Show all

கொண்டாடுவோம் தமிழர்பெருமிதம் கோகிலாவை! உங்கள் முயற்சியைப் பணிந்து வணங்குகிறோம் கோகிலா.

பழங்கால கல்வெட்டு எழுத்துகளை சரளமாக படிக்கும் பள்ளி மாணவி கோகிலா! இராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல் நிலைப்பள்ளியில் உள்ள தொன்மை பாதுகாப்பு மன்றத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார் பள்ளபச்சசோரியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி கோகிலா.

15,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கல்வெட்டுக்களில் எழுத பயன்பட்டிருந்த தமிழ் எழுத்துமுறையை தாமிழி என்று அழைக்கிறோம். அதற்குப் பின்பு தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு முன்னூறு ஆண்டுகள், கல்வெட்டுக்களில் எழுத பயன்பட்டிருந்த தமிழ் எழுத்துமுறை வட்டெழுத்துக்கள் என்று அழைக்கப்படுகிறது. தமிழர்கள் முதன் முதலாக எழுதப் பயன்படுத்தி எழுத்து தாமிழி எழுத்து என்று அழைக்கப் படுகிறது. தாமிழி எழுத்தில் இருந்து மாற்றம் அடைந்த வட்டெழுத்துக்கள் ஒரு முன்னூறு ஆண்டுகள் மட்டும் பயன்பாட்டில் இருந்தன. 

தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து தற்கால தமிழ் எழுத்துமுறையை பயன்படுத்துவது தொடங்கியது. ஆனால் கேரளத்தில் மேலும் நானூறு ஆண்டுகள் வட்டெழுத்து மலையாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது.

தற்போது பாரம்பரியம், கலாசாரம், தொன்மையான கருத்துருக்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழர்களின் பழங்கால வரலாற்றை அறிந்து கொள்ள கல்வெட்டுக்கள் மிக முதன்மைக் காரணமாக உள்ளன.

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல் நிலைப்பள்ளியில் உள்ள தொன்மை பாதுகாப்பு மன்றத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார் பள்ளபச்சசோரியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி கோகிலா.

பழங்கால தமிழ் எழுத்து முறையான தாமிழி, வட்டெழுத்து முறைகளை திறம்பட கற்றுத்தேர்ந்து சக பள்ளி மாணவிகளுக்கும் கற்பித்து வருகிறார். இவர் மிக எளிமையாக, சரளமாக கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துகளை தெளிவாக வாசித்து அதில் உள்ள செய்திகளை அறிந்து மற்றவர்களுக்கு விளக்கம் கொடுத்து வருவது மிகுந்த வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக இவர் சிறப்பாக மதுரை மாவட்டம் நாகமலை, புதுக்கோட்டை பகுதிகளில் சமணர் படுகைகள் குகைகளில் காணப்படும் எழுத்துகளை குறிப்பெடுத்துள்ளார். தொன்மை பாதுகாப்பு மன்றம் மூலம் தனக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தாமிழி, வட்டெழுத்து குறித்து கற்பிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோகிலா, அவரது தாயார், பள்ளி தொன்மை மன்ற ஆசிரியர் ராஜ குரு, கோகிலாவின் வகுப்பாசிரியர் வரலட்சுமி, பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜ் ஆகியோர் தெரிவித்ததான செய்திகள், இவர்களை நம்முடைய வணக்கத்திற்கு உரியவர்களாக போற்றிக் கொள்ளத் தூண்டுகிறது.

தொன்மை பாதுகாப்பு மன்றத்தில் சேர்ந்து ஆர்வத்துடன் கல்வெட்டுகளை நகல் எடுத்து பழகினேன். அதில் உள்ள செய்திகள் பழந்தமிழர்களின் வரலாற்றினை தெரிவித்தன. தாமிழி, வட்டெழுத்துக்கள் பயிற்ச்சிக்கான புத்தகத்தை வழங்கி தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் இராஜகுரு ஊக்குவித்தார்.

மூன்று கிழமைகளில் தாமிழி, வட்டெழுத்துகளை எளிதாக வாசிக்கும் திறமையை பெற்றேன். இதனை சக மாணவிகளுக்கும் கற்பித்து வருகிறேன். கல்வெட்டுகளில் உள்ள வட்டெழுத்துக்களை வாசிப்பது கடினமானது. ஆனால் எனக்கு அது மிகவும் எளிமையானது. பள்ளி படிப்பில் முதல் மாணவி, விளையாட்டில் கபடி நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், ஓவியம் ஆகியவற்றில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது என்று தெரிவித்தார் கோகிலா.

கோகிலாவின் தாய் ராமு கூறுகையில், இப்படிப்பட்ட எழுத்துகள் இருப்பதாக எங்களுக்கு தெரியாது. ஆனால் என் மகள் அதனை கற்றுப் படிக்க எழுத தெரிந்துகொண்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக எங்களது பள்ளியில் தொன்மை மன்றம் செயல்பட்டு வருகிறது. எங்களது மாணவர்கள் இப்பகுதிகளில் கிடைக்கும் பழங்கால தொல்லியல் பொருள்களை அதிகளவில் சேகரித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு பழங்கால மொழி மற்றும் கலாசாரத்தின் மீது அதிக பற்று இருந்து வருவதன் வெளிப்பாடாகவே கோகிலா வட்டெழுத்துகளை படிக்க மிகவும் ஆர்வம் காட்டி தற்போது வட்டெழுத்துகளை எழுதவும், படிக்கவும் நன்கு கற்று தேர்த்துள்ளார் என பள்ளி தொன்மை மன்ற ஆசிரியர் ராஜ குரு தெரிவித்தார்.

இது குறித்து கோகிலாவின் வகுப்பாசிரியர் வரலட்சுமி கூறுகையில் எங்கள் பள்ளியில் செயல்பட்டு வரும் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் வாயிலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு பல பழங்கால பொருள்களை கண்டுபிடித்து வருகின்றனர். மேலும் இவர்கள் பழங்கால எழுத்துகளை கற்பதையும் எழுதுவதையும் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது, என்று தெரிவித்தார்.

தலைமையாசிரியர் செல்வராஜ் கூறுகையில், எங்கள் பள்ளியில் 400 மாணவர்கள் படிக்கின்றனர். எங்களுக்கு மாணவர்களின் கல்வி அறிவு மேம்படுவது மட்டும் அல்லாது மாணவர்களின் தனித்திறனை வளர்க்கவும் முயற்சித்து வருகிறோம். இதற்கும் அரசும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதால் மாணவி கோகிலா பழங்கால எழுத்துகளை கற்கவும் எழுதவும் மிகுந்த உதவிகரமாக இருக்கிறது என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,382.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.