Show all

56அடி அரசமுருகன் அழகாய் இல்லையே! ஆர்ப்பரித்து எழுந்த சமூகவலைதளங்கள்

சேலத்தில் நிறுவ முயற்சித்துள்ள 56 அடி அரச முருகனின் முக அமைப்பு குறித்து, சமூக வலைதளங்களில் பேரளவாக வினாக்கள் எழுந்த நிலையில், இந்த அரச முருகன் சிலையை மாற்றி அமைக்க கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.

29,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5126:

 

சேலம் மாவட்டத்தில், கடவுள்கூறு தெய்வம் என்று தமிழ்முன்னோரால் நிறுவப்பட்ட, சேயோன் என்கிற முருகனுக்கு அதிகமான கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. 

அப்படி ஆத்தூர் அருகே இருக்கும் முத்துமலை முருகன் கோயில் உலகத்தில் உயரமான முருகன் சிலை என்கிற பெருமையை ஈட்டியுள்ளது.

இந்த நிலையில் அதற்கு பிறகு சேலம் மாவட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் முருகன் கோயில் ஒன்று நேற்று  இணையத்தில் பேரளவு விவாதப் பொருள் ஆகியுள்ளது. 

சேலம் தாரமங்கலம் அருகே, அரசமுருகன் கோவிலில் 56 அடி உயரத்தில் முருகன் சிலை வடிவமைத்து அச்சிலையை மக்களின் பார்வைக்காக வைத்துள்ளது கோவில் நிர்வாகம். 

சிலர் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டதால் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று சமூக வலைதளங்களில் முருக பக்தர்கள் பல்வேறு எதிர்க்கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

முருகன் என்றாலே அழகு தானே! ஆனால் இங்கு என்ன முருகனின் முகம் ஒழுங்கின்றி சீரின்றி உள்ளது என கடுமையான சாடலை இணையம் எதிர்கொண்டு திணறி வருகிறது. நேற்று முழுவதும் இது தொடர்பான பதிவுகளை இணையத்தில் மிகமிக அதிகமாக பார்க்க முடிந்தது.

இது குறித்து கோவில் நிர்வாகம் தெரிவிக்கும் போது, சேலத்தில் உள்ள முத்து மலை முருகன் கோவில் சிலையைப் போல் எங்கள் கோயிலிலும் ஒரு சிலையை வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிலை செய்யும் கலைஞர் ஒருவருக்கு இந்தக் கேட்பைக் கொடுத்தேன் 

ஆனால், எப்படி கட்டப்போறோம் சிலையை என்பது குறித்து ஒரு வரைப்படம் கூட சிலை செய்பவர்கள் காட்டவில்லை என தெரிவித்தார். 

இது குறித்து சிலை வடிவமைத்த சிற்பி தெரிவித்தபோது, இதுவரை முருகன் சிலை எங்கும் வடிவமைத்தது கிடையாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் முனியப்பன் சிலை மட்டுமே. அதைத்தான் இதுவரை வடிவமைத்திருக்கிறேன். நீங்கள் தெரிந்தவர் என்ற காரணத்திற்காகத்தான் இதனைச் செய்ய ஒத்துக்கொண்டேன் என கூறியுள்ளார். 

எனினும் அருகில் உள்ள கிராமப்புற மக்கள் கோவிலுக்கு வந்து கடவுள்கூறு தெய்வம் முருகனை வழிபட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இதுவரை இந்த சிலைக்கு 40 லட்சம் ரூபாய் வரை செலவாகியிருக்கும் நிலையில், பக்தர்களின் கோரிக்கைக்கிணங்க முருகன் சிலையை மறுசீரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கோவிலின் நிறுவன தலைவர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,977.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.