Show all

பிறப்பொழுக்கம் தொலைக்க, பிள்ளைகளுக்கு களம் அமைத்துத்தரும் பேரளவு தமிழ்ப் பெற்றோர்

பிறப்பொழுக்கம் என்றால் என்ன? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. பிறப்பொழுக்கம் என்கிற சொல்லை சிறப்பாகக்  கொண்டிருக்கிற ஒரு திருக்குறளை எடுத்து, அந்தக் குறள் தெரிவிக்கும் பொருள் அடிப்படையில் இந்த வினாவிற்கு விடை உருவாக்கப்பட்டுள்ளது. 

14,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5125. 

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 
இந்தத் திருக்குறள்தான் பிறப்பொழுக்கம் என்கிற தலைப்பை முன்னெடுக்கிறது. 

குறளின் முதலாவது அமைந்த மறப்பினும் என்கிற சொல்லுக்கு உரிய பொருளை, அடுத்து அமைகிற ஓத்துக் கொளலாகும் என்கிற சொல்தான் தெளிவாக உணர்த்த முடியும். 

கைதவறி நீங்கள் கீழே போட்டதால், உதிரியாகிப் போன, நீங்கள் விரும்பியிருக்கும் ஒரு கருவி தன் முழுமை ஒழுங்கை இழந்து விடுகிறது. ஆனால் அந்தக் கருவி இல்லாமல் போய்விடவில்லை என்பதைத் தெரிவிக்கின்றன ஓத்துக் கொளலாகும் என்கிற இரண்டு சீர்கள்.

அந்த உதிரி பாகங்களை முழுமையான கருவியாக மாற்ற (அதாவது ஒழுங்கு படுத்த) ஓத்துப் பெறமுடியும் என்கின்றன இந்தக் குறளின் முதல் மூன்று சீர்கள். ஓத்து என்பதற்கு முன்பு பொருந்தியிருந்த இடத்தில் பொருத்துதல் என்பது பொருள் ஆகும்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் என்பதில் ஒரு கருவி சீர்குலைந்திருந்தாலும் பொருந்தியிருந்த இடத்தைக் கண்டுபிடித்து பொருத்திக் கொள்ளத்தக்கது என்பது செய்தியாகும்.

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்று ஒரு சொலவடை உண்டு.

ஆற்றின் ஒரு கரையில் மேயும் மாட்டுக்கு அங்குள்ள புல்லைவிட மறுகரையில் உள்ள புல் கண்ணுக்குப் பசுமையாகத் தெரியும். அங்கு போய் மேயலாமே என்னும் எண்ணம் அதற்குத் தோன்றும். அங்கு இதைவிடக் குறைவான புல்தான் இருக்கிறது என்று சென்று பார்த்த பின்னரே தெரியும். 

மேற்சொன்ன செலவடை அடிப்படையில், அயலவர் ஒழுக்கத்தைப் பார்த்து மலைக்கிறவன்தான் பார்ப்பான்.

அவனுக்குச் (பார்ப்பான்) சொல்லப்படுவதே பிறப்பொழுக்கம் குன்றக் (மீட்கவியலா வகைக்கு) கெடும் என்று கடைசி மூன்று சீர்கள் தெரிவிக்கிற செய்தியாகும்.

கருவி உதிரியானால் (ஒழுக்கம் இழத்தல்) ஒழுங்கு படுத்த வகை இருக்கிறது. ஆனால்வாழ்க்கை, இனத் (உலகம்) தோடு ஒட்ட ஒழுகாமல் உதிரியானால், மலையாக இருந்தது குன்றானது போல அடிப்படை காணமல் போய்விடும் மலையை மீட்க முடியாது என்று தெரிவிக்கிறார் திருவள்ளுவர்.

இந்த இடத்தில், அயல்களை மலைத்து குன்றாகக் குறுகிப்போன, நடப்பு நிலையில் இருக்கிற சில பல தமிழர்களை, திருவள்ளுவர் தெரிவிக்கும் பார்ப்பனாக பொருத்திக் கொண்டு விடை தேடலாம். 

பிறப்பொழுக்கம் குன்றியிருந்தால் ஒருபோதும் அடிப்படையோடு பொருத்திக் கொள்ள முடியாது என்று தெளிவாகத் தெரிவிக்கிறார் திருவள்ளுவர் இந்தக் குறளில் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் என்று.

நடப்பில், பேரளவான தமிழ்ப்பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள்? பிறந்த சில மாதங்களிலேயே, தன் பிள்ளையின் மீது தனது அக்கரைப் பச்சையைத் திணித்து, தன் பிள்ளை பிறப்பொழுக்கம் குன்றலாம் என்பதற்கு பச்சைக்கொடி காட்டும் முகமாக, அந்தப் பிள்ளையை, அந்தப் பிள்ளையின் முதல் உடைமையான தமிழில் இருந்து வெளியேற்றும் முகமாக, அந்தப் பிள்ளைக்கு சமஸ்கிருதப் பெயரையோ அல்லது தன்னை இணைத்துக் கொண்டுள்ள மதம் கட்டாயப்படுத்தும், ஏதாவதொரு பிறமொழிப் பெயரையோ சூட்டி, அந்தப் பிள்ளை, அந்தப் பிள்ளைக்குச் சூட்டப்பட்ட மொழியினத்தின் அடிமை என்தற்கான பட்டயம் ஆக்கி தந்து விடுகின்றனர்.

உலகமே, தமிழ்முன்னோர் கொடையாக்கிய அம்மா அப்பாவிற்கு, தன்பெற்றோரை அம்மா அப்பா என்று விளிக்கிற ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமைஆதாயம் செலுத்திக் கொண்டிருக்கிற நிலையில், 

தன் குழந்தையை மம்மி டாடி என்று பேசவைத்து, தன்பிள்ளையின் பிறப்பொழுக்கம் குன்றலுக்கு இரண்டாவதாக பச்சைக் கொடி காட்டுகின்றனர் பேரளவான தமிழ்பெற்றோர்.

தன் பிள்ளையை பிறப்பொழுக்கம் குன்றலுக்கு வழிநடத்த பேரளவான தமிழ்ப்பெற்றோர் கையில் எடுக்கும் அடுத்த பச்சைக்கொடி ஆங்கிலவழிக் கல்விக்கு.

உடைமையில் இருப்பதே ஒழுக்கம் என்பதை மறந்து, இந்த வகை பிறப்பொழுக்கம் குன்றலுக்கு தங்கள் உடைமையை எல்லாம் விற்று பாடாற்றுகின்றனர் பேரளவு தமிழ்ப் பெற்றோர்.

தமிழன் மலைத்த முதல்அயல் பிராம்மணியம். அப்புறம் அராபியம், ஐரோப்பியம், மார்க்சியம், இவைகளின் பல்வேறு சார்புக் கட்டமைப்புகள் எனத் தொடர்கிறது.

இவைகள் அனைத்துமே தமிழ்க் குடும்ப அமைப்புக்கு மாறான ஒழுக்கப்பாடுகளை முன்னெடுப்பன. பிராமணியம் கொண்டாடும் பாரதம், காமசாஸ்திரம்,  கொக்கோகம் என்கிற தமிழ் குடும்ப அமைப்புக்கு மாறான தொன்மங்களைக் கொண்டாடுவது.
மற்ற அயல்கள் பாலியல் கல்வியை கொண்டாடுவன. தம்மின் தம்மக்கள் அறிவுடைமையை மறுப்பன. தலைவன் தலைவி என்கிற அடிப்படையை மறுத்து சிறைகாக்கும் கற்பை கொண்டாடுவன.  

இந்த அயல் அடிப்படைகளில், தன் பிள்ளை உடன் மாணவர்களை மதிக்காத போது, தன்பிள்ளை சொந்த மனைவியை மதிக்காது போது, தன் பிள்ளை தன் உடன்பிறப்புகளை மதிக்காத போது, தன்பிள்ளை தங்களையே மதிக்காத போது, அதற்குத் தாங்கள் பலமுறை ஆட்டியிருந்த பச்சை கொடியே காரணம் என்பதை சிந்திக்க மறந்து விட்டு, அந்தப் பிள்ளை தன்னூக்கமாக ஒழுக்கம் இழந்து விட்டதாக புலம்பித் தவிக்கிறார்கள். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,208.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.