வலிமை அறியும் வகைக்கானது என்பதால், உள்ளாட்சி தேர்தலை தனித்து எதிர்கொள்வது பெரும்பாலான கட்சிகளின் நடைமுறையாக இருந்து வருகிறது 30,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான, வேட்புமனு பதிகை இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. எதிர்வரும் 20,புரட்டாசி மற்றும் 23 (அக்டோபர் ஆறு மற்றும் ஒன்பது) ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு பதிகை இன்று தொடங்குகிறது. அலுவலக நாட்களில் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வேட்பு மனுக்களைப் பதிகை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் புதியம்கிழமை வேட்புமனு பதிகை செய்ய கடைசி நாள் என்றும், அதற்கு அடுத்த நாளே வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, 26,புரட்டாசி (அக்டோபர் 12) அன்று நடைபெறும். உள்ளாட்சி தேர்தலை தனித்து எதிர்கொள்வது பெரும்பாலான கட்சிகளின் நடைமுறையாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஒன்பது மாவட்டங்களில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட கழக அலுவலகங்களில் உரிய கட்டண தொகையை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று நிறைவு செய்து வழங்கலாம் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,007.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.