பெட்ரோல் விளையும் நாடுகள் மதத்தை கொண்டாட முடிகிறது. ஆனால் அந்த மதத்தை அடிப்டையாகக் கொண்டு உருவாக்கப் பட்ட பாகிஸ்தான் மக்களுக்கோ- மனிதநேயமே தேவையாய் இருக்கிறது என்பதை ஒரு கருத்துக் கணிப்பு உணர்த்தியிருக்கிறது. இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிற- இந்தியாவை ஹிந்துத்துவா நாடாக்கும் முயற்சியில் இருக்கிற- பாஜகவும் இதை உணர வேண்டும். 16,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பணவீக்கமும், வேலையின்மையும் தான் பாகிஸ்தான் மக்கள் முன் இருக்கும் தலையாய பிரச்சனை என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. கல்ஆப் இன்டர்நேசனல், என்ற நிறுவனம் பாகிஸ்தான் முழுவதும் வசிக்கும் மக்களின் தலையாய பிரச்னைகள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தி, முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில், நாட்டின் பொருளாதாரம், அதிலும் குறிப்பாக பணவீக்கம் தான் தாங்கள் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய பிரச்னை என 53 விழுக்காட்டு பேர்கள் தெரிவித்துள்ளனர். பணவீக்கத்தை தொடர்ந்து வேலையின்மையை 23 விழுக்காட்டு பேர்களும், 4 விழுக்காட்டு பேர்கள் ஊழலையும், தண்ணீர் பிரச்னையை 4 விழுக்காட்டு பேர்களும் கூறி உள்ளனர். காஷ்மீர் பிரச்னை தங்களை பாதிக்கிறதா என்பதற்கு 8 விழுக்காட்டு பேர்கள் ஆம் என்று கூறி இந்தியாவோடு நேரடியாக எங்களுக்கொன்றும் பிரச்சனையில்லை என்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அரசியல் நிலையற்ற தன்மை, மின்சார தட்டுப்பாடு, கட்டுப்படுத்த முடியாத டெங்கு பரவுதல் ஆகியனவும் தங்களின் தலையாய பிரச்னையாக சிலர் கூறி உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. பொருளாதாரம் தான் பாகிஸ்தான் முன்பு உள்ள மிகப் பெரிய சவால் என கடந்த காலண்டில் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது. போதிய அளவிலான வளர்ச்சி இல்லாதது பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகவும் கூறப்பட்டது. பாகிஸ்தானின் நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் அண்மையில் 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவி அளித்திருந்தது. அத்துடன் கத்தார், சீனா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளும் பாகிஸ்தானிற்கு மானியத்துடன் கூடிய நிதி உதவி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,324.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.