Show all

தொடரும், அயல்கொண்டாடும் அவலம்!

இந்தியா விடுதலை பெற்ற காலத்திலிருந்து, தமிழுக்கான தகுதிப்பாட்டைப் பேணவேண்டிய முன்னெடுப்பு- திமுக, அதிமுக ஆட்சியிலும் தொடங்கப்பட வில்லை என்பதை தெளிவுபடுத்துவதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

12,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5126:

இந்தியா விடுதலை பெற்ற காலத்திலிருந்து தமிழ்நாட்டுக் கல்வியில் தமிழ் பாடப்பிரிவுக்கு இரண்டாவது மொழிகளில் ஒன்று என்கிற நடவடிக்கையே பேணப்பட்டு வருகிறது. தமிழ் என்கிற தலைப்பு இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டை தொடர்ந்து நாம் வலியுறுத்தி வருகிறோம். 

அதுபோலவே, இந்தியா விடுதலை பெற்ற காலத்திலிருந்து, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் உதவி காப்பாட்சியர் பணிகளுக்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்பது திமுக, அதிமுக ஆட்சிகளிலும் தொடர்ந்து பேணப்பட்டு வருகிறது தமிழ் முதன்மையை தகுதியாக்க முனையவில்லை என்கிற  குற்றச்சாட்டையும் தொடர்ந்து நாம் வலியுறுத்தி வருகிறோம்.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நேற்று நேர்முக தேர்வுகள் அல்லாத பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. 

இதில் தொல்லியல் துறையின் உதவி காப்பாட்சியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களில் சம்ஸ்கிருத அறிவு பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று வழக்கம் போல தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த முறை இந்த அறிவிப்பு, கொஞ்சம் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்த அறிவிப்பில், 'உதவி காப்பாட்சியர் (தொல்லியல்) பணிக்கு சமஸ்கிருத பட்டப்படிப்புடன் திராவிட மொழிகள் மற்றும் பண்டைய இந்திய வரலாறு பற்றிய அறிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அல்லது தொல்லியலில் பட்டப்படிப்பு (சமஸ்கிருத பணி அறிவுடன் சமஸ்கிருதத்தில் உயர் தகுதி) மற்றும் திராவிட மொழிகள் மற்றும் எழுத்துகள் மற்றும் பண்டைய இந்திய வரலாறு ஆகியவற்றில் அறிவு பெற்றிருக்க வேண்டும். 

மேற்படி கல்வித் தகுதியுடன் கூடிய தேர்வர்கள் இல்லாத பட்சத்தில் வரலாறு பட்டத்துடன் சமஸ்கிருத பணி அறிவு பெற்ற தேர்வர்கள் கருதப்படுவர். சமஸ்கிருதத்தில் உயர் தகுதி பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை உண்டு' என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதுபோலவே, புதுக்கோட்டை அரசு அருங்காட்சியத்தின் உதவி காப்பாட்சியர் பணிக்கு, 'சமஸ்கிருத பட்டப்படிப்புடன் திராவிட மொழிகள் பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும். பண்டைய வரலாறு, தொல்லியல், விலங்கியல், தாவரவியல், நிலத்தியல், வரலாறு என இதில் ஏதாவது ஒன்றில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (சமஸ்கிருதத்தில் பணி அறிவுடன்)' என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

தமிழ்நாட்டில் பொற்பனைக்கோட்டை, மருங்கூர், சென்னானூர், கீழடி என பல்வேறு இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த இடங்களில் நாணயங்கள், முதுமக்கள் தாழி, பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய கருவிகள், நகையணிகள், விளையாட்டு பொருட்கள் என பல கிடைத்திருக்கின்றன. இப்படி கிடைத்த சில பொருட்களில் கல்வெட்டுக்களும் இடம் பெற்றிருக்கின்றன. கல்வெட்டுக்கள் அனைத்தும் தமிழில் கிடைக்கின்றன. 

இப்படி இருக்கையில் சமஸ்கிருதம் தொடர்பான அறிவு தேவை என்று கேட்டிருப்பது பொருத்தமற்றதாக இருப்பதாக தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இதில் உடனடியாக தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,054.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.