Show all

துப்புரவுப் பணியாளர் 50பேர்கள் பணிநீக்கமாம்! துப்புரவுப்பணிகளில் நூறு விழுக்காடும் இயந்திரமயமாக்கி நாகரிக மாந்தராக உலாவருவோம்.

வேலூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் மெத்தனமாக இருந்ததாக 50 துப்புரவு பணியாளர்களை பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர்  உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் மட்டும் 900க்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து வேலூர் மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த வீடு, வணிக வளாக உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

இதற்கிடையில், டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தற்காலிகமாக 1,936 துப்புரவு பணியாளர்கள் மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இப்பணி சரியாக நடப்பதில்லை என்று புகார்கள் எழுந்தன.

இதை தொடர்ந்து டெங்கு தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டத்தில் கொசு ஒழிப்பு பணியில் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்தார். ஆனாலும் கொசு ஒழிப்பு பணி மெத்தனமாகவே நடப்பதாக ஆட்சியருக்குப் புகார்கள் வந்தன. இதையடுத்து, கொசு ஒழிப்பு பணியில், சரிவர செயல்படாமல் மெத்தனமாக இருந்த 50 தற்காலிக துப்புரவு பணியாளர்கள் கண்டறியப்பட்டனர். அந்த 50 பேரையும் பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அதிரடியாக உத்தரவிட்டார்.

நாடு முழுவதும் துப்பரவு பணி என்பது: எல்லா ஓட்டை உடைசல்களையும் வைத்துக் கொண்டு, அழுகிய காய்கறிகள், மிச்சம் வைக்கப்பட்ட உணவுப்பொருட்கள், சிறுநீர், மலம், குப்பைகள், மக்கா குப்பைகள் கூடுதலாகச் சேர்ந்து, சாக்கடைகள், கழிவுநீர் அமைப்புகள், ஏரிகள், ஓடைகள், குளம் குட்டைகள், வெட்டவெளிகள், ஆகிய இடங்களில் ‘கழிவுகள் போக்கு’ அடைத்துக் கொள்ளும்போது அப்புறப் படுத்தவதாகவே அமைகிறது. இதனால் அதில் பணிபுரிகிற துப்பரவுப் பணியாளர்களுக்கும் நோய் தொற்றும் வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக குண்டு குழி சாலைகள், இந்த அடைப்புகளுக்கு மூலமுதல் காரணமாக அமைந்து விடுகின்றன. 

எத்தனையோ புதுமைக்கருவிகள் நடைமுறைக்கு வந்து விட்ட போதும், எவ்வளவு செலவானாலும் அவைகளை வாங்கி பயன்படுத்துவது பண்பாட்டின் நாகரிகத்தின் வளர்ச்சியாக இருக்க முடியும். அதை விடுத்து இன்னமும், மனிதர்களை கழிவுக் குழிகளில், குளம் குட்டைகளில், ஓடைகளில் துப்பரவு பணிக்கு களம் இறக்குவது ஆதிக்க மனநிலையின் போக்கை களையாத மடமையாகும். கருவிகளை வாங்கிக் குவியுங்கள். நமது அமைச்சர்களின் ஒரு நாட்டுப் பயணத்தைக்கூட குறைத்துக் கொண்டு அந்தச் செலவை ஈடுகட்டலாம். 

துப்புரவு பணியாளர்களைப் பணிநீக்கம் செய்வதும், வீடு, வணிக வளாக உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதும், எதிர்மறை செயல்பாடுகளே; தீர்வுதராது. குண்டு குழி இல்லாத  நல்ல சாலை அமைப்பும், கழிவுநீரை உடனுக்குடன் வெளியேற்றும் வகையிலான மேம்பட்ட கழிவுநீர் அமைப்புகளும் நிரத்தரத் தீர்வாகும். துப்புரவுப் பணிகளை நூறு விழுக்காடு இயந்திரமயமாக்குவது நாகரிகத்தின் அடையாளமாகும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,336.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.