Show all

மேட்டூர் அணை தூர்வாரப்படுவதால் கூடுதலாக 10 விழுக்காடு தண்ணீர் தேக்க முடியும்.

     மேட்டூர் அணை தூர் வாரும் பணி இன்று தொடங்கியது. இந்த அணை கடந்த 1934-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.

     மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை திகழ்கிறது.

     அணை கட்டி முடிக்கப்பட்டு 83 ஆண்டுகளாகி விட்ட நிலையில், இதுவரை தூர்வாரப்படவில்லை. இந்தக் காலக்கட்டத்தில் அணைக்கு வௌ;ளக் காலங்களில் மழைநீருடன் செம்மண், களிமண் கலந்து பெருக்கெடுத்து நீர்வரத்து காணப்பட்டது. இதனால் அணை நீர்த்தேக்க பகுதியில் வண்டல் மண் தேங்கத் தொடங்கியது.

     இதன் காரணமாக அணையின் நீர்த்தேக்கப் பரப்பு நாளடைவில் குறைய தொடங்கியது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தாலும் மொத்த கொள்ளளவில் சுமார் 20 விழுக்காடு வண்டல் மண் நிரம்பி இருப்பதால் அணையில் போதிய நீரை தேக்க முடியாத சூழல் ஏற்பட்டதாக கழிமுக  பாசன விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.     இதையடுத்து அணை புனரமைப்பு திட்டத்தின் கீழ் நடுவண் அரசின் முகவர்அமைப்;பான வெப்காஸ் மூலம் மேட்டூர் அணையை தூர்வாருவதற்கான இறுதிக்கட்ட ஆய்வுப்பணிகள் நடந்து இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடுவண் அரசின் அனுமதி பெற்று அணை தூர்வாரும் பணி தொடங்க முடிவு செய்யப்பட்டது.

     இன்று மேட்டூர் அணையின் நீர் தேக்கப் பகுதியான மூலக்கடை பகுதியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூர்வாரும் பணி மற்றும் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

     மேட்டூர் அணை கட்டும் பணி கடந்த 1925-ம் தொடங்கப்பட்டு 1934-ம் ஆண்டு நிறைவு பெற்றது. அணையை கட்டி முடிக்க அப்போது 4.8 கோடி செலவிடப்பட்டது.

     இந்த அணையில் 120 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியும். அணை கொள்ளளவு 93.470 டி.எம்.சி., கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 16 ஆயிரத்து 300 சதுர மைல். அணையின் நீர்பரப்பு பகுதி 59.25 சதுர மைல்.

கழிமுக மாவட்டங்களுக்குத் தண்ணீர் திறக்கும் போது அணை மற்றும் சுரங்க மின் நிலையங்களில் இருந்து 250 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும். மேலும் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் 12 மாவட்டங்களில் 16.35 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

     அணை கட்டப்பட்டு இது வரை 35 ஆண்டுகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் மேற்கு மற்றும் கிழக்கு கரை கால்வாய், நாமக்கல் மாவட்ட கிழக்கு கால்வாய்கள் ரூ.50 கோடி செலவில் புணரமைக்கப்பட உள்ளது.

     இதே போல தமிழகம் முழுவதும் மற்ற அணைகள், ஏரி, குளங்களும் தூர் வாரப்படும். மேட்டூர் அணை தூர்வாரப்படுவதால் கூடுதலாக 10 விழுக்காடு தண்ணீர் தேக்க முடியும். இதனால் விவசாயிகள் பயனடைவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

     வண்டல் மண் எடுப்பது பற்றி தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

     தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளில் விவசாயிகள் நஞ்சை நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டருக்கு (25 டிராக்டர் லோடுகள்) மிகாமலும், புஞ்சை நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டர் (30 டிராக்டர் லோடுகள்) மிகாமலும், நீர் நிலைகளிலிருந்து வண்டல் மண் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

     மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்கள் தொழிலுக்காக கூடுதலாக 60 கன மீட்டருக்கு மிகாமல் களிமண்ணையும், பொதுமக்கள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக 30 கனமீட்டருக்கு மிகாமல் வண்டல் மண், சவுடுமண், சரளைமண் ஆகியவற்றை கட்டணமில்லாமல் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

     தமிழகத்தில் 9,986 நீர்நிலைகளிலிருந்து 44,10,472 கனமீட்டர் வண்டல் மண் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 86,355 விவசாய பெருமக்கள் உள்ளிட்ட பயனீட்டாளர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.