எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது வழக்கை முடித்து வைக்கும் வாய்ப்பை தவற விட்டதால், திமுக அரசு இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி உள்ளது. கோடநாடு வழக்கு இந்தக் கோணத்தில் பேசுபொருளாகியுள்ளது. 03,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கோடநாடு வழக்கு தொடர்பான விசாரணைகள் தற்போது சூடு பிடித்து உள்ளது. தனது ஆட்சிக்கு கீழேயே கோடநாடு வழக்கு விசாரணையை முடிக்கும் நல்ல வாய்ப்பை எடப்பாடி பழனிச்சாமி தவறவிட்டு இருக்கிறார். இதுவே தற்போது இவருக்கு எதிராக திரும்பும் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. கோடநாடு வழக்கு தற்போது மிக முதன்மையான கட்டத்தை எட்டி இருக்கிறது. கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் இரண்டும் நடைபெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயன் மீது தீவிரமான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்வர் செயலலிதாவின் தோட்டமனை மற்றும் மாளிகை இருக்கிறது. செயலலிதா முதல்வராக இருந்த போது இங்கு அடிக்கடி தங்குவது வழக்கம். தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி வரும் போதெல்லாம் முதல்வர் இல்லத்திற்கு இணையான பாதுகாப்போடு இந்த மாளிகை பார்க்கப்பட்டது. ஆனால் செயலலிதாவின் மறைவிற்கு பின் இங்கு பெரிய அளவில் பாதுகாப்பு பணிகள் செய்யப்படுவது இல்லை செயலலிதா மறைவிற்கு பின் பெரிதாக பயன்பாடு இன்றி இந்த மாளிகை பாதுகாப்பு இன்றி இருந்தது. இங்கு இருந்த 20க்கும் அதிகமான கண்காணிப்பு படக்கருவிகளில் சில சரியான பயன்பாட்டிலும் இல்லை. இந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு பெரிய கொள்ளை நடைபெற்றது. இதில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்தக் கொடூரமான நிகழ்வில் பாதுகாவலர் ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் பல்வேறு புகார்கள், குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இந்தக் கொலை மற்றும் கொள்ளை வழக்கு திரைப்படத்தில் காட்டப்படுவது போல பல திருப்பங்களுடனும், புதிர்களுடனும் நகர்ந்து சென்றது. இதையடுத்து சயான், மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது இந்த வழக்கில் புகார் வைக்கப்பட்டது. சயன், மனோஜ், கனகராஜ் ஆகிய மூன்று பேரும் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்டனர். கனகராஜ் ஒரு விபத்தில் பலியானார். அதோடு சயனும் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பினார். இதனால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பேசவிடாமல் செய்ய கொலை முயற்சிகள் நடக்கிறதோ என்று பலர் சந்தேகங்களை எழுப்பி இருந்தனர். இந்த வழக்கில் சயனுக்கு பிணை வழங்கப்பட்டது. சயானை தொடர்ந்து மனோஜிற்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில்தான் தற்போது சயன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. சயனை காவல்துறையினர் மீண்டும் விசாரித்து வருகின்றனர். புதிய விசாரணையில் பல உண்மைகள் வெளியே வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சொல்லித்தான் நான் இப்படி செய்தேன். கனகராஜுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருக்கிறது, என்று சயன் வாக்குமூலம் அளித்ததாக செய்திகள் பரவி வருகின்றன. இதனால்தான் தற்போது சயன் மீதான விசாரணையை அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட நடவடிக்கை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 4 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு தற்போது எடப்பாடி பழனிசாமிக்கே எதிராக திரும்பி வருகிறது. நான்கு ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கை முன்பே முடித்து இருந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு இப்படி சிக்கல் ஏற்பட்டு இருக்காது. உதகை அறங்கூற்று மன்றத்தில் நடந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி ஏற்கனவே சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் 2 முறை அறிவுறுத்தி இருந்தது. அதன்படி திமுக ஆட்சிக்கு முன்பாக வழக்கை விசாரித்து முடித்து இருந்தால் பெரிய சிக்கல், அழுத்தம் அதிமுக தரப்பிற்கு இருந்திருக்காது. ஆனால் வழக்கை எடப்பாடி பழனிச்சாமி விரைந்து முடிக்க நடவடிக்கை எதுவும் அப்போது எடுக்கவில்லை. இறுதிக்கட்ட விசாரணையிலேயே வழக்கு இருந்த போது ஆட்சி மாறிவிட்டது. 4 ஆண்டுகளில் வழக்கை விசாரித்து முடித்து இருந்தால் திமுக அரசு மீண்டும் அந்த வழக்கை எடுத்து, அறங்கூற்றுமன்ற அனுமதியோடு மறு விசாரணை நடத்திட முயன்றிருக்காது. ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது வழக்கை முடித்து வைக்கும் வாய்ப்பை தவற விட்டதால் திமுக அரசு இந்த வழக்கை கெட்டியாக பிடித்துக்கொண்டு விசாரணையை துரிதப்படுத்தி உள்ளது என்ற போச்சு அரசியல் மட்டத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.