தஞ்சாவூரில், ஐம்பொன் சிலைகளை வெளிநாட்டில் விற்பனை செய்வதற்குக் கடத்திச் செல்வதற்காக பதுக்கிவைத்திருப்பது உறுதிசெய்யப்பட்டது. சென்னை சாத்தங்காடு பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் சந்தையில் உள்ள கடை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது சோழர்கால ஆடலரசன் சிலை. 08,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: தஞ்சாவூரில் சிலைகள் செய்யும் நிறுவனம் ஒன்றில், பல நூறு கோடி ரூபாய் மதிப்புடைய பழைமையான 14 ஐம்பொன் சாமி சிலைகள், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்குக் கடத்திச் சென்று விற்பனை செய்வதற்கான முயற்சி சார்ந்ததாவென்று விசாரிக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் சிவாஜி நகரில் கணபதி என்பவர் பல ஆண்டுகளாக ஆர்ட் வில்லேஜ் என்ற பெயரில் சிலைகள் செய்து, விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்திவருகிறார். இந்த சிலைகளை வாங்கும் வகைக்கு கணபதியின் நிறுவனத்துக்கு அடிக்கடி வெளிநாட்டினர் வந்து சென்றதாக கூறப்படுகிறது. கணபதி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பழைமையான ஐம்பொன் சிலைகளை விற்பனை செய்வதற்காக பழங்காலச் சிலைகள் வாங்கக்கூடிய சிலை ஆர்வலர்களைத் தேடிவருவதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை தலைவர் ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில் பத்து காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. கிடைத்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் ஐம்பொன் சிலைகளை வெளிநாட்டில் விற்பனை செய்வதற்குக் கடத்திச் செல்வதற்காக பதுக்கிவைத்திருப்பது உறுதிசெய்யப்பட்டது. பின்னர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் கணபதியின் ஆர்ட் வில்லேஜ் நிறுவனத்தைச் சுற்றிவளைத்து சோதனையில் ஈடுப்பட்டனர். இதில் கடத்துவதற்காக கமுக்க இடத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த பழைமையான 14 உலோகச் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சிலைகளுக்கான எந்த ஆவணமும் அவரிடம் இல்லை. முறையான விளக்கமும் சொல்லவில்லை. மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தச் சிலைகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு இந்திய தொல்லியல்துறையிடம் அனுமதி கேட்டிருக்கிறார். பழைமையான சிலைகள் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதும் தெரியவந்திருக்கிறது. இதே போல ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்திய தொல்லியல் துறையினரிடம் ஆடலரசன் சிலை ஒன்றை காட்டி, அது பழங்கால சிலை இல்லை என்று சான்றிதழ் வழங்க விண்ணப்பித்தார். ஜெர்மனிக்கு அந்த சிலையை கொண்டு செல்லவும் அவர் அனுமதி கோரினார். ஆனால் தொல்லியல் துறையினர், அந்த சிலை பழங்கால சிலை இல்லை என்று சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டனர். குறிப்பிட்ட அந்த ஆடலரசன் சிலை சென்னை சாத்தங்காடு பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் சந்தையில் உள்ள கடை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த கடையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை காவலர்கள் சோதனை நடத்தினார்கள். அப்போது, குறிப்பிட்ட அந்த பழங்கால ஆடலரசன் சிலை அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்து கைப்பற்றப்பட்டது. 4½ அடி உயரம் உள்ள அந்த ஐம்பொன் சிலை பல கோடி ரூபாய் மதிப்புடையது. ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையானது. சோழர் காலத்தைச் சேர்ந்த அந்த சிலை எந்த கோவிலில் திருடப்பட்டது, யாரால் திருடப்பட்டது என்பது தெரியவில்லை. இதுகுறித்து சிலை பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடை உரிமையாளர் பார்த்திபனிடம் விசாரணை நடக்கிறது. அந்த சிலைக்கான ஆவணம் எதுவும் அவரிடம் இல்லை. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,319.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.