Show all

தமிழே அடையாளம்! கூச்சம் எதற்கு? ஆங்கிலம் படித்தாலும், ஆங்கிலத்தில் படித்தாலும் தமிழன் தமிழனே

ஆங்கிலம் படிக்கலாம் அது மிகச்சரி. ஆங்கிலத்தில் கூட படிக்கலாம் அது தப்பு இல்லை. ஆனால் ஆங்கிலம் படிக்கிறோம் என்பதற்காகவோ, ஆங்கிலத்தில் படிக்கிறோம் என்பதற்காகவோ என்தாய் மொழி தமிழ் என்று உரக்கச் சொல்வதற்கு கூச்சப்பட வேண்டிய தேவையோ கட்டாயமோ எதுவும் இல்லை.

17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆங்கிலம் படிக்கலாம் அது மிகச்சரி. ஆங்கிலத்தில் கூட படிக்கலாம் அது தப்பு இல்லை. ஆனால் ஆங்கிலம் படிக்கிறோம் என்பதற்காகவோ, ஆங்கிலத்தில் படிக்கிறோம் என்பதற்காகவோ என்தாய் மொழி தமிழ் என்று உரக்கச் சொல்வதற்கு கூச்சப்பட வேண்டிய தேவையோ கட்டாயமோ எதுவும் இல்லை.

தமிழ் நமது தாய்மொழி என்று பெருமையாகப் பேசுகிறவர்களிடம், நீங்கள் ஆங்கிலமோ, ஆங்கிலத்திலோ படிக்கிறவர் என்பதற்காக, உடனே அவர் தனித்தமிழில் பேசுகிறாரா என்ற சோதனைக்கு உட்படுத்தி அசிங்கப் படுத்த வேண்டிய தேவையோ கட்டாயமோ எதுவும் இல்லை. தமிழ் தாய்மொழி என்பதற்கான பெருமை, அவருக்கானது மட்டுமல்ல உங்களுக்கானதும்தாம். அதுமட்டுமல்ல ஆங்கிலம் கூட தனி ஆங்கிலம் இல்லை. 

ஆங்கிலம் என்பது ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த நாடுகளிலும், உலகில் மற்ற பல்வேறு நாடுகளிலும் இரண்டாவது மொழியாகவும், அரசு அலுவல், அறிவியல், வணிகம், ஊடகம், அரசியல் என பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இப்படிப் பரந்து விரிந்து அன்றாடம் வளரும் மொழியான ஆங்கிலம் ஒரு கலப்பு மொழியாகும். எடுத்துக்காட்டாக அறிவியலில் ஒரு தலைப்பை எடுத்து நாம் படிக்கும்போது ‘This word is derived from this language’  அதாவது ‘இந்தச் சொல் இந்த மொழியிலிருந்து பெறப்பட்டதாகும்’ என்று கூறித் தொடங்கும். ஆங்கிலத்தின் வேர்ச் சொற்களில் பத்து விழுக்காடு சொற்கள் தனித்தமிழ் சொற்கள் என்று நிறுவுவார் பாவாணர்.

பெரும்பாலாக நாம் படிக்கும் சொற்கள் ஆங்கிலம் அல்ல, அது பல மொழிகளிலிருந்து சொற்களை உள்வாங்கிய மொழியாகும். கலப்பு மொழியான ஆங்கிலம் முதன்மையாக கிரேக்கம், லத்தீன், ஜெர்மானியம், மற்றும் தமிழ் என பல்வேறு மொழிகளிலிருந்து பல சொற்களால் கலந்து உருவெடுத்து வளர்ந்து வரும் மொழியாகும். கலப்பு மொழியான ஆங்கிலம், ஒரு நாடு சார்ந்த மொழியாக வளர்ந்தது அல்ல. அது ஏறத்தாழ 1500 ஆண்டுகள் முன்னர் இங்கிலாந்தில் வாழ்ந்த ஆங்கிலோ-சாக்சன் என்ற சிறு மக்கள் குழுவின் மொழியாக இருந்தது. ஆனால், அது அதிவேகமாக வளர்ந்தது, ஆங்கிலேயர்கள் எங்கெல்லாம் ஆட்சி செய்தார்களோ அங்கெல்லாம் அதை நடைமுறைப்படுத்திச் சென்றனர். ஆனால், இன்றும் பல நாடுகள் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை அடைந்தும் ஆங்கிலத்தையே அரசு அலுவல் முதல் அறிவியல் வரை பயன்படுத்தி வருகின்றனர். அது இன்று பல்வேறு புதுமையான சொற்களைக் கொண்ட மொழியாகவும் இருக்கிறது. 

நீங்கள் ஆங்கிலமோ, ஆங்கிலத்திலோ படிக்கிற காரணத்தில் உங்கள் தாய்மொழி தமிழை மறந்தா போய்விட்டீர்கள். இல்லவேயில்லை. ஆனால் ஆங்கிலம் எல்லாத் துறைகளிலும் பயன்படுத்துவதால் தாய்மொழியில் உள்ள புலமை கரைந்து போகிறது. 

பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை ‘ஆங்கில வழிக் கல்வி’ கற்க முற்படுத்துகிறார்கள். பிள்ளைகளும் தங்களது தாய்மொழியையும், ஆங்கிலத்தையும் குழப்பிக்கொண்டு கல்வி கற்கின்றனர். இவ்வாறு கற்கும்போது ரெண்டுகட்டானாக படித்து செய்வது அறியாது பிறமொழியை தேர்ந்தெடுக்கிறார்கள். அதிலும் புலமை பெறுகிறார்களா எனக் கேட்டால், இல்லை. இப்படிச் சிறு அகவை முதலே அவர்களை ஆங்கிலம் படிக்க உந்துவதால் அவர்களால் ஆங்கிலம், தாய்மொழி, பிறமொழி என எந்தவொரு மொழியையும் முழுமையாகப் பயில முடியாமல் போகிறது. இவ்வாறு பயில முடியாமல் வாழ்க்கையில் தடுமாறுகிறார்கள், ஆங்கிலத்தில், தங்களது தாய்மொழி, பிறமொழி என வெறும் சில சொற்களைத் தெரிந்துகொண்டு வாழ்ந்து வருகிறார்கள். 

அப்படியானால் என்னதான் சிக்கல்? ஆங்கிலம் படிக்கிறோம் என்பதற்காகவோ, ஆங்கிலத்தில் படிக்கிறோம் என்பதற்காகவோ- தாய்மொழியின் பெருமையைப் போற்றிக் கொள்ள மறுப்பதும், தாய்மொழியில் புலமை பெற முயலாதிருப்பதும், தமிழை உங்கள் தாய்மொழி என்று அடையாளப் படுத்தவும் அறிவித்துக் கொள்ளவும் கூச்சப்படுவதும் தான் சிக்கல். 

உலகத்தில் தமிழைப் படிக்கிற பிறமொழியாளார்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். உலகில் பல நாடுகளில் தமிழ் படிக்க பிறமொழியாளர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் எல்லாம் தங்கள் தாய்மொழி அடையாளத்தை இழந்து நம்மைப் போல இரண்டுங் கெட்டானாகவா ஆகிவிட்டார்கள்? இன்னொரு மொழி படிப்பது என்பது ஒரு துறை. தாய்மொழி என்பது வாழ்க்கை. தாய்மொழியை தன் உயிர்காற்றால்தான் தாய் நமக்கு பயிற்றுவிக்கிறாள்; தாய்மொழி நமது உயிர். தாய்மொழி நமது அடையாளம். அடையாளத்தை இழக்கக் கூடாது.

நமது முன்னோர்கள் தங்கள் அடையாளத்தை இழக்க வேண்டிய ஒரு சூழலில் மிகவும் தெளிவாக இருந்தார்கள் என்பதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு: ‘ஆரியக்கூத்து ஆடினாலும் காரியத்தில் கண் வையடா தாண்டக் கோனே’ என்று ஒரு சொலவடை உண்டு.

தமிழகத்தில் நுழைந்த ஆரியர்கள், தங்கள் கலையான ஆரியக் கூத்தை தமிழ் மன்னர்களிடம் ஆடிக்காட்டி பரிசில் பெற்றிருக்கிறார்கள். தமிழ் மன்னர்கள்- தமிழ்க்கூத்துக் கலைக்கு நிலமும் நிலத்தில் விளையும் பயனையும் பரிசாக அளித்து வந்த நடைமுறை இருந்தது. ஆரியர்கள் பிறமண்ணிலிருந்து வந்து ஆரியக்கூத்து ஆடியதால், அவர்களுக்கு நிலமும் நிலத்தில் விளையும் பயனையும்  பரிசாக அளிக்காமல், பொன்னையும், பொருளையும் பரிசாக அளித்தார்கள் தமிழ் மன்னர்கள். 

ஆரியர்களுக்கு தமிழ்க்கூத்துக் கலைஞர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்று தமிழ்மன்னர்களுக்கு தெளிவு படுத்த தமிழ்க்கூத்துக் கலைஞர்கள் ஆரியக்கூத்தையும் கற்று ஆடிக்காட்டியிருக்கிறார்கள். ஆரியக்கூத்துக் கலைக்கு, தமிழ் மன்னர்கள் பொன்னும் பொருளும் பரிசு அளித்து வந்த நிலையில், ஆரியக்கூத்து ஆடிய தமிழ்க்கூத்துக் கலைஞர்களுக்கும், பொன்னும் பொருளும் பரிசளிக்க முயல, தமிழ்க் கூத்துக் கலைஞர்கள் அதை மறுத்து, ஆரியக்கூத்து ஆடினாலும் தமிழ்க்கூத்துக் கலைஞர்களுக்கு, நிலமும் நிலத்தில் விளையும் பயனையும்  பரிசாக அளிக்க வேண்டும் என்ற நிலையில்தாம்- ஆரியக்கூத்து ஆடினாலும் காரியத்தில் கண் வையடா தாண்டக் கோனே என்று ஒரு சொலவடை உருவானதாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,325.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.