Show all

ஆய்வாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது! பொற்பனைக்கோட்டை அகழாய்வில் கிடைத்த பழங்கால ஆணி

இன்று நடந்த பொற்பனைக்கோட்டை அகழாய்வில் கட்டிடங்களின் மேற்கூரை ஓடுகளை இணைக்கும் வகையிலான சுமார் 4 அங்குலம் நீளமுள்ள இரும்பு ஆணி கண்டெடுக்கப்பட்டது ஆய்வாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

20,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: புதுக்கோட்டை மாவட்டத்தில் சங்ககால கோட்டையான பொற்பனைக் கோட்டையில் கடந்த கிழமை அகழாய்வு இயக்குநர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர் இனியன் தலைமையிலான குழுவினர் வேப்பங்குடி கருப்பையா என்ற உழவரின் நிலத்தில் அகழாய்வுப் பணியைத் தொடங்கினர். 

அகழாய்வுப் பணியை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும், தொல்லியல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். அகழாய்வில் பல தடிமன்களில் பானை ஓடுகளும், பாசி மணிகளும் கிடைத்தன. தொடர்ந்து நடக்கும் அகழாய்வுப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிசா பார்த்திபன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பார்த்தசாரதி, அகழாய்வுக்காக அறங்கூற்றுமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வர் பூபதி ஆகியோர் பார்வையிட்டனர்.

அகழாய்வுக்காக அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்த புதுக்கோட்டை தொல்லியல் கழக நிர்வாகிகள் கரு.ராஜேந்திரன், ஆசிரியர்கள் மணிகண்டன், ராஜாங்கம் மற்றும் தொல்லியல் ஆர்வலர் ஆனந்தன் ஆகியோர் கோட்டைப் பகுதியைச் சுற்றி மேலாய்வு செய்த போது கட்டிடத்தின் மேற்கூரை ஓடுகளும் மரச்சட்டங்களுடன் ஆணி வைத்து இணைக்கும் ஓடுகளும் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில் இன்று வரை சுமார் 5 அங்குலம் ஆழத்திற்குத் தோண்டப்பட்ட மண் சலிக்கப்பட்டு பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இன்று புதன்கிழமை மாலை கட்டிடங்களின் மேற்கூரை ஓடுகளை இணைக்கும் வகையிலான சுமார் 4 அங்குலம் நீளமுள்ள இரும்பு ஆணி கண்டெடுக்கப்பட்டது ஆய்வாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதுபோன்ற பொருட்கள் கிடைப்பதால் தொடர்ந்து உற்சாகத்தோடு அகழாய்வுப் பணியைச் செய்துவருகின்றனர் அகழாய்வுக் குழுவினர்.

மேலும் அகழாய்வு குழுவினருக்கான தேவைகளைத் திருவரங்குளம் ஒன்றிய அதிகாரிகளும் வேப்பங்குடி ஊராட்சிமன்றத் தலைவர் ராஜாங்கம் மற்றும் கிராம மக்களும் செய்து வருகின்றனர். இன்னும் சில கிழமைகளில் இப்பகுதியில் கட்டுமானம் கண்டறியப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.