Show all

இராசராசசோழன் 1034-வது பிறந்தநாள் விழா! விழாக்கோலம் பூண்டிருக்கும் தஞ்சை பெரிய கோயில்.

இன்று மாமன்னன் இராசராசசோழன் 1034-வது பிறந்தநாள் விழா, இன்றும் நாளையும் தஞ்சை பெரிய கோயிலில் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவ்விழாவையொட்டி நாளை தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் இராசராசசோழனின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.  

இராசராசசோழனின் 1034 ஆவது பிறந்தநாள் விழா தஞ்சை பெரிய கோயிலில் இன்றும், நாளையும் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.  இரண்டு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி இன்று கருத்தரங்கம், பாட்டரங்கம், உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள்  நடைபெற உள்ளன. நாளை தமிழக அரசு சார்பில் மாமன்னன் இராசராசசோழனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. இவ்விழாவையொட்டி நாளை தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சோழர் ஆட்சி காலத்தில், சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அநுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது. இந்நகரில் இராணுவ காவல் நிலையமாக விளங்கிய பொலன்னறுவை சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது. இராசராசசோழனுக்கு முன்னர் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் அரசர்களில் தாட்டியன் என்னும் பாண்டிய வேந்தன் தவிர மற்றவர்கள் அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராசராசசோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்பட்டதாக்க எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டான். ஆனால் இவனின் மகனான இராசேந்திரச் சோழன் காலத்திலேயே ஈழத்தின் தென்பகுதி தாட்டியனுக்குப் பிறகு இரண்டாவது முறையாக தமிழர்களுக்குக் கீழ் வந்தது. பிற்காலத்தில் சிங்கள வேந்தனாகிய முதலாம் விஜயபாகு, அனுராதபுரத்தில் முடிசூட்டப் பெற்றான் என்றாலும் பொலன்னறுவையைத் தொடர்ந்து தன் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தான். நாம்! ஈழத்தில் சிங்களப் பேரினவாதம் ஒன்னரைஇலட்சம் தமிழர்களைப் பலிகொண்ட போது- அமைதிவழியில் கூட, தற்காத்துக் கொள்ள முடியாத, கையாலாகாத நிலையில்தான் இராசராச சோழன் நினைவுகளைத் தொடர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,327.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.