டெல்லி, மும்பையிலுள்ள பிபிசி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்திய செயல் குறித்துப் பேசிய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், மோடி அரசு திறனாய்வைக் கண்டு பயந்துவிட்டது. இது நாங்கள் எதிர்ப்பார்த்ததுதான். அவர்களின் முடிவு நெருங்கிவிட்டது எனக் கூறினார். 04,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: டெல்லி, மும்பையிலுள்ள பிபிசி நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். சரியாக நேற்று காலை 11:30 மணிக்கு தொடங்கப்பட்ட இந்தச் சோதனை, மாலை 4 மணி வரை நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சோதனையின்போது, ஊழியர்களின் செல்பேசிகள், மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வெளியாட்களிடம் பேசக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. இது வருமான வரி சோதனை அல்ல, வெறும் ஆய்வு மட்டுமே. நிதிநிலை அறிக்கை மற்றும் கணக்குகள் பற்றி ஆய்வுசெய்யப்பட்டது என வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர். ஆனால், இது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் திறனாய்வு செய்து வருகின்றன. 21 ஆண்டுகளுக்கு முந்தைய குஜராத் கலவரம் நடைபெற மோடி முதன்மைக் காரணமாக இருந்ததாக, பிபிசி நிறுவனம் இரண்டு பாகங்களைக்கொண்ட ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. இதைத் தொடக்கம் முதலே எதிர்த்த பாஜக அதன்மேல் கடுமையான திறனாய்;வை முன்வைத்தது. அதையடுத்து, பிபிசி நிறுவனம் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக நடந்துகொள்வதாகக் கூறி, ஒன்றிய பாஜக அரசு ஆவணப்படத்துக்கு தடைவிதித்தது. இதற்கு எதிர்வினையாற்றும் வகையில், மாணவ அமைப்புகள் ஒன்றிய அரசு தடைசெய்த ஆவணப்படத்தை, பொது இடங்களில் மக்கள் பார்க்கத் திரையிட்டனர். சில மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்த நிலையில், பிபிசி-யின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருப்பது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. இது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இது ஊடகத் தனித்துவத்தின் மீதான அடாவடியான பழிவாங்கும் நடவடிக்கை என குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது குறித்துப் பேசிய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், மோடி அரசு திறனாய்வைக் கண்டு பயந்துவிட்டது. இது நாங்கள் எதிர்ப்பார்த்ததுதான். அவர்களின் முடிவு நெருங்கிவிட்டது எனக் கூறினார். இந்தச் சோதனை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயாலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது கீச்சுவில் 'குஜராத்திலும், நாடு முழுவதும் மோடி ஆட்சியின் வன்முறைத் தாண்டவத்தை ஆவணமாக்கியது பிபிசி. இப்போது அதன் அலுவலகங்களில் வருமானவரி சோதனை, ஊழியர்களுக்கு மிரட்டல். உள்நாட்டு ஊடகங்களின்மீதான அடக்குமுறை தர்பாரில் பன்னாட்டு ஊடகமும் தப்பவில்லை' எனப் பதிவிட்டிருந்தார். இது குறித்து பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், இந்தியாவிலுள்ள நடுநிலையான ஊடகங்கள் அனைத்தும் மத்திய அரசின் சோதனையைக் கடந்து வந்திருக்கின்றன. குறிப்பாக, இதழியலாளர்களான கௌரி லங்கேஷ், பன்சாரே, கல்புர்கி ஆகியோர் தங்கள் அரசியல் கருத்தை வெளியிட்டதற்காகவே கொல்லப்பட்டனர். ஹத்ராஸ் கொடூரக் கொலை வழக்கு பற்றி விசாரிக்கச் சென்ற சித்திக் கப்பன் இரண்டு ஆண்டுகள் காரணமின்றி தன் வாழ்க்கையை சிறையில் கழித்தார். இப்படி இதழியலாளர்களை ஒடுக்க நினைக்கும் பாஜகவின் எண்ணம் இப்போது கடுமையாக்கப்பட்டிருக்கிறது என்றார். இது குறித்து இதழியலாளர் பிரியன் பேசுகையில், நடுநிலையான ஊடகங்களுக்கு மோடி அரசு விடுக்கும் எச்சரிக்கை என்றுதான் சொல்ல வேண்டும். இதை பாஜக மேற்கொள்வது புதிதல்ல. இதற்கு முன்பு இந்திய ஊடகங்களான தி வயர், ஆல்ட், நியூஸ் கிளிக், நியூஸ் லாண்ட்ரி ஆகிய நிறுவனங்களுக்கு எதிராகவும் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்திருக்கின்றனர். ஆனால், இதுவரையிலும் இந்தியாவிலுள்ள ஊடகங்களை அச்சுறுத்திய மோடி அரசாங்கம், தற்போது பன்னாட்டு ஊடகத்தில் கைவைத்திருக்கிறது. பிபிசி நிறுவனம் அரசாங்க நிதியில் இயங்கக்கூடியது என்பதால், நிதி நிலையில் சிக்கல் இருக்க வாய்ப்பில்லை. இது பாஜக அரசால் ஆத்திரத்தில் செய்யப்பட்ட சோதனை. ஏற்கெனவே மூச்சுமுட்டும் அளவுக்கு இந்திய ஊடகங்கள் நெருக்கப்படுகின்றன. இனி அது இன்னும் இறுகும் என்பதையே இந்தச் செயல் உணர்த்துகிறது. குஜராத் ஆவணப்படம் இன்று புது வாக்காளர்களாக இருப்பவர்கள் பிறப்பதற்கும் முன்பு நடந்த நிகழ்வு குறித்தது. இதை பிபிசி வெளியிட்டதன் மூலம், இளைஞர்கள் நடுவில் இது தீவிரமாகப் பேசப்படும். அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்னும் நடுக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. ஆனால், அதே வேளையில் இது ஹிந்து வாக்குகளை பாஜகவுக்கு அதிகரிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும். காரணம், அவரின் ஆதரவாளர்களை அறங்கூற்றுமன்றம் விடுவித்த பின்னரும், மோடிமீது தேவையில்லாமல் குற்றச்சாட்டுவைக்கப்படுகிறது என்பது மோடியை அனுதாபத்துக்குரிய ஆளாகத் தோன்றவைக்கும். அதேபோல், ஆவணப்படத்தை இந்தியாவில் எடுக்க யார் மறைமுகமாக உதவி செய்தார்கள் என்பதை இந்தச் சோதனை வாயிலாகத் தெரிந்துகொள்ள அவர்கள் முயல்வதாகவும் தெரிகிறது. ஆனால், இந்தச் சர்ச்சை அடுத்த தேர்தல் வரை தாக்குப் பிடிக்குமா என்று தெரியவில்லை. எதிர்க்கட்சியான காங்கிரஸ் இதைத் தீவிரமாகக் கையில் எடுத்தால், இது தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அவர்கள் இதைக் கையிலெடுத்தால் ஹிந்துக்கள் வாக்குகள் பறிபோகும் என்னும் அச்சத்தில் அது பற்றிப் பேசத் தயங்குகின்றனர்' என்றார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,526.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.