உலகமே திரும்பிப் பார்க்கும் முன்னெடுப்பாக, பாஜக கொடி கம்பம் நடுவதற்கு கடும் எதிர்ப்பு. நள்ளிரவில் அடாவடியாக நடப்பட்ட கம்பம், காவல்துறையில் புகார் அளித்து அகற்றப்பட்டது. 16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: கோவை மாவட்டம் அசோகபுரம் அருகே பாஜக கொடிக் கம்பத்தை தங்கள் ஊரில் நடக்கூடாது என பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் ஊரில் பாஜகவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, காவல்துறையில் புகார் அளித்து கம்பத்தையே அகற்றும்படி செய்துள்ளது ஒட்டுமொத்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மற்ற கட்சிகளின் கொடிக்கம்பம் இருப்பது போல பாஜக கொடிக் கம்பமும் அங்கே இருக்க வேண்டும் என புதிதாக பாஜகவில் இணைந்த இருவர் கொடிக்கம்பம் நட முயன்ற நிலையில், ஊர்மக்கள் அதற்கு எதிராக நிற்கின்றனர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக அந்த ஊரில் தலையெடுத்தபோது, சில தீண்டாமை அடாவடிகள் அரங்கேறி இருக்கின்றன. அதையடுத்து பாஜகவை ஊருக்குள் அனுமதிப்பதில்லை என முடிவெடுத்து இன்று வரை அதன்படியே செயல்பட்டு வந்துள்ளனர் ஊர்மக்கள். கோவை மாட்டம் அசோகபுரம் ஊராட்சிக்குட்பட்ட காந்தி காலனியில் முப்பது ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட குடிபோதை தகராறு மற்றும் தீண்டாமை அடாவடி காரணமாக பாஜகவை ஊருக்குள் அனுமதிக்கக் கூடாது என முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் காந்தி காலனியை சேர்ந்த சின்ராசு மற்றும் அவரது மகன் சேகர் ஆகியோர் அண்மையில் பாஜகவில் இணைந்துள்ளனர். இதையடுத்து அங்கு பாஜக கொடிக்கம்பம் நட ஏற்பாடு செய்த நிலையில் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால் நள்ளிரவு நேரத்தில் வந்து அவர்கள் பாஜக கொடிக் கம்பத்தை நட்டு வைத்துவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பாஜகவினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர், அங்கிருந்த கொடிக் கம்பத்தை பறிமுதல் செய்தனர். மேலும் சின்ராசு, சேகர் உள்ளிட்டோர் மீது பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. வட இந்திய மக்களின் ஆதரவில் கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்து வரும் கட்சி பாஜக. அந்தக் கட்சியை தங்கள் ஊருக்குள் அனுமதிக்கவே மாட்டோம் என்று ஊர்மக்கள் எதிர்த்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவிற்கு எதிரான ஊர்மக்கள் கட்டுப்பாட்டு நிகழ்வு குறித்துப் பேசியுள்ள பாஜகவைச் சேர்ந்த பாலாஜி உத்தம ராமசாமி, மற்ற கட்சிகளின் கொடிக் கம்பங்கள் இருக்கும் நிலையில் பாஜக கொடி கம்பம் வைக்க அனுமதி கோரி கோட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லையென்றால், அடுத்தகட்டமாக கொடி கம்பம் நடுவதற்குரிய வழிகளை பார்ப்போம், பயந்து மட்டும் ஒதுங்கி விட மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,479.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.