இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச்; சந்தித்துள்ளது. மேலும் சரிய வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது அமெரிக்க டாலரில், இந்தியாவின் ஒரு ரூபாய்க்கான மதிப்பு 0.0125 அமெரிக்க டாலர் ஆகும். அதாவது அமெரிக்காவின் ஒரு டாலர் மதிப்புள்ள பொருளுக்கு நாம் நமது எண்பது ரூபாயை செலுத்தியே பெற வேண்டும். இந்தியச் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறிக்கொண்டே இருக்கின்றன. இதன் காரணமாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முறையாக 80 ரூபாயாக சரிந்தது. ரூபாய் மதிப்பு மேலும் சரிய வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுனர்கள் கணித்துள்ள நிலையில், ஒன்றிய பாஜக அரசின் தவறான கொள்கைகளே இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் ஒரு பக்கம் எனில், இந்திய நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் அளவும் 200 பில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது. அதே போல், அரசுக் கடன் பத்திரங்கள், கம்பெனி கடன் பத்திரங்கள் போன்றவற்றிலிருந்தும் முதலீடுகள் வெளியேறுகின்றன. இதனால் ரூபாய் மதிப்பு தொடர்ந்து அழுத்தத்தில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இவை மட்டுமல்லாமல் பெரும்பாலான கட்டாயத்தேவைப் பொருட்களின் விலையும் உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. வண்டி உதிரிபாகங்கள், மின் பொருட்கள் போன்றவை பெருமளவில் இறக்குமதி செய்யப்படுவதால், அவற்றின் விலையும் உயரும். இந்த சரிவிலும் தமிழ்நாட்டுக்கான ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவெனில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடையும் வகைக்கு அவர்களுக்கு இலாபம் கூடுதலாகக் கிடைக்கவுள்ளது. அவர்கள் அமெரிக்க டாலரில் வணிகம் செய்வதால் அதை கூடுதல் இந்திய ரூபாய்க்கு மாற்றிக் கொள்ள முடியும். இதேப்போல வெளிநாடுகளில் இருப்பவர்கள் பணம் அனுப்பினால் இங்கு இருப்பவர்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும். இந்த வகையிலும் தமிழ்நாடும் கேரளாவும் நல்ல ஆதாயம் பார்க்கும். தகவல் தொழில் நுட்பத்துறையில் டாலரில் வருமானம் பெறுபவர்களின் பாடும் கொண்டாட்டமே. அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,315.
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய், தங்கம் போன்றவற்றின் விலை குறைந்திருந்தாலும், ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, தங்கம் போன்றவற்றின் விலை குறைய வாய்ப்பில்லை என வல்லுனர்கள் தெரிவிக்கினறனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.