பாஜகவைக் காலாய்த்த இரஜினியின் பேச்சை தமிழகம் கொண்டாடி வருகிறது. கூட்டத்தோடு வராமல், இரஜினி தனியாக வருவதை (அரசியலுக்கு) தமிழகத்தை சேர்ந்த பலர் விரும்புகிறார்கள் என்பதாக புரிந்து கொள்ள முடிகிறது. 22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னையில் கமலின் ராஜ்கமல் அலுவலகத்தில் பாலசந்தர் சிலை திறப்பு விழாவிற்கு பின்னர், தனது வீட்டில் நடிகர் ரஜினி நிருபர்களிடம் கூறியதாவது: திருவள்ளுவர் மிகப்பெரிய ஞானி; சித்தர். ஞானிகள், சித்தர்களை மதம் சாதி எல்லைக்குள் கட்டுப்படுத்த முடியாது. அவற்றுக்கு அப்பாற்பட்டவர்கள். திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்; அவரது குறள் மூலம் தெரியும். அவர் நாத்திகர் அல்லர்; ஆத்திகர். இதை யாரும் மறக்க முடியாது; மறுக்கவும் முடியாது. திருவள்ளுவருக்கு பாஜக காவி உடை அணிவித்தது அவர்களது தனிப்பட்ட விசயம். ஊரில் நிறைய பிரச்னை இருக்கும் போது, இந்த விவகாரத்தை பற்றி பேசுவது அற்பத்தனமானது; தேவையற்றது. எனக்கு விருது அளித்தவர்களுக்கு நன்றி. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. பாஜகவில் சேரவோ, தலைவராகவோ இருக்கும்படி யாரும் அழைக்கவில்லை. திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச முயற்சி நடப்பது போல் எனக்கும் பூச முயற்சி நடக்கிறது. இதில் திருவள்ளுவரும் மாட்ட மாட்டார். நானும் மாட்டிக் கொள்ள மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார். மேலும் ரஜினி கூறுகையில், நான் எப்போதும் வெளிப்படையாக பேசுவேன். சிலர் மட்டுமே எனக்கு பாஜக சாயம் பூச முயற்சி செய்கின்றனர். ஆனால், அது நடக்காது. திருவள்ளுவருக்கு காவி உடையை பாஜக கீச்சுப் பக்கத்தில் மட்டும் போட்டது. வேறு எங்கும் போட வேண்டும் என சொல்லவில்லை. ஆனால், ஊடகங்கள்தாம், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தின. என்னை ஒரு கட்சிக்கு வருமாறு அழைப்பது அவர்களின் விருப்பம். அயோத்தி விவகாரத்தில் தீர்ப்பு எப்படி வந்தாலும், அனைவரும் அமைதி காக்க வேண்டும். மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது குறித்த விவகாரம் எனக்கு சரியாக தெரியாது. தெரியாமல் அதை பற்றி பேச மாட்டேன். பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ளது. இதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டுமோ, அந்தப் பணியை இந்திய அரசு செய்ய வேண்டும். திரைப்படத்தில் தொடர்ந்து கூட நடிப்பேன். அரசியல் கட்சி அறிவிக்கும் வரை நடிப்பேன். தமிழகத்தில் ஆளுமையான சரியான தலைமைக்கு தற்போதும் வெற்றிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,330.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.