Show all

புதிய விதிமுறைகள் வெளியீடு! வழக்கறிஞர்கள் இல்லாமல் தாமாக அறங்கூற்றுமன்றத்தில் வாதம் செய்யும் முறைக்கு

சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில், வழக்கு விசாரணையின்போது, வழக்கறிஞர்கள் உதவி இல்லாமல் தாமாக அணியமாகி வாதிடுவதை முறைப்படுத்த என்ற தலைப்பில், சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் புதிய நடைமுறைகளை வரையறுத்துள்ளது. அது தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
 
25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் மற்றும் மதுரை உயர் அறங்கூற்றுமன்றக் கிளையில், வழக்குகளை பதிகை செய்யும் சிலர், வழக்கறிஞர்கள் உதவி இல்லாமல் தாங்களாகவே விசாரணையின்போது அணியமாகி வழக்காடி வருகின்றனர். 

இந்த உரிமை- சட்டத்தால் வழங்கப்பட்டிருந்த போதும், இதுவரை அந்த முயற்சியை முன்னெடுக்காமல் இருந்தனர். வழக்கறிஞர் மூலம் வாதிடும் வழக்கில் நிறைவு அளிக்காத நிலை பலருக்கும் ஏற்பட்டுள்ளது. அதனை பல திரைப்படங்களிலும் நையாண்டியாக காட்டியிருக்கிறார்கள். 

இவ்வாறன நிலையில், தங்கள் வழக்கை தாங்களே வாதிட்டுக் கொள்ளும் நடைமுறை வளர்ந்து வருகிறது. இதில் அறங்கூற்று மன்றத்திற்கு என்ன சிக்கல் என்று தெரியவில்லை. அந்த முறைக்கு கிடுக்கிப்பிடி போட- இந்த முறையை ஒழுங்குப்படுத்துவதற்காக என்று, சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் புதிய நடைமுறைகளை வரையறுத்துள்ளது. அது தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தன் வழக்கிற்காக நேரில் அணியமாகி வாதாட விரும்புபவர்கள் முதலில் அதற்கு அனுமதிகோரி மனு அளிக்க வேண்டும். அந்த மனுவில் நோட்டரி வழக்கறிஞர் அல்லது வழக்கறிஞர் ஆணையர் சான்றொப்பம் இடவேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட நபர் தனது வழக்கிற்காக ஏன் வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க விரும்பவில்லை? என்பதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டும்.

அந்த நபர் தொடர்ந்த வழக்கிற்காக அவருக்கு உதவ வழக்கறிஞர் ஒருவரை உயர் அறங்கூற்றுமன்றம் நியமிக்கும்பட்சத்தில் எந்தவித நிபந்தனையும் இன்றி அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தனிநபர்கள் அணியமாகி வாதாடுவதை ஒழுங்குபடுத்த ஒரு குழு ஏற்படுத்த வேண்டும்.

இந்த குழு, சம்பந்தப்பட்ட நபர் இலவசமாக சட்ட உதவி பெற தகுதி பெறும் நபராக இருக்கும்பட்சத்தில் இலவச சட்ட உதவிகளை அளித்து வரும் வழக்கறிஞர்கள் மூலம் மனுவை பதிகை செய்ய பரிந்துரைக்க வேண்டும்.

முன் அனுமதி கோரிய மனு, முதன்மை மனு ஆகியவை இந்த குழுவால் பரிசீலிக்கப்பட்டு அனுமதிக்கப்பட வேண்டும்.

தனிநபர்களை நேரில் அணியமாகி வாதாட அனுமதிக்கும்பட்சத்தில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் பேச வேண்டும் என்றும், தகாத வார்த்தைகள் எதையும் பயன்படுத்தக்கூடாது என்றும் குழு அறிவுறுத்த வேண்டும். இதுதொடர்பாக அவர்களிடம் இருந்து உத்தரவாதம் பெற வேண்டும் என அரசிதழில் கூறப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,333.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.