சுபசிறி இருபது நாட்களுக்கு முன்பு கோவை ஈசாயோகா மையத்திற்கு பயிற்சிக்காக வந்துள்ளார். மாயமான அவரது உடல் தற்போது ஒரு கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பரபரக்கிறது கோவை. 17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: கோவை, திருப்பூரை சேர்ந்த மாணவி சுபசிறி இருபது நாட்களுக்கு முன்பு கோவை ஈசாயோகா மையத்திற்கு பயிற்சிக்காக வந்துள்ளார். இவர் கடந்த பனிரெண்டு நாட்களுக்கு முன்பிருந்து, காணவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவர் செம்மேடு பகுதியில் ஓடிச்செல்லும் கண்காணிப்பு படக்கருவி காட்சிகளும் வெளியானது. இந்த நிலையில், அவரை தேடும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டது. பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். கிட்டத்தட்ட 6 தனிப்படைகள் அமைத்து, 100 கண்காணிப்பு படக்கருவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த பெண் எப்படி மாயமானார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், கிட்டத்தட்ட இரண்டு கிழமைக்கு பின்னர், அதே செம்மேடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் என்பவரது தோட்டத்திற்கு சொந்தமான கிணற்றில் இருந்து ஒரு பெண் சடலம் கிடப்பதாகவும், துர்நாற்றம் வீசி வருவதாகவும் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலை தொடர்ந்து தீயணைப்புத்துறையினரும், காவல்துறையினரும் உடனடியாக நிகழ்வு இடத்திற்கு விரைந்தனர். அப்போது கிணற்றில் இறந்து கிடந்தது சுபசிறி என்பது தெரியவந்துள்ளது. அழுகிய நிலையில் இருந்த அவரது உடல் மீட்கப்பட்டது. இதன் பிண்ணனி என்ன என்பது குறித்து தனிப்படைக் காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,480.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.