தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் மாநிலப் பொதுத்துறை நிறுவனங்களின் பணியிடங்களுக்கான அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் ஆக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 29,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் ஆக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 100 விழுக்காடு வேலை கிடைக்கும் வகைக்கானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆங்கில வழிக்கல்வி பயின்றவர்களும் போட்டித் தேர்வில் கலந்து கொள்ள முடியும் தடைஇல்லை என்றாலும், தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்களுக்கு கூடுதலான வாய்ப்பு கிட்டும். இனி தமிழ்நாடு அரசு பணி பெற, ஆங்கிலவழிக் கல்வியில் பயின்றாலும், தமிழ்பாடத்தில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய ஆர்வத்தூண்டலுக்கு வழிவகுக்கும். ஆனால் தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டிருந்த போதும் பிறமொழி மோகத்தில் தமிழை ஒரு பாடமாகக் கூட எடுக்க மனமில்லாதவர்கள், தமிழ்நாட்டில் படித்தாலும் தமிழை ஒரு பாடமாக எடுக்காத பிற மாநிலத்தினர்- தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதை தவிர்க்க ஒரு சிறந்த யுக்தி பேணப்பட்டுள்ளது. கடந்த மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது நிதிநிலை அறிக்கையும் வேளாண் நிதிநிலை அறிக்கையும் பதிகை செய்யப்பட்டன. இதையடுத்து, வரவுசெலவுத்திட்டத்தின் மீதான பொது விவாதம், பதிலுரை நடைபெற்றது. தொடர்ந்து, ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு, அத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலுரை அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் மாநிலப் பொதுத்துறை நிறுவனங்களின் பணியிடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களை 100 விழுக்காடு தேர்வு செய்யும் வகையில், அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்படும். சமூகத்தில் பாலினச் சமத்துவம் முதன்மையானது என்பதை அரசு உணர்ந்துள்ளது. அதனால் அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40 விழுக்காடாக உயர்த்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும். கொரோனா காரணமாக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடப்பது தாமதமானதால், நேரடி நியமன அகவை உச்ச வரம்பு இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படும். அண்ணா மேலாண்மை நிலையத்தில் காட்சி ஊடகச் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகப் படப்பிடிப்புத் தளம் உருவாக்கப்படும் என்று பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,006.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.