Show all

வரலாற்றுக் காரணம் அடிப்படையில்! தமிழர்கள் கொண்டாடிய மொகரம் திருவிழா

நேற்று, முதுவன் கிராம மக்கள் முன்னெடுத்த மொகரம் திருவிழாவின்போது, தமிழ்மக்களின் காவல்தெய்வமான மாரியம்மனைக் கொண்டாடடுவது போன்றே பாத்திமா நாச்சியாரை நினைவுகூர்ந்து மொகரத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன் திடல் கிராமத்தில் தமிழ்மக்கள், தமிழ்மரபில், மொகரம் திருவிழாவை கொண்டாடியது உலகக்கவனம் ஈர்த்துள்ளது.

முதுவன் திடல் கிராமத்தில் பல்லாண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்கள் அதிகளவில் வசித்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அப்போது பாத்திமா நாச்சியார் என்ற பெண் ஒருவர் அங்கு சிறப்பாக வாழ்ந்து வந்தாகவும், அவர் இறந்த பின் முதுவன் திடல் கிராமத்தில் மையப் பகுதியில் தர்கா, பள்ளிவாசல் ஆகியவற்றை அமைத்து அவரை அந்த கிராம மக்கள் தெய்வமாக வழிபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த கிராமத்தில் தற்போது தமிழர்களே அதிகளவில் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மொகரம் அன்று அவர்கள் அந்த கிராமத்துப் பெண்ணான பாத்திமா நாச்சியாரை நினைவுகூரும் வகையில் விழா கொண்டாடுவது வழக்கத்தை தமிழ்மக்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த திருவிழாவின்போது தமிழ்மக்களின் காவல்தெய்வமான மாரியம்மனை கொண்டாடடுவது போன்றே பாத்திமா நாச்சியாரை நினைவுகூர்ந்து மொகரத்தைக் கொண்டாடி வருகின்றனர். 

திருவிழாவின் முதன்மை நிகழ்வாக நேற்று அதிகாலை, தமிழ்மரபில், மொகரம் திருவிழா கொண்டப்பட்டது. பூக்குழி அமைக்கப்பட்டு, ஊர்வலமாக வந்து அதிகாலை 4.20 மணிக்கு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். 

பூ மூழ்குதல் என்கிற ஒரு நிகழ்வும் இந்த விழாவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் நேர்த்திக்கடன் செலுத்தும் பெண்கள் தங்கள் தலையை சேலையாள் மூடியபடி பூக்குழி முன்பு அமர்ந்து, பின்னர் தம் தலையை ஈரத்துணியால் போர்த்தி, அதற்குமேல் மூன்று முறை தீ கங்குகளை எடுத்துப் போட்டு விடுவார்கள்.

அதன் பின்னர், திருவிழாவின் இறுதியாக ஒப்பனை செய்யப்பட்ட சப்பரத்தை பொது மக்கள் மேளதாளத்துடன் கிராம எல்லை வரை தூக்கிச் சென்று மீண்டும் தர்காவிற்குக் கொண்டு வந்து சேர்த்துவிடுவார்கள். நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியைக் காண ஏராளமான பொது மக்கள் கூடினர்.

தமிழர்களுக்கு மதக்காரணம் குறித்தெல்லாம் எந்தத் தேடலும் எப்போதும் இருந்ததில்லை. வரலாற்றுக் காரணம் இருந்தால் எந்த சான்றோர் பெருமக்களையும் தெய்வமாகக் கொண்டாடுவர். என்பதை தமிழ்நாட்டு பாஜக கிளையினர் புரிந்து கொள்ள இந்த விழா நல்லதொரு வாய்ப்பு ஆகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,336.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.