Show all

அதிர்ச்சியோடு உடனடியாக சரிசெய்யப்பட்டது! இடவலமாற்றமாக அச்சிடப்பட்டிருந்த திருவள்ளுவர் படம்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறை சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சிக்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில், திருவள்ளுவர் படம் இடவலமாற்றமாக அச்சிடப்பட்டிருந்தது. இதை அறிந்த நிலையில்- அதிர்ச்சியோடு உடனடியாக சரிசெய்யப்பட்டது! 

26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறை சார்பில் நடைபெற உள்ள சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழில், திருவள்ளுவர் படம் இடவலமாற்றமாக அச்சடிக்கப்பட்டிருந்ததால் தமிழ் ஆர்வலர்கள் பலரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது.

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை மர்ம நபர்கள் அவமதிப்பு செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இது தொடர்பாக தங்களுடைய கண்டனத்தைத் தெரிவித்தனர். தமிழ்ப் பல்கலைக் கழக மாணவர்கள் பல்கலைக்கழக வாயிலில் இதற்காகப் போராட்டமும் நடத்தினர்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், இலக்கியத்துறை, நாளை- ம.நடராசன் நினைவு அறக்கட்டளை சார்பில் சொற்பொழிவு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்ட அழைப்பிதழில், திருவள்ளுவர் படத்தில், வலது கையில் இருக்க வேண்டிய எழுத்தாணி இடது கையிலும் இடது கையில் இருக்க வேண்டிய சுவடி வலது கையிலும் இருப்பது போல இடவலமாற்றத்துடன் அச்சடிக்கப்பட்டிருந்தது.

இதைக் கண்ட தமிழ் ஆர்வலர்கள் பலரும் அதிர்ச்சி யடைந்ததுடன் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர். மேலும், திருவள்ளுவர் படம் தவறாக அச்சடிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் தமிழ்ப் பல்கலைக் கழக நிர்வாகத்துக்கும் சென்றது.

இதைத் தொடர்ந்து அவசர அவசரமாக அடுத்த ஒரு மணி நேரத்தில் திருவள்ளுவர் படம் சரியாக இருப்பதுபோல் புதிய அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இது தற்செயலாக நடந்தது எனப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து தமிழ் ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், தமிழின் வளர்ச்சிக்காகத் தொடங்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அதன் துணைவேந்தர் கலந்துகொண்டு தலைமை உரையாற்ற உள்ள நிகழ்ச்சிக்கு அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில், திருவள்ளுவரின் அமைப்பையே மாற்றிப்போட்டு அச்சிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை உடனே அவர்கள் சரி செய்தாலும் வரும் காலங்களில் தமிழ் மற்றும் திருவள்ளுவர் தொடர்பில் அலட்சியமாக இருக்கக் கூடாது என்பதை இந்தத் தவறு உணர்த்துகிறது என்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,334.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.