Show all

ஒரு நகரம் அழிவை நோக்கி! தமிழர் கொண்டாடும் இமயத்தில்

நிலவாழ் உயிரிகளின் தோற்றப்பகுதி என்று நிறுவும் வகைக்கு, தமிழ்முன்னோர் கொண்டாடியிருந்த இமயத்தில், தற்போது, ஒரு நகரம் அழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளது என்பது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

29,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழர் சுட்டுகிற மலையும் மடுவும் ஒன்றுக்கொன்று எதிர்நிலை உடையது. 'நிலத்தில் மட்டும் வாழ்வன' 'நீரில் மட்டும் வாழ்வன' என்கிற இந்த எதிர் நிலையுடைய உயிரிகளில் 'நிலத்தில் மட்டும் வாழ்வன' மலையிலும் 'நீரில் மட்டும் வாழ்வன' கடலிலும் தோன்றியிருக்கலாம். ஆனால், உலகின் அறிவாளர்கள் உயிர்த்தோற்றம் கடலில் நிகழ்ந்தாகவே நம்புகின்றனர்.

தமிழ்முன்னோர் தெரிவிக்கிற எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கிற வரையறையில்- இடம், வலம் ஆகிய இரண்டு சொற்கள் குறித்த வரையறை மீட்பு இந்த ஆய்வுக்கு நமக்கு பெரிதும் உதவும்.

தமிழ்முன்னோரின், 'முதலெனப்படுவது இடமும் காலமும்' என்பதில் உள்ள இடம் என்பது: இடப்பக்கம் - வலப்பக்கம், இடது - வலது, இடக்கை - வலக்கை என்பவைகளிலும் அதே பொருளில் உள்ளது. அதாவது இயக்கம் இல்லாத இருப்பு நிலையை குறிக்கப் பயன்படுகிறது இடம்.

இருந்த இடத்தில் இருந்து கொண்டு, குருதியை உடலெங்கும் பாய்ச்சும் இதயம் இடப்பக்கமே உள்ளது. அதன் பாதுகாப்பு கருதியே வலக்கையை இயக்கத்திற்கு அதிகம் பயன்படுத்திகின்ற நிலை உள்ளது. இதன் காரணம் பற்றியே, தமிழ்முன்னோர் கைகளுக்கு இடம் வலம் என்று பெயர் சுட்டி நிறுவியுள்ளனர் என்று அறிந்து கொண்டாட முடிகின்றது.

இடத்தின் எதிர்ச்சொல்லாக வருகிற வலம் என்பது வலசை, வலிந்து, வலிமை என்று இயக்கம் குறித்து அமைகிறது. அதே போல திசைகளில் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என்பதில் வடக்குக்கு ஒரு இருப்பு நிலை இருக்கிறது. 

தமிழர்வடக்கு என்பது தமிழர் தம் நாவலந்தேயத்திற்கு (இந்தியா) வடக்கில் அமைந்த இமயமலையாகும். தமிழில் வடக்கிருத்தல் என்ற ஒரு சொல் உண்டு. அந்த வடக்கிருத்தலுக்கு உயிர் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளுதல் என்று பொருள். போர்க்களத்தில், நெஞ்சில் பாய்ந்த வேல் முதுகை துளைத்துவிட்டால் இந்த வடக்கிருத்தலை அந்தக்கால தமிழ்மன்னர்கள் முன்னெடுத்திருந்தனர்.

வடக்கு திசையானது- தமிழ்ப்பகுதியின் இடப்பக்கம் அமைந்த காரணம் பற்றியும், வடக்கு திசையில் அமைந்த இமயமலை- தமிழர் உயிர்தோற்றம் பெற்ற இடம் காரணம் பற்றியும், முதலெனப்படுவதில் ஒன்றான இடத்தின் இயல்புக்கு வடக்குதிசையும் பொருத்தப்பாடாக்கப்பட்டது.

அடுத்ததாக தமிழர் முன்னெடுத்துவரும், தென்புலத்தார் வழிபாடு குமரிக்கண்ட ஆழிப்பேரலை அழிவை உறுதிப்படுத்தும் சான்றாக அமைகிறது. 

தமிழர்வாழ்ந்த பகுதியான குமரிக்கண்டம் அழிந்தது என்றால் தமிழர் யாரும் அதைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. தமிழர்கள் பாதிக்காத தூரத்தில் இருந்து அந்த அழிவைப் பார்த்தவர்கள் மட்டுமே. ஆக தமிழர் பகுதி அதுவல்ல. தமிழரில் ஒரு பகுதியினர் பயணப்பட்டிருந்த பகுதி மட்டுமே ஆகும் குமரிக்கண்டம்.   

சென்னையின் கடற்கரையில் சுனாமிபாதிப்பில் இறந்துவிட்ட எவரும் சுனாமிபற்றி பேச வாய்ப்பு இல்லை. பாதிக்காத தூரத்தில் இருந்து அந்த அழிவைப் பார்த்தவர்கள் மட்டுமே, கேட்டவர்கள் மட்டுமே, சுனாமியில் இறந்தவர்களுக்கு தென்புலத்தார் வழிபாடு போல ஆண்டாண்டும் நடத்திவரும் நினைவேந்தல் நிகழ்வில் ஆறுதல் அடைகிறோம். 

சங்ககால இலக்கியத்தில் தமிழர்தோன்றிய இடமான இமயமலை பெரிதும் கொண்டாடப்பட்டுள்ளதை இங்கு பட்டியல் இடுவோம்.  

சேரலாதன் கடம்ப மரத்தை வெட்டிக் கடம்பரை ஓட்டிய பின்னர் இமயத்தில் வில்லைப் பொறித்தான். - அகம் 127

வஞ்சி நகருக்குப் பெருமை அதன் அரசன் வானவன் இமயத்தில் வில்லைப் பொறித்தது. அந்த இமயம் 'வரை அளந்து அறியாப் பொன்படு நெடுங்கோடு' கொண்டது. - புறம் 39

வடபுல இமயத்து வாங்கு வில் பொறித்த ... இயல் தேர்க் குட்டுவன். - சிறுபாணாற்றுப்படை 48-

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் தன் முத்திரையாகிய வில்லைப் பொறித்தான். - பதிற்றுப்பத்து பதிகம் 2

இந்தியாவில் இமயப் பகுதி அரசர்கள் குமரிமுனை வரையில் கைப்பற்றக் கனவு கண்டனர். இமையவரம்பன் அவர்களது கனவுகளைப் பொய்யாக்கித் தன் புகழை இமயம் வரையில் நிலைகொள்ளச் செய்தான். - பதிற்றுப்பத்து - 2ஆம் பத்து - பாடல் 11

வடதிசை எல்லை இமயமாகத் தென்திசைக் குமரிவரை ஆண்ட அரசர்களின் நாட்டை அழித்துப் போரிட்டவன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன். - பதிற்றுப்பத்து 43

கொண்டல் மழை இமயத்தைத் தீண்டிப் பொழியும். - புறம் 34

இமயம் போல உயர்ந்து வாழ்க. - புறம் 166

வடதிசை இமயமும், தென்திசை ஆய்குடியும் உலகைச் சமனிலை கொள்ளச் செய்யும். - புறம் 132

தலைவி ஒருத்தி தன் காதலனை இமயம் ஆடினாலும் தன் காதலனின் பண்பு ஆட்டங்கூடக் காணாது என்கிறாள் . - குறுந்தொகை 158

அரவணையான் புகழ் இமயத்துக்கு அப்பாலும் பரவ வேண்டும் என்று புலவர் திருமாலை வாழ்த்துகிறார். - கலித்தொகை 105

தென்கடல் பரப்பில் மேய்ந்த அன்னப் பறவை இமயமலையிலுள்ள வானர மகளிரிடம் இருப்புக் கொள்ளுமாம். அதுபோல, என் காதலியை எனக்குத் திருமணம் செய்து கொடுக்க மறுப்பவர்கள் என்றேனும் ஒருநாள் கொடுப்பார்கள் என்கிறான் தலைமகன் ஒருவன். - நற்றிணை 356

பொன்னுடை நெடுங்கோட்டு இமயம் போன்ற வேழம் பரிசாகத் தருக என்கிறார் ஒரு புலவர்.- புறம் 369

என் காமம் இமயத்திலிருந்து இழிதரும் கங்கை ஆறு போல மாலை வேளையில் பெருகுகிறது என்கிறாள் ஒருத்தி. - நற்றிணை 369

அந்தி வேளையில் அலையாமல் ஓரிடத்தில் தங்கும் விலங்கினம் போல ஆயத்தோடு ஆற்றுத்துறை மணல்மேல் ஒரிடத்தில் அமர்ந்துகொண்டிருந்த ஒரு நல்லவரைப் பார்த்தேன் என்று பரத்தைமாட்டுச் சென்ற தன் தலைவனைப்பற்றி ஒருத்தி குறிப்பிடுகிறாள். - கலித்தொகை 92

நம் காதலர் பொருள் தேடச் சென்றாரே அந்தச் செல்வம் இமயத்தைப் போன்றதா, அன்றி நந்தர் பாடலி நகரில் மறைத்து வைத்த நிதியம் போன்றதா? ஆயினும் அந்தச் செல்வம் நம்மைக் காட்டிலும் பெரிதா? என்று சொல்லித் தலைவி தோழியிடம் அங்கலாய்த்துக் கொள்கிறாள். - அகம் 265

திருபரங்குன்றம் புகழால் இமயக் குன்றுக்கு ஒப்பானது. - பரிபாடல் 8

உலகத்தின் மிக உயர்ந்த இமயமலையிலேயே நிலம் வாழும் உயிரிகள் தோற்றம் பெற்றிருக்க வேண்டும். அந்த உயிரிகளில் ஆறறிவு பெற்ற மனித இனத்தில் தெற்குப் பகுதியை நோக்கி மலைஇறங்கியவர்களுக்கு கிடைத்தது குமரிக்கண்டம் வரையுலுமான குறுகிய பகுதி. குமரிக் கண்ட பேரழிவிற்குப் பின் குமரிக் கடல் வரையுலுமாக இன்னும் சுருங்கிப் போனது அவர்களுக்;குக் கிடைத்த பகுதி. 

அவர்கள் ஆற்றங்கரை ஆற்றங்கரை என்று தேடி அலைய வாய்ப்பில்லாமல், அவர்களுக்கு அமைந்த நிலம்- 
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே.
என்று கொண்டாட வாய்ப்பானது.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அனைத்துப் பகுதிகளை வாழ்விடமாக செழுமையாக்கிக் கொண்டாடினர் அந்த இயல்புகளால் அவர்களுக்கு இயற்கையாக கிடைத்த மொழி தமிழ் என்கிற காரணம் பற்றி அவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழர்கள்.

உலகத்தின் மிக உயர்ந்த இமயமலையிலேயே நிலம் வாழும் உயிரிகள் தோற்றம் பெற்றிருக்க வேண்டும். அந்த உயிரிகளில் ஆறறிவு பெற்ற மனித இனத்தில் வடக்குப் பகுதியை நோக்கி மலைஇறங்கியவர்களுக்கு கிடைத்தது குமரிக்கடல் வரை அமைந்த நாவலந்தேயம் போலன்றி குறுகிய பகுதி அல்ல. ஆசியா ஐரோப்பா என்ற மிக நெடிய நிலப்பரப்பு. 

முதலாவதாக தரையிறங்கிய, பேரளவான டைனோசர் போன்ற உயிரிகள் தட்பவெட்பத்தை தாங்கிக் கொள்ள இயலாமல் மண்ணுக்கு இரையாகிப் போன காரணம் பற்றியே இன்று வரை அந்தப் பகுதிகளில்- அதே பகுதியில் குடியேற்றம் அமைத்துக் கொண்ட இனத்தினருக்கு பெட்ரோல் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

பெரும்பகுதி நிலம் என்கிற காரணம் பற்றி- பல்வேறு ஆற்றங்கரைகளும், அதனைத் தேடி அலைந்த நாடோடி வாழ்க்கையும், நாடோடி இயல்பும், தனித்தனிக் குழுக்களுக்கு தனித்தனி மொழிகளும், தனித்தனி நாகரிகங்களும், தனிமனித ஆதிக்கங்களும், நாடு பிடிப்பு ஆசைகளும், மொழித்திணிப்புகளும், மொழி மாற்றங்களும், தொல்கதைகளும் என்று ஏராளமான விடையங்கள் அவர்களுக்குக் கிடைத்தன.

அந்தப் பேரளவான கூட்டத்தினரில் ஒரு பகுதியினர் ஆற்றங்கரை தேடி அலைந்த நிலையில், இமயமலைக் கணவாய்கள் அவர்களுக்கு வழிவிட்டு- சிந்து கங்கை ஆறுகளை அடையாளம் காண வைத்தது. அந்தப் பேரெடுப்பில்- நாவலந்தேயத்தின் வடபுலத் தமிழரின் சிந்து சமவெளி நாகரிகம் சிதைந்து போனது. 

இன்று வரையிலும் கூட- தமிழர் கூட்டம் கூட்டமாக அந்த- நாவலந்தேய வருகையர் இனஞ் சார்ந்து கிளைத்த புதிய புதிய மொழிகளால் புதுப் புது இனங்களாக மாற்றம் பெற்று இயங்குகிறார்கள். நமது தமிழோ, தன் தனித்துவ காரணம் பற்றி இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

நிலவாழ் உயிரித் தோற்றத்திற்கு அடித்தளமான இந்த பேரருமைக்குரிய இமயமலை பேரழிவை நோக்கி நகர்த்தப்பட்டு வருவதான புதிய அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இமயமலையில் அமைந்துள்ள சோசிமத் நகரம் படுவேகமாக புதைந்து வருகிறது. இதனிடையே இது குறித்து வல்லுநர்கள் நடத்திய ஆய்வில் கடந்த 12 நாட்களில் மட்டும் ஐந்து செமீக்கு அதிகமாக மண்ணில் புதைந்துள்ளதை வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.

இமயமலையில் அமைந்துள்ள நகரங்களில் ஒன்றான சோசிமத் நகரம் வேகமாக மண்ணுக்குள் புதைந்து வருகிறது. இதனால் இந்த நகரமே இப்போது அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

திட்டமிடாத கட்டுமானங்களும் வேகமான நகரமயமாக்கலுமே இதற்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது. சோசிமத் அடியே இருக்கும் மண் வலுவானதாக இல்லை என்பதால் அது கட்டுமானங்களின் எடையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இது குறித்து விசாரணை செய்ய வல்லுநர் குழு ஒன்றையும் அமைத்துள்ளனர். மேலும், மோசமான நிலையில், விரிசல் ஏற்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதனிடையே சோசிமத் நகரம் எந்தளவுக்கு வேகமாகப் புதைந்து வருகிறது என்பது குறித்த தகவல்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதன்படி சோசிமத் நகர் கடந்த 12 நாட்களில் மட்டும் சுமார் 5.4 சென்டிமீட்டர் அளவுக்கு வேகமாகப் புதைந்துள்ளது இஸ்ரோ அனுப்பிய தரவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

மண்ணில் ஏற்பட்ட பெரிய விரிசல் காரணமாகவே நகரம் வேகமாகப் புதைந்து வருவதாகவும் இஸ்ரோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சோசிமத்; பகுதியில், சேனை உலங்டுகூர்திதளம் மற்றும் கோவிலைச் சுற்றிலும் இருக்கும் மண் வேகமாகப் புதையத் தொடங்கியது. இதனால் நகரில் இருக்கும் முதன்மைக் கட்டிடங்களிலும் கூட பெரியளவுக்கு விரிசல் ஏற்பட்டு மக்கள் வசிக்கவே முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்பும் கூட அங்கு மண் புதைந்து கொண்டு தான் இருந்துள்ளது. ஆனால், அப்போது அது புதையும் வேகமாகக் குறைவாக இருந்ததால் யாரும் அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. கடந்தாண்டு சோசிமத் நகர் 9 செ.மீ வரை புதைந்து உள்ளது. அப்போதே இந்த பாதிப்பை உணர்ந்து நடவடிக்கை எடுத்திருந்தால்.. இந்த அழிவைத் தடுத்திருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். அதேநேரம் இந்தப் பகுதியில் நடைபெறும் சுரங்க கட்டுமானங்களே இதற்குக் காரணம் என்று சாடியுள்ள மக்கள் இந்தப்பாட்டில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக அங்குள்ள கட்டிடங்கள் மற்றும் சாலைகளில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டு ஒட்டுமொத்த நகரமே பேரழிவின் விளிம்பில் உள்ளது. இது குறித்த செயற்கைகோள் ஆய்வுக்குப் பிறகு, அங்கிருந்து சுமார் 4,000 பேர் பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தவிர, 678 வீடுகள் ஆபத்தில் இருப்பதாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. திட்டமிடப்படாத மற்றும் குழப்பமான உள்கட்டமைப்பு திட்டங்களே இதற்குக் காரணம் என்று வல்லுநர்கள் சாடுகின்றனர். குறிப்பாக அங்கு அமைக்கும் மின் உற்பத்தி நிலையம் ஒன்றுக்கு மலைகளில் குண்டுகளை வைத்துத் துளையிட்டு வருகிறார்கள். வல்லுநர்கள் அங்குப் பெரிய கட்டுமானங்களே நடக்கக் கூடாது என்று கூறியிருந்த நிலையில், அதை மீறி வெடி வைத்து இவர்கள் பாறைகளைத் தகர்த்து வந்துள்ளனர். இதுவே பேரழிவுக்கு மற்றொரு காரணமாக அமைந்துவிட்டது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,492.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.