ஒரேயோர் ஆசிரியர் ஒருவர் தடுப்பூசி போடாவிட்டாலும் பள்ளியைத் திறக்க அனுமதி கிடையாது என்று கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள், வருகிற புதியம்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட இருக்கின்றன. இதில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிகள் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றன. நலங்குத்துறை சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் என அனைவரும் கண்டிப்பாக 2 தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் 2 தவணை தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அந்த மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். அதில், ஒரேயோர் ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும், அவர் சார்ந்த பள்ளி திறக்க அனுமதிக்கப்படமாட்டாது என்றும், அந்த ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆகவே இதில் கவனம் செலுத்தி ஏதேனும் ஆசிரியர் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் அவர்களை தடுப்பூசிபோட அறிவுறுத்துமாறு அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மொட்டு வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்துவகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் இம்மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டு உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.