இலங்கையின் 72-ஆவது விடுதலை நாள் விழாவில், நாட்டுப்பண்ணின் தமிழ் வடிவம் இசைக்கப்படாது என்று கோத்தபாய இராஜபக்சே அரசு அறிவித்திருக்கிறது. இது இலங்கையில் வாழும் தமிழர்களை அவமதிக்கும் செயல் என்பது மட்டுமின்றி, உலக அளவில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கும் எதிரானது ஆகும். 12,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையின் விடுதலைநாள் விழா கொழும்பு விடுதலைநாள் சதுக்கத்தில் நாளது 22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121 அன்று (04.02.2020) கொண்டாடப்படவிருக்கிறது. இந்நிலையில், இலங்கை விடுதலைநாள் விழாவில் தமிழில் நாட்டுபண் இசைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இலங்கையில் நாட்டுப்பண் சிங்களத்தில்தான் இசைக்கப்படும் என அறிவித்திருப்பது துரதிருஷ்டவசமானது. இந்த விவகாரத்தில் தலைமைஅமைச்சர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில்: சிறிலங்காத் தாயே என்று தொடங்கும் இலங்கை நாட்டுப்பண்ணின் தமிழ் வடிவத்திற்கு அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டம் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. இதற்காக அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின் மூன்றாவது அட்டவணையில் தமிழ் வடிவ நாட்டுப்பண் சேர்க்கப்பட்டிருக்கிறது. அத்தகைய நாட்டுப்பண் இலங்கையின் விடுதலை நாள் விழாவில் இசைக்கப்படாது என்பது அந்நாட்டு ஆட்சியாளர்களின் சிங்கள இனவெறியை வெளிப்படுத்தும் செயலாகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கதும் ஆகும். இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பல மொழிகள் பேசப்பட்டாலும் ஒற்றை மொழியில் தான் நாட்டுப்பண் இசைக்கப்படுவதாகவும், அதே வழக்கத்தை இலங்கையிலும் நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன் தான் தமிழில் நாட்டுப்பண் இசைக்கப்படுவது நிறுத்தப்படுவதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது. இது அபத்தமான வாதம் ஆகும். உலகில் பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, கனடா உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் அங்கு பேசப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் நாட்டுப்பண் இசைக்கப் படுகிறது. அதேபோல், சிங்கப்பூரில் 75விழுக்காடு சீனர்கள் வாழும் போதிலும் சீன மொழியில் நாட்டுப்பண் இசைக்கப்படுவதில்லை; மாறாக, சிறுபான்மை மொழியான மலாய் மொழியில் தான் இசைக்கப்படுகிறது. இந்தியாவிலும் தேசிய கீதம் பெரும்பான்மை மொழியான ஹிந்தியில் இசைக்கப்படுவதில்லை; மாறாக சிறுபான்மை வங்க மொழியில் தான் இசைக்கப்படுகிறது. இவற்றைக் கடந்து நாட்டை ஒருங்கிணைக்கும் கருவியாக தமிழ் நாட்டுப்பண் கருதப்படும் நிலையில், அதை நீக்குவது இனவெறியின் உச்சமாகும். இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற பிறகு பல்வேறு தருணங்களில் தமது அரசின் கொள்கைகள் குறித்து பேசிய அதிபர் கோத்தபாய, இலங்கையில் பெரும்பான்மை சிங்களர்களின் விருப்பங்களுக்கு மாறாக தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க முடியாது என்று உறுதியாக கூறியிருக்கிறார். இந்தியா- இலங்கை உடன்பாட்டின் அடிப்படையில் செய்யப்பட்ட 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்பதுடன், தமிழும் இலங்கையின் தேசிய, அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். ஆனால், தமிழில் நாட்டுப்பண் பாட தடை விதித்திருப்பதன் மூலம், 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை மதிக்க மாட்டோம் என்று இலங்கை சொல்லாமல் சொல்லியிருக்கிறது. ஏற்கனவே, தமிழர்கள் இலங்கையில் மூன்றாம் தர குடிமக்களாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும், போர்ப்படைத் தளபதி சரத் பொன்சேகாவும் கூறியிருந்தனர். இவற்றை வைத்து பார்க்கும் போது இலங்கையில் சிங்களர்களுடன் இணைந்து தமிழர்கள் கண்ணியமாக வாழ்வதற்கு சிறிதும் வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது. இத்தகைய சூழலில் தமிழர்கள் அவர்களின் தாயகமான ஈழத்தில் கண்ணியத்துடன் வாழ்வதற்கு வகை செய்வது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கடமையும், பொறுப்பும் ஆகும். எனவே, ஐக்கிய நாடுகள் அவையின் மூலம் உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி, அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் தமிழீழம் அமைத்துத் தர இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வர வேண்டும். இவ்வாறு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ் கூறியுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,379.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.