08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அல்பேனிய மொழி அல்பானிய இன மக்களின் தாய்மொழியாகும். அல்பேனிய மொழி, அல்பானியா நாட்டிலும், கொசோவோ நாட்டிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இம்மொழியை ஏறத்தாழ ஒரு கோடிக்கு குறைவான மக்கள் பேசுகின்றனர். இம்மொழி அல்பானிய எழுத்துக்களையே எழுதப்பயன்படுத்துகிறது. அல்பேனியா நாடு அல்பேனியக் குடியரசு என்று அழைக்கப்படுகிறது. அல்பேனியா, ஐரோப்பாவின் தென்கிழக்கேயுள்ள ஒரு நாடாகும். 28,748 சதுரகிமீ பரப்பளவுள்ள இந்நாட்டின் மக்கள்தொகை முப்பது இலட்சமாகும். இந்நாடு ஓர் ஒற்றை நாடாளுமன்றக் குடியரசு ஆகும். இதன் தலைநகரம் டிரானா. டிரானா இந்நாட்டின் மிகப்பெரும் நகரமும், முதன்மைப் பொருளாதார மற்றும் வணிக மையமும் ஆகும். டிரானா நகரம், தமிழகம் போல விருந்தோம்பலில் சிறந்து விளங்குவதாக சொல்லப்படுகிறது. அல்பேனியா பால்கன் குடாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடமேற்கே மொண்டெனேகுரோ, வடகிழக்கே கொசோவோ, கிழக்கே மாக்கடோனியா, தெற்கு, மற்றும் தென்கிழக்கே கிரேக்கம் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. நாட்டின் பெரும்பாலான பகுதிகள் மலைப்பாங்கானவை. வடக்கே அல்பேனிய ஆல்ப்சு மலைகள், கிழக்கே கோராப் மலைகள், தெற்கே செரோனிய மலைகள், நடுவே இசுக்காண்டர்பெக் மலைகள் அமைந்துள்ளன. அல்பேனியாவின் கரைப் பகுதிகள் மேற்கே ஏட்ரியாட்டிக் கடல், தென்மேற்கே அயோனியன் கடல் ஆகியவற்றைத் தொடுகிறது. கொசோவோ நாட்டிலும், அல்பேனிய மொழி ஆட்சி மொழியாக உள்ளது. கொசோவோவில் வாழ்கின்ற மக்களில் 92 விழுக்காட்டினர் அல்பேனிய இனமக்களாவர். சேர்பியாவிடம் இருந்து பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு ஒருதலைப் பட்சமாக விடுதலையை அறிவித்த நாடாகும் கொசோவோ. இது தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,346.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.