Show all

இன்னும் இரண்டு கிழமைகள் தொடரவுள்ள 46-வது சென்னை புத்தகக் காட்சி

புத்தக கண்காட்சியில் பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களை கொண்ட 1000 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மேலும் பல புதிய புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.

22,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123:

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த, தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 46-வது சென்னை புத்தகக் காட்சி- நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் சிறப்பாக நடந்தேறி வருகிறது.

தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 46-வது புத்தகக் காட்சி சென்னை நந்தனம், ஒய்எம்சிஏ திடலில் 21,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123 (06.01.2024) அன்று தொடங்கப்பட்டு இன்னும் இரண்டு கிழமைகள் தொடரவுள்ளது. 

தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.வயிரவன், செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

நடப்பாண்டு அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி புத்தகக் காட்சி மொத்தம் 17 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த புத்தகக் காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவில் தேவி பாரதி (நாவல்), சந்திராதங்கராஜ் (சிறுகதை), தேவதேவன்(கவிதை), சி.மோகன் (மொழிபெயர்ப்பு), பிரளயன் (நாடகம்), பா.ரா.சுப்பிரமணியன் (உரைநடை) ஆகிய 6 பேருக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரிலான பொற்கிழி விருதுடன், தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். அதனுடன் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 'பதிப்பகச் செம்மல்' விருது உட்பட சிறப்பு விருதுகளும் அளிக்கப்படும்.

கடந்த ஆண்டு 800 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. அதில் குழந்தைகளின் சிறார் நூல்களுக்கு சிறப்பு அரங்கம் அமைக்கப்படுகிறது. திருநங்கையர்களால் நடத்தப்பட்டு வரும் 'குயர் பப்ளிசிங் ஹவுஸ்' நிறுவனத்துக்கும் தனி அரங்கம் தரப்பட்டுள்ளது. கண்காட்சியில் இலங்கை, சிங்கப்பூர் உட்பட வெளிநாடுகள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

அன்றாடம் மாலையில் நடைபெறும் சிந்தனை அரங்கில் தலைசிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். இந்த ஆண்டு பன்னாட்டு புத்தகக் காட்சியை நடத்தவுள்ளதாக தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தது. அதன்படி தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் புத்தக காட்சிக்கு அருகே இதற்காக தனிஅரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பன்னாட்டு புத்தகக் காட்சி சன.16, 17, 18-ம் நாட்களில் நடைபெற உள்ளது. இதில் 30 முதல் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.

கெரோனா பரவல் தொடர்பாக தமிழக அரசு வழங்கும் வழிமுறைகளைப் பின்பற்றி கண்காட்சியை நடத்துவோம். இந்த முறை வாகன நிறுத்தம், தொலைத்தொடர்பு வசதிகள் மேம்பாட்டுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. படிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச நுழைவுச்சீட்டுகள் வழங்க உள்ளோம். கூடுதல் விவரங்களை www.bapasi.com  என்ற இணையதளத்தில் அறியலாம்.

குறைந்த அளவிலான புத்தகங்கள் கொண்டவர்களுக்கு தனி அரங்குகள் வழங்க முடியாத சூழல் உள்ளது. அவர்களுக்கு நிலைப்பேழைகள் ஒதுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புத்தகக் காட்சியை அன்றாடம் காலை 11 முதல் இரவு 8.30 மணிவரை பொதுமக்கள் பார்வையிடலாம். நுழைவுக் கட்டணமாக ரூ.10 வாங்கப்பட உள்ளது
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,851.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.