நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார் ஆளுநர். இதேபோல தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்திலிருந்தும், வாடகை வீட்டிலிருந்தும் அதே சினத்துடன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா? என்று சு.வெங்கடேசன் ஆளுநருக்கு போட்டுள்ளார் கிடுக்குப்பிடி. 26,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்தப் பேரவைக் கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என செயல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நேற்றைய நிகழ்வில் அரசு கொடுத்திருந்த உரையில் சில தமிழ்நாட்டு அடிப்படைகளுக்கான சொற்கள் ஆளுநரால் தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தமிழ்நாடு முதல்வர் உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுதே ஆளுநர் வெளியேறியதும் சர்ச்சையானது. இந்நிலையில் ஆளுநரின் மீது மற்றுமொரு குற்றச்சாட்டை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சமூக வலைத்தளம் மூலம் வைத்திருக்கிறார். சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள கீச்சுப் பதிவில், 'ஆளுநர் மாளிகையில் இருந்து சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விழாவுக்கு வந்த அழைப்பில் 'தமிழ்நாடு ஆளுநர்' என்று இருந்தது. இப்பொழுது பொங்கல் விழாவுக்கு வந்துள்ள அழைப்பில் 'தமிழக ஆளுநர்' என்று இருக்கிறது. நேற்று அவையிலிருந்து வெளியேறிய அதே வேகத்தோடு மாநிலத்தைவிட்டு இவர் வெளியேற்றப்பட வேண்டும். கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது. நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார். இதேபோல தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்திலிருந்தும், வாடகை வீட்டிலிருந்தும் அதே சினத்துடன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா? எனப் பதிவிட்டுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,489.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.