Show all

உருவாக்குகிறது சீனா! ஞாயிறு வெப்பம் வழங்கும் தொழில் நுட்பத்தில், ஒரு வெப்ப ஆற்றல் கருவி

உலகில் மிக அதிக ஆற்றலைப் பெறுவதற்கு தற்போதைய நிலையில் அணு-பிளப்பே பயன்பட்டு வருகிறது. ஆனால் நமக்கு ஈடுஇணையில்லாத ஆற்றல் வழங்கி வரும் ஞாயிறு, அணு-சேர்க்கை என்ற தொழில் நுட்பத்தில் நமக்கு அந்த ஆற்றலை வழங்கி வருகிறது. அந்த வகையான செயற்கை ஞாயிறை வடிவமைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறதாம்.

12,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகில் மிக அதிக ஆற்றலைப் பெறுவதற்கு தற்போதைய நிலையில் அணு-பிளப்பே பயன்பட்டு வருகிறது. ஆனால் நமக்கு ஈடுஇணையில்லாத ஆற்றல் வழங்கி வரும் ஞாயிறு, அணு-சேர்க்கை என்ற தொழில் நுட்பத்தில் நமக்கு அந்த ஆற்றலை வழங்கி வருகிறது.

நீண்ட காலமாகவே, செயற்கை ஞாயிறு என்பது போல, ஞாயிற்றின் அணு-சேர்க்கை தொழில் நுட்பத்தில் ஒரு முயற்சியைச் செய்து பார்க்க வேண்டும் என்பது இயல்அறிவர்கள் (சயின்டிஸ்ட்) பலரின் விருப்பமாக இருக்கிறது. அதற்கு இப்போது செயல் வடிவம் கொடுத்திருக்கிறது சீனா.

ஆம்! செயற்கை ஞாயிறு என்பது போல, மிகமிக கூடுதல் ஆற்றல் தரும் ஒரு கருவி. இதிலிருந்து வெளிப்படும் ஆற்றலானது அணுக்கரு பிளவின்போது வெளிப்படும் ஆற்றலைவிட 100 மடங்கு அதிகமாக இருக்கும். இந்த முறையில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அணுக்கதிர் வீச்சு எதுவும் வெளிப்படாது என்பது இந்த முறைக்கான சிறப்பு ஆகும்.

நாம் இப்போது அணு உலைகளில் அணுக்கரு பிளவு என்னும் முறையைத்தான் பயன்படுத்தி வருகிறோம். இந்த முறைக்கு 92நேர்கள் (புரட்டான்) 92நிரைகள் (எலக்ட்ரான்) கொண்ட யுரேனியம் அல்லது 94நேர்கள் 94நிரைகள் கொண்ட புளூட்டோனியத்தை அணுக்கரு பிளப்பிற்கு பயன்படுத்தி அதில் கிடைக்கும் வெப்பத்தை பயன்படுத்தி நீரைச் சூடேற்றி அதன் மூலம் மின்சக்தி உருவாக்கும் கருவியை இயக்கி மின்சாரம் பெறுகிறோம். இந்த யுரேனிய அணுக்கரு பிளப்பு செயல்முறையின்போது அதிக அளவிலான கதிர் வீச்சும் வெளிப்படும்.

இதற்கு நேர் எதிரான செயல்முறைதான் ஞாயிறு நமக்கு வெப்பம் வழங்க முன்னெடுக்கும் அணுக்கரு இணைவு செயல்முறை ஆகும்.  இந்த செயல்முறையில் இரு அணுக்கள் ஒரே அணுவாக இணைக்கப்படும். 

இந்த வகை முறையில் ஒவ்வொரு நொடியும் 620 மில்லியன் மெட்ரிக் டன் அளவு ஹைட்ரஜனை இணைத்து 606 மில்லியன் மெட்ரிக் டன் அளவு ஹீலியத்தையும் நமக்குத் தேவையான வெப்பத்தையும் வெளியேற்றிக் கொண்டிருக்கிறது ஞாயிறு.

அப்புறம் ஏன் இந்தச் செயல்முறையை முன்னமேயே பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழும். இதைப் பயன்படுத்த வேண்டுமென்றால் நாம் உள்ளீடு செய்ய வேண்டிய ஆற்றலின் அளவு மிக மிக அதிகம். தொடர்ந்து அந்த அளவு ஆற்றலைக் கொடுக்கக் கூடிய மூலம் இதுவரை நம்மிடம் இல்லை.

சீனாவின் தேசிய அணுக்கழகம் அண்மையில் அந்தக் கருவியை வடிவமைப்பதில் வெற்றி பெற்று விட்டதாகவும், அடுத்த ஆண்டிலேயே  செயற்கை ஞாயிறு திட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கிறது. 

செயற்கை ஞாயிறு என்றே இத்திட்டம் குறித்து பேசப்பட்டு வருகிற நிலையில், வானத்தில் இந்தக் கருவி ஒரு கோளாக சீனாவிற்கு நேராக நிறுவப்படுமா என்ற கேள்வியும் அப்படி சாத்தியமில்லையே விடையும் விவாதமாக்கப்பட்டு வருகின்றன. 

ஆனாலும் அந்தக் கருவியைப் பற்றிய தகவல்கள் பெரிதாக வெளிவரவில்லை. சீனாவின் இந்த கருவி வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எப்படி இருப்பினும் இயல்அறிவுத் (சயின்ஸ்) தளத்தில் அடுத்த கட்ட நகர்வாக இந்த முயற்சி பார்க்கப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,379.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.