Show all

நேற்று காப்புக்கட்டு! எதிர்வரும் தைமாதத்தில் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில்

தைமாதத்தில் கொண்டாடப்படவிருக்கிற, தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைக் காண ஒட்டுமொத்த தமிழகமும் ஆர்வமாய் காத்திருக்கிறது. நேற்று தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவிற்கான காப்புக்கட்டு நடந்தது.

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வணிகம் போற்றும் மரபாக தமிழர், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, கொண்டாடி வருவது விழா. பொருளாதார மந்தநிலையால் தமிழ்ச்சமூகம் வீழ்ந்து விடாமல் இருக்க கண்டு பிடிக்கப் பட்டதுதான் விழா. (தற்போது பணமதிப்பிழப்பு, சரக்கு சேவைவரியின் மூலமாக, இந்திய அரசு பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டு தள்ளாடி வருகிறது.) ஆண்டு தொடங்கும் இளவேனில் சித்திரையில் தமிழ்ப்புத்தாண்டுவிழா, ஆடி பதினெட்டில் மழையைக் கொண்டாடும் ஆடிப்பெருக்கு விழா, குளிர் காலத்தில் கொண்டாடும் கார்த்திகை விளக்குத் திருவிழா, முன்பனி காலத்தில் தை முதல்நாளில் பொங்கல் திருவிழா என ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடிய விழாக்களோடு பனிரெண்டு ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடும், கோயில்களின் எட்டாத உயரத்தில் அமைந்த கோபுரங்கள் உள்ளிட்ட பகுதிகளைத் தூய்மைப் படுத்தும் விழாதான்  குடமுழுக்கு விழா.  

அப்படியொரு குடமுழுக்கு விழா தஞ்சாவூர் பெரியகோயிலில் நடைபெறவுள்ளது. ஆனால் இந்த முறை 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா தஞ்சாவூர் பெரியகோயிலில் முன்னெடுக்கப்படுகிறது.

யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள, தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப் புகழ் பெற்று திகழ்ந்து வருகிறது. பல்வேறு சிறப்புகளுக்கு உரிய தஞ்சை பெரிய கோயில்- மாமன்னன் இராசராசசோழனால் தமிழ்த்தொடராண்டு 4112ல் (கி.பி 1010) கட்டி முடிக்கப்பட்டது. அப்போது இராசராச சோழன் விமரிசையாகக் கோயிலுக்கு குடமுழுக்கு செய்தார். அதன் பிறகு, தஞ்சாவூரை ஆண்ட மன்னர்களும் குடமுழுக்கு விழாவினை முன்னெடுத்திருக்கின்றனர். 

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா, பல்வேறு காரணங்களால் தடைப்பட்டுக்கொண்டே சென்றது. குடமுழுக்கு நடத்த வேண்டும் எனத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையேற்று 23 ஆண்டுகளுக்குப் பிறகு, எதிர் வரும் தை மாதத்தில் குடமுழுக்கு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகக் கோயிலில் பல்வேறு புதுப்பிக்கும் பணிகளைச் செய்து வருகிறார்கள் தொல்லியல் துறை அதிகாரிகள். 

எந்த விழாக்களையும் காப்பு கட்டி தொடங்குவது தமிழர் விழாமரபு. திருமணவிழாவிற்கும், பொங்கல் விழாவிற்கும் விழாவின் முந்தைய நாள் காப்பு கட்டுவார்கள். தாய்மையுற்ற பெண்ணின் பாதுகாப்பான குழந்தைப் பேற்றுக்காக, கருத்தரித்த, ஏழு- ஒன்பது மாதங்களில் காப்புக்கட்டை வளைகாப்பு விழாவாகக் கொண்டாடுவார்கள். அம்மன் கோயில்களில் ஒரு கிழமை இரண்டு கிழமைகளுக்கு முன்பு பூச்சாட்டி காப்பு கட்டுவார்கள். தற்போது தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழாவிற்கான காப்புகட்டு நடைமுறையை நேற்று, கால்கோள் நாட்டி  தொடங்கி சிறப்பாக நடத்தினார்கள். 

தைமாதத்தில் கொண்டாடப்படவிருக்கிற, தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைக் காண ஒட்டுமொத்த தமிழகமும் ஆர்வமாய் காத்திருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,338.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.