இன்று முதல் சென்னையில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ளதில் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 14,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டு அரசின் உத்தரவின்படி இன்று முதல் சென்னையில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படாததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சென்னையைச் சுற்றிய இடங்களில் செயல்பட்டு வரும் ஒன்றிய அரசின் சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக சட்ட மன்றத்தில் சில நாட்களுக்கு முன் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார். தமிழ்நாடு சட்டமன்ற நிதிநிலைக் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திருவையாறு தொகுதி திமுக உறுப்பினர் துரைசந்திரசேகர், ‘தமிழ்நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை கடந்து வருவதில் தாமதம் ஏற்படுகிறது, நீண்ட நேரம் அனைவரையும் காக்க வைக்கின்றனர். எனவே, ஒன்றிய அரசிடம் பேசி சில சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த வேண்டும்’ என்றார். இதற்கு பதிலளித்து எ.வ.வேலு, சென்னைக்கு அருகிலுள்ள 5 சுங்கச்சாவடிகளைக் கடக்க அதிக நேரம் எடுக்கும் என்பது உண்மைதான், இவை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். எனவே, சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த முயற்சிகளை அரசு செய்யும் என்றார். இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் எந்த ஒரு வாகனத்திற்கும் இன்று முதல் கட்டணம் வசூலிக்கபடாது என தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் நள்ளிரவு 12 மணி முதல் சென்னை பெருங்குடி, துரைப்பாக்கம் ரேடியல் சாலை, மேடவாக்கம் முதன்மைச் சாலை, கிழக்குக் கடற்கரை சாலை செல்லும் கலைஞர் கருணாநிதி சாலை ஆகிய பகுதியில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் இல்லாமல் சென்று வருகின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.