கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பெயர் மாற்றி வெற்றி அறிவிக்கப்பட்ட குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக விஜயலட்சுமி என்பவர் பதவியேற்க ஊரே திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. 22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடலூர் அடுத்த குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஜெயலட்சுமி என்பவர் தானி சின்னத்திலும், விஜயலட்சுமி என்பவர் பூட்டு சாவி சின்னத்திலும் போட்டியிட்டனர். இதில் தானி சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் முதலில் அறிவித்தனர். மறுநாள் காலையில் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. விஜயலட்சுமிக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் அதிகாரிகள் வழங்கினர். இந்த நிலையில் ஜெயலட்சுமியின் ஆதரவாளர்கள் மற்றும் ஜெயலட்சுமிக்கு வாக்களித்த குமளங்குளம் ஊராட்சிகுட்பட்ட சஞ்சீவிராயன் கோவில், ராணிபேட்டை, சூரியம்பேட்டை, மூலக்குப்பம், நரியங்குப்பம், வாண்டராஜன்குப்பம், வன்னியர்புரம், அணைக்கட்டு, புதுப்பாளம் ஆகிய 9 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களின் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற ஜெயலட்சுமிக்கு சான்றிதழ் வழங்காமல், பெயர் குளறுபடியால் விஜயலட்சுமிக்கு வழங்கப்பட்ட வெற்றி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். இந்த குளறுபடிக்கு காரணமான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான பதவியேற்பு விழாவை ரத்து செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனிடையே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட விஜயலட்சுமி தான் தான் தானி சின்னத்தில் போட்டியிட்டதாக அனைவரையும் நம்ப வைக்கும் வகையில், இரவோடு இரவாக தங்கள் பகுதியில் புதிய சுவரொட்டி விளம்பரங்களை ஒட்டி மக்கள் மத்தியில் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தினர். இந்நிலையில் குமளங்குளம் ஊராட்சிமன்ற தலைவராக விஜயலட்சுமி பதவிஏற்கும் விழா, வாண்டராஜன்குப்பம் பகுதியில் உள்ள கிராம சேவை மையத்தில் இன்று நடைபெற இருந்த நிலையில், இன்று காலை ஜெயலட்சுமியின் ஆதரவாளர்கள் 1000 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பதவி ஏற்பு விழா நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விஜயலட்சுமியை ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்பதை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எங்களது வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் அரசு ஆவணங்கள் அனைத்தையும் உங்களிடம் ஒப்படைத்து விடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து காவல்துறையினர் கலந்துரையாடல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஜெயலட்சுமியின் தரப்பினர் அறங்கூற்றுமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,389.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.