நிறுவன கருத்தரங்கு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார். தொடக்கத்தில் அவர் மூன்று மணித்துளிகள் அந்த மண்ணின் மொழியான மலையாளத்தில் பேசியது கேரள மக்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்தப் பேச்சின்போது, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட பல அடிப்படைகள் உலகாளவிய பேசுபொருள் ஆகியுள்ளது. கூட்டாட்சி கருத்தியலும் விடுதலையால் பெற்ற உரிமைகளும், வளர்ச்சிக்கான முற்போக்கு சிந்தனைகளும் இணைந்துதான் இந்தியாவை இந்த அளவுக்கு வளர்த்துள்ளன. கூட்டாட்சி, மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை, சமத்துவம், சமூகத்துவம், சமூக நீதி ஆகிய தன்மைகளை பலப்படுத்த வேண்டும். இவை அனைத்தையும் காப்பாற்றுவதுதான் உண்மையாகவே இந்தியாவை காப்பாற்றுவது. 75 ஆம் ஆண்டு விடுதலைநாள் என்பது வெறும் கொண்டாட்டமாக இருக்கக்கூடாது. இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கு இந்தியா வலிமையாக வைப்பதற்கான பணிகளை ஆற்ற வேண்டும். இன்னும் பதினைந்து நாட்களில் வரவிருக்கிற இந்திய விடுதலை நாள் எப்படி எதிர்கொள்ளப்பட வேண்டும் என்பதை, தொலைநோக்காக தற்போதே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் விளக்கப்பட்டுள்ள இந்த அடிப்படை, சிறப்பு கவனம் பெறுகிறது. இந்தியா என்பது ஒற்றை அரசாங்கம் அல்ல. பல மாநில அரசுகளின் கூட்டமைப்பு, ஒன்றியம்தான் இந்தியா. ஒன்றியம் என்பது புதிய சொல் அல்ல. அனைத்து மாநிலங்களையும் காப்பது என்பதுதான் இந்தியாவைக் காக்கும் வழி. ஓர்மைத்தன்மை என்பது ஒற்றுமை ஆகாது என்பார் பேரறிஞர் அண்ணா. ஓர்மைப்படுத்துவதன் மூலம் உங்களால் ஒற்றுமையை உருவாக்க முடியாது என்று அவர் சொல்வார். இந்தியாவுக்கு ஒரு தேசிய மொழி என்பது சாத்தியமில்லை அல்லவா? இந்தியாவில் பல்வேறு மொழிகள், மதங்கள் உண்டு. அனைவருக்கும் ஒரே மதம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவில் உணவு உடை தொடங்கி அனைத்திலும் வேறுபாடுகள் உண்டு. ஆனால், நம்மை ஒற்றுமைப்படுத்துவது நட்பும் உடன்பிறப்பாய் பழகும் பாடுகளே. ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு என்பது நம் ஒற்றுமையை தகர்க்கும். அவ்வாறாக நம் ஒற்றுமையை தகர்க்கப் பார்ப்பவர்கள் இந்தியாவின் எதிரிகளாவர். மாநிலங்கள் தன்னிறைவைக் கொண்டிருப்பது இந்தியாவுக்கு வலிமைதானே தவிர, பலவீனம் அல்ல. ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு ஆகும். இதனால், இந்தியாவுக்குதானே நன்மை. மக்களோடு நெருக்கமாக இருப்பது மாநில அரசுதான். மக்களின் தேவையை பார்த்து பார்த்து செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்குத்தான் உண்டு. எனவே மாநில அரசுகளை தன்னிறைவு பெற்ற அரசுகளாக வைத்திருந்தால்தான் இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும். இந்தியா கூட்டரசாக இருக்க வேண்டும். ஆனால், அதற்கு எதிராக பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பேச்சுரிமை மறுக்கப்படுகிறது; இதுதான் இந்திய மக்களாட்சியின் தற்போதைய நிலை. சரக்குசேவைவரி, நீட், தேசிய கல்விக்கொள்கை உள்ளிட்ட கொள்கைகள் மக்களுக்கு எதிராக உள்ளன. தனக்கு கீழ் இயங்கும் இணை அரசுகளை நடத்தவே பாஜக திட்டமிடுகிறது. ஆனால், இந்தத் தடைகளை எதிர்த்து நாம் நம் அரசை நடத்த வேண்டும்.
இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கு இந்தியா வலிமையாக இருக்க வேண்டுமானால் இதே கருத்துகளைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,326.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.